தமிழக அரசு கூடுதல் தலைமை செயலாளர் மற்றும் திட்ட இயக்குநர் தென்காசி ஜவஹர், காஞ்சிபுரம் கலெக்டர் கலைச்செல்வி மோகன் தலைமை வகித்து, தமிழ்நாடு விவசாயிகள் நீர்ப்பாசன அமைப்புகளின் மண்டல அளவிலான கலந்தாய்வு கூட்டத்தை குத்து விளக்கேற்றி தொடங்கி வைத்தனர். கூட்டத்தில் திட்ட இயக்குநர் ஜவகர் பேசியதாவது: இத்திட்டத்தின் நோக்கமான உற்பத்தித்திறனை மேம்படுத்துதல் மற்றும் காலநிலை மாற்றத்திற்கு ஏற்ப விவசாயம் செய்தல், நீர் மேலாண்மையை மேம்படுத்துதல் உள்ளிட்டவைகளை குறிக்கோளாக கொண்டு செயல்படுகிறது.
திட்டத்தில் தமிழ்நாடு அரசின் 7 துறைகள், 3 பல்கலைக்கழகங்கள் இணைந்து செயல்படுகிறது. இத்திட்டத்தில் இதுவரை 13.42 லட்சம் ஏக்கர் பரப்பளவு கொண்டுள்ள விவசாய நிலங்கள் பயன்பெற்று, 14 லட்சத்து 44 ஆயிரத்து 849 விவசாயிகளின் வருமானம் 25 சதவீதம் முதல் 100 சதவீதம் உயர்ந்துள்ளது. மேலும், தமிழ்நாட்டில் இதுவரை 34 மாவட்டங்களில் 5,137 நீர்ப்பாசன சங்கங்கள் அமைக்கப்பட்டுள்ளது. இச்சட்டங்களை திருத்தங்கள் மேற்கொள்ளும் வகையில் முதல்கட்ட கலந்தாய்வு நிறைவு பெற்று, தற்போது இரண்டாம் கட்ட கலந்தாய்வு தொடங்கி உள்ளது.
7 மாவட்டங்களில் இதுபோன்ற கலந்தாய்வுகள் நடந்து நிறைவு பெற்ற நிலையில், ஆலோசனை கூட்டம் காஞ்சிபுரத்தில் நடக்கிறது. காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, வேலூர் உள்ளிட்ட 13 மாவட்டங்களில் நீரினை பயன்படுத்துவோர் சங்கத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட 200க்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் கலந்துகொண்டு கருத்துகளை தெரிவித்தனர். இதுவரை, இந்த சட்டத்திருத்தத்தில் 43 கருத்துகள் பெறப்பட்டுள்ளது. இன்று காஞ்சிபுரத்தில் பெறப்படும் கருத்துகள் என அனைத்தும் ஒருங்கிணைக்கப்பட்டு அரசுக்கு அனுப்பி சட்ட சபையில் திருத்தங்கள் மேற்கொள்ள வழிவகை செய்யப்படும். இவ்வாறு அவர் கூறினார்.
இக்கூட்டத்தில் சிறப்பு தலைமை பொறியாளர் நாகராஜன், நீர்வளத்துறை செயற்பொறியாளர் செல்வகுமார், நீர் மேலாண்மை நிபுணர் கிருஷ்ணன், பொறியாளர் மங்கையர்க்கரசி, உதவி செயற்பொறியாளர்கள் மார்க்கண்டேயன், நீள்முடியோன், நீர்வளத்துறை அதிகாரிகள், விவசாய நீர்ப்பாசன சங்க நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
The post நீர் மேலாண்மை திட்டத்தின் மூலம் விவசாயிகளின் வருமானம் 100 சதவீதமாக அதிகரிப்பு: திட்ட இயக்குநர் ஜவகர் தகவல் appeared first on Dinakaran.