புறநகரில் தனியார் மினி பேருந்து இயக்க அனுமதி மினி பேருந்து கட்டணம் மாற்றி அமைப்பு: மே 1ம் தேதி நடைமுறைக்கு வருகிறது, தமிழக அரசிதழில் வெளியிடப்பட்டது

போரூர்: மினி பேருந்துக்கான கட்டணத்தை மாற்றி அமைத்து, அரசிதழில் வெளியிட்டுள்ளதுடன், சென்னை புறநகர் பகுதிகளில் தனியார் மினி பேருந்துகள் இயக்கவும் தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. தமிழகத்தில் கடந்த 1997ம் ஆண்டு கிராமப்புறங்களுக்கு பேருந்து சேவை வழங்கும் வகையில் மினி பேருந்து திட்டம் தொடங்கப்பட்டது. இந்த மினி பேருந்துகள் 16 கி.மீ. வரை சேவையில்லாத வழித்தடத்திலும், 4 கி.மீ. முக்கிய சாலைகளில் செல்வதற்கும் அனுமதி வழங்கப்பட்டது. தற்போது 4,092 மினி பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன.

இந்நிலையில் மினி பேருந்துகளின் கட்டணத்தை உயர்த்த வேண்டும் எனவும், எல்லையை மாற்றியமைக்க வேண்டும், அதாவது மேலும் சிறிது தூரம் வரை செல்ல அனுமதிக்க வேண்டும் எனவும் தொடர்ச்சியாக மினி பேருந்து உரிமையாளர்கள் கோரிக்கை வைத்து வந்தனர்.  இதை கருத்தில் கொண்டு மினி பேருந்து கட்டணத்தை உயர்த்துவது குறித்து கடந்த ஆண்டு ஆலோசனை நடத்தியது. அதேநேரம், முக்கிய சாலைகளில் மினி பேருந்துகளின் தூரத்தை அதிகப்படுத்தினால், தனியார் பேருந்துகளுக்கு வருவாய் இழப்பு ஏற்படும் என அவற்றின் உரிமையாளர்களும் கருத்து தெரிவித்தனர்.

எனவே, மினி பேருந்துகளின் சேவையை மேம்படுத்தும் வகையில் புதிய விரிவான மினி பேருந்து திட்ட வரைவு அறிக்கையை தமிழக அரசு கடந்த ஆண்டு ஜூன் மாதம் வெளியிட்டது. அதன்படி, போக்குவரத்து சேவை இருக்கும் இடங்களில் மேலும் 4 கி.மீ. கூடுதலாக இயக்கவும், பயணிகளின் தேவைக்கேற்ப சென்னையின் திருவொற்றியூர், மணலி, மாதவரம், அம்பத்தூர், வளசரவாக்கம், ஆலந்தூர், பெருங்குடி, சோழிங்கநல்லூர் மண்டலங்களில் மினி பேருந்துகளை இயக்குவது குறித்து பரிசீலிக்கவும் அனுமதி வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது.

இந்நிலையில் இந்த புதிய விரிவான மினி பேருந்து திட்டம் வரும் மே 1ம் தேதி முதல் நடைமுறைக்கு வரும் என்று தமிழ்நாடு அரசிதழில் நேற்று அறிவித்துள்ளது. இதனுடன் சேர்த்து மினி பேருந்து கட்டணத்தை மாற்றியமைத்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதுவும் வரும் மே 1ம் தேதி நடைமுறைக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டது.

அதன்படி, முதல் 4 கி.மீ. வரை ரூ.4 கட்டணமாகவும், 4 முதல் 6 கி.மீ வரை ரூ.5 கட்டணமாகவும், 6 முதல் 8 கி.மீ. வரை ரூ.6 கட்டணமாகவும், 8 முதல் 10 கி.மீ. வரை ரூ.7 கட்டணமாகவும், 10 முதல் 12 கி.மீ. வரை ரூ.8 கட்டணமாகவும், 12 முதல் 18 கி.மீ. வரை ரூ.9 கட்டணமாகவும், 18 முதல் 20 கி.மீ. வரை ரூ.10 கட்டணமாகவும் நிர்ணயம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.

* வார இறுதி நாட்கள் சிறப்பு பேருந்துகள்
தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் வெளியிட்ட அறிக்கை: வரும் ஜனவரி 31 மற்றும் 1ம் தேதி முகூர்த்தம் மற்றும் வார விடுமுறை நாட்களை முன்னிட்டு சென்னையிலிருந்தும் இதர இடங்களுக்கும் மற்றும் பிற இடங்களிலிருந்தும் கூடுதலான பயணிகள் தமிழகம் முழுவதும் பயணம் மேற்கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனை கருத்தில் கொண்டு தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்கள் தினசரி இயக்கப்படும் பேருந்துகளுடன் கூடுதலாக சிறப்பு பேருந்துகளை இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.

சென்னை கிளாம்பாக்கத்திலிருந்து திருவண்ணாமலை, திருச்சி, கும்பகோணம், மதுரை, திருநெல்வேலி, நாகர்கோவில், கன்னியாகுமரி, தூத்துக்குடி, கோயம்புத்தூர், சேலம், ஈரோடு, திருப்பூர் ஆகிய இடங்களுக்கு 31ம் தேதி 365 பேருந்துகளும், 1ம் தேதி 445 பேருந்துகளும் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. சென்னை கோயம்பேட்டிலிருந்து திருவண்ணாமலை, நாகை, வேளாங்கண்ணி, ஓசூர், பெங்களூரு ஆகிய இடங்களுக்கு 31ம் தேதி வெள்ளிக்கிழமை அன்று 60 பேருந்துகளும், சனிக்கிழமை 60 பேருந்துகளும் மேற்கூறிய இடங்களிலிருந்து இயக்க திட்டமிடப்பட்டுள்ளது மற்றும் பெங்களூரு, திருப்பூர், ஈரோடு மற்றும் கோயம்புத்தூர் ஆகிய இடங்களிலிருந்து பல்வேறு இடங்களுக்கு 250 சிறப்பு பேருந்துகளும் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.

மாதவரத்திலிருந்து 31ம் தேதி 20 பேருந்துகளும் 1ம் தேதி 20 பேருந்துகளும் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகிறது. மேலும், ஞாயிறு அன்று சொந்த ஊர்களில் இருந்து சென்னை மற்றும் பெங்களூரு திரும்ப வசதியாக பயணிகளின் தேவைக்கேற்ப அனைத்து இடங்களிலிருந்தும் சிறப்பு பேருந்துகள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.இந்நிலையில், இந்த வார இறுதியில் வெள்ளிக்கிழமை அன்று 10,625 பயணிகளும் சனிக்கிழமை 6,330 பயணிகளும் மற்றும் ஞாயிறு அன்று 11,130 பயணிகளும் பயணம் மேற்கொள்ள முன்பதிவு செய்துள்ளனர்.

இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளதால் தொலைதூர பயணம் மேற்கொள்ள இருக்கும் பயணிகள் கூட்ட நெரிசலை தவிர்க்கும் பொருட்டு தங்களது பயணத்திற்கு www.tnstc.in மற்றும் மொபைல் செயலி மூலம் முன்பதிவு செய்து பயணிக்க கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.இச்சிறப்பு பேருந்து இயக்கத்தை கண்காணிக்க அனைத்து பேருந்து நிலையங்களிலும் போதிய அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். எனவே, பயணிகள் மேற்கூறிய வசதியை பயன்படுத்தி தங்களது பயணத்தை மேற்கொள்ள இதன் மூலம் தெரிவிக்கப்படுகிறது.

The post புறநகரில் தனியார் மினி பேருந்து இயக்க அனுமதி மினி பேருந்து கட்டணம் மாற்றி அமைப்பு: மே 1ம் தேதி நடைமுறைக்கு வருகிறது, தமிழக அரசிதழில் வெளியிடப்பட்டது appeared first on Dinakaran.

Related Stories: