பாதாள சாக்கடைக்காக தோண்டப்பட்ட பள்ளத்தில் மண் சரிந்து ஒப்பந்த ஊழியர் பலி

திருவொற்றியூர்: மாதவரம் அருகே பாதாள சாக்கடைக்காக தோண்டப்பட்ட பள்ளத்தில் மண் சரிந்து ஒப்பந்த ஊழியர் உயிரிழந்தார். மாதவரம் ரவுண்டானா மேம்பாலம் அருகே, சென்னை குடிநீர் வடிகால் வாரியம் சார்பில், பாதாள சாக்கடை திட்ட விரிவாக்க பணிகள் நடைபெற்று வருகிறது. நேற்று முன்தினம் மாலை, இந்த பகுதியில் பாதாள சாக்கடை தொட்டி அமைப்பதற்காக, பொக்லைன் இயந்திரம் மூலம் ராட்சத பள்ளம் தோண்டப்பட்டது.

வந்தவாசியைச் சேர்ந்த ஏழுமலை (40) உள்பட 5 ஒப்பந்த ஊழியர்கள் இந்த பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது எதிர்பாராத விதமாக திடீரென பள்ளத்தின் பக்கவாட்டில் இருந்து மண் சரிந்தது. இதில், அங்கு பணியில் ஈடுபட்டிருந்த ஏழுமலை மண் சரிவில் சிக்கினார். மற்ற ஊழியர்கள் அதிஷ்டவசமாக உயிர் தப்பினர். பின்னர், சக ஊழியர்கள் மண்ணில் புதைந்த ஏழுமலையை மீட்கும் பணியில் ஈடுபட்டனர்.

சுமார் அரை மணி நேரம் போராட்டத்திற்கு பின் ஏழுமலையை சடலமாக மீட்டனர். தகவலறிந்து வந்த மாதவரம் போலீசார், ஏழுமலை சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், பாதுகாப்பற்ற முறையில் பணி மேற்கொண்டது தொடர்பாக சம்பந்தப்பட்ட ஒப்பந்ததாரர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

The post பாதாள சாக்கடைக்காக தோண்டப்பட்ட பள்ளத்தில் மண் சரிந்து ஒப்பந்த ஊழியர் பலி appeared first on Dinakaran.

Related Stories: