மாமல்லபுரம் கடலில் இழுத்து செல்லப்பட்ட ஆதிபராசக்தி கோயில் பக்தரை 2வது நாளாக தேடும் பணி தீவிரம்

மாமல்லபுரம்: மாமல்லபுரத்தில் கடலில் குளித்த போது ராட்சத அலையில் சிக்கி இழுத்துச் செல்லப்பட்ட ஆதிபராசக்தி கோயில் பக்தரை 2வது நாளாக தேடும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. கர்நாடக மாநிலம் கோலார் மாவட்டம், புராலம் கிராமத்தைச் சேர்ந்த 75 பேர் ஆதிபராசக்தி கோயிலுக்கு மாலை அணிவித்து விரதமிருந்து, மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி கோயிலுக்கு வந்து சாமி தரிசனம் செய்து வழிபட்டனர். பின்னர், 75 பேரும் ஒரு பேருந்து மூலம் நேற்று முன்தினம் காலை 6 மணிக்கு மாமல்லபுரம் வந்து, இங்குள்ள புராதன சின்னங்களை சுற்றிப் பார்த்தனர்.

பின்னர், 9 மணிக்கு கடற்கரைக்கு சென்று கடலில் இறங்கி ஆனந்தமாக குளித்தனர். அப்போது, எதிர்பாராதவிதமாக எழுந்த ராட்சத அலையில் சிக்கி நவீன் (25), ரஞ்சித் (25), முரளி (26) ஆகிய 3 பேரும் நடுக்கடலுக்கு இழுத்துச் செல்லப்பட்டனர். இதை கண்ட அருகில் இருந்த மற்ற பக்தர்கள் கூச்சலிட்டனர். அப்போது, அருகில் இருந்த உயிர் காப்பாளர் கிருஷ்ணராஜ் விரைந்து செயல்பட்டு ரஞ்சித், முரளி ஆகியோரை உயிருடன் மீட்டு கரைக்கு கொண்டு வந்தார். மேலும், நவீன் கடலின் ஆழமான பகுதிக்கு சென்றதால் அவரை மீட்க முடியவில்லை.

இதுகுறித்து, மாமல்லபுரம் போலீசார் மற்றும் தீயணைப்புத் துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. பின்னர், மாமல்லபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலமுருகன், தீயணைப்பு அலுவலர் இன்பராஜ், முதன்மை தீயணைப்பாளர்கள் வெங்கட கிருஷ்ணன், ரமேஷ் பாபு மற்றும் 5 பேர் தீயணைப்பு வீரர்கள் படகு மூலம் நடுக்கடலுக்கு சென்று மாயமான நவீன் உடலை தேடினர். ஆனாலும், கிடைக்கவில்லை.
இந்நிலையில், சென்னை மெரினா கடற்கரை தீயணைப்பு நிலைய அலுவலர் எழில்வேந்தன் தலைமையில் 8 பேர் கொண்ட கமாண்டோ வீரர்கள் பல்வேறு பாதுகாப்பு உபகரணங்களுடன் நேற்று முன்தினம் முழுவதும் கடலில் மூழ்கி தேடினர்.

ஆனாலும், நவீன் குறித்து எந்த தகவலும் கிடைக்கவில்லை. மேலும், அருகில் மீனவ குப்பங்களுக்கு நவீனின் போட்டோவை அனுப்பி எங்கேயோவது உடல் கரை ஒதுங்கியதா என போலீசார் தீவிரமாக விசாரித்தனர். இதுவரை, நவீன் குறித்து எந்த தகவலும் கிடைக்கவில்லை. இதற்கிடையில் ஆழ்கடலில் மூழ்கி தேடும் கமாண்டோ வீரர்கள் மற்றும் மாமல்லபுரம் தீயணைப்பு வீரர்கள் ஒன்றிணைந்து 2வது நாளாக பல்வேறு பாதுகாப்பு உபகரணங்கள் உதவியுடன் படகு மூலம் கடலில் வெகு தூரம் சென்று, நவீன் உடலை தேடுகின்றனர்.

The post மாமல்லபுரம் கடலில் இழுத்து செல்லப்பட்ட ஆதிபராசக்தி கோயில் பக்தரை 2வது நாளாக தேடும் பணி தீவிரம் appeared first on Dinakaran.

Related Stories: