காஞ்சியில் வரும் 31ம்தேதி மாபெரும் புத்தக திருவிழா தொடக்கம்: விளம்பர பதாகை கலெக்டர் வெளியிட்டார்

காஞ்சிபுரம்: காஞ்சிபுரத்தில் மாபெரும் புத்தக திருவிழா-2025 வரும் 31ம்தேதி நடைபெறுவதை முன்னிட்டு, விளம்பர பதாகையை கலெக்டர் கலைச்செல்வி மோகன் வெளியிட, மாவட்ட வருவாய் அலுவலர் வெங்கடேஷ் பெற்றுக்கொண்டார். காஞ்சிபுரம் மாவட்ட மக்கள் மற்றும் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் பயன்பெறும் வகையில், மாவட்ட நிர்வாகம் மற்றும் தென்னிந்திய புத்தக விற்பனையாளர் பதிப்பாளர் சங்கம் மற்றும் பதிப்பாளர் சங்கம் இணைந்து நடத்தும், மூன்றாவது மாபெரும் புத்தக திருவிழா-2025 தொடங்கப்பட உள்ளது.

இந்த புத்தக திருவிழா வரும் 31ம்தேதி முதல் 11 நாட்கள் நடக்கிறது. புத்தக திருவிழா நாள்தோறும் காலை 10 மணிக்கு தொடங்கி இரவு 9 மணி வரை நடைபெற உள்ளது. இதில் தென்னிந்தியா முழுவதிலும் இருந்து பல்வேறு பதிப்பாளர்கள் மற்றும் புத்தக வெளியீட்டாளர்கள் கலந்துகொள்ளும் வகையில் 100க்கும் மேற்பட்ட புத்தக அரங்குகள், 1000க்கும் மேற்பட்ட எழுத்தாளர்களின் படைப்புகள் அமைக்கப்பட்டு லட்சத்திற்கும் மேற்பட்ட புத்தகங்கள் விற்பனைக்கு வைக்கப்பட்ட உள்ளன.

இந்த புத்தக கண்காட்சி அறிவு பசிக்கு மாபெரும் விருந்தாகும், கண்காட்சியில் பல எழுத்தாளர்கள் படைப்புகளும் இடம்பெறுகின்றன. மேலும், தினந்தோறும் காலை முதல் மாலை வரை சிறப்பு அழைப்பாளர்களின் கருத்துரைகள், சிந்தனை தூண்டும் பேச்சாளர்களின் கருத்துரைகள், பட்டிமன்றங்கள், மாணவ, மாணவிகள் பங்குபெறும் கலை நிகழ்ச்சிகள் மற்றும் பல்வேறு கலைநிகழ்ச்சிகளும் நடைபெற உள்ளது.

அதன்படி, காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாக மக்கள் நல்லுறவு மைய கூட்டரங்கில் மாபெரும் புத்தக திருவிழா-2025 விளம்பர பதாகையை கலெக்டர் கலைச்செல்வி மோகன் வெளியிட, மாவட்ட வருவாய் அலுவலர் வெங்கடேஷ் பெற்றுக்கொண்டார். நிகழ்ச்சியில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் ஆர்த்தி, ஆட்சியர் (பயிற்சி) மிருணாளினி, மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) சத்யா, மாவட்ட வழங்கல் அலுவலர் பாலாஜி, அரசு அலுவலர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

The post காஞ்சியில் வரும் 31ம்தேதி மாபெரும் புத்தக திருவிழா தொடக்கம்: விளம்பர பதாகை கலெக்டர் வெளியிட்டார் appeared first on Dinakaran.

Related Stories: