இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட புதுச்சேரி, தமிழக மீனவர்கள் 13 பேரை மீட்க வேண்டும்: வெளியுறவுத்துறை அமைச்சருக்கு முதல்வர், எம்பி கடிதம்

புதுச்சேரி, ஜன. 29: இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட 13 மீனவர்களை விடுவிக்க கோரி ஒன்றிய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு, புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி, வைத்திலிங்கம் எம்பி ஆகியோர் கடிதம் எழுதியுள்ளனர். ஒன்றிய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி, வைத்திலிங்கம் எம்பி ஆகியோர் எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது: காரைக்கால் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து 26ம் தேதி காரைக்கால், தமிழகத்தை சேர்ந்த மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு சென்றனர். கோடியக்கரைக்கு தென்கிழக்கே 10 நாட்டிக்கல் மைல் தொலைவில் மீன்பிடித்துக் கொண்டிருந்தனர். அங்கு ரோந்து வந்த இலங்கை கடற்படையினர், மீனவர்களின் படகை சுற்றி வளைத்து துப்பாக்கியால் சுட்டனர். இதில் பதற்றமடைந்த மீனவர்கள் உயிர் பிழைப்பதற்காக கடலில் குதித்துள்ளனர்.

அப்போது, 2 மீனவர்களின் கை மற்றும் கால் முறிந்தது. தொடர்ந்து, எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி படகுடன் காரைக்கால் கிளிஞ்சல்மேட்டை சேர்ந்த மாணிக்கவேல், தினேஷ், கார்த்திகேசன், செந்தமிழ், காரைக்கால் பட்டினச்சேரியை சேர்ந்த மைவிழிநாதன், வெற்றிவேல், மயிலாடுதுரையை சேர்ந்த நவேதன், ராஜேந்திரன், ராம்கி, நாகப்பட்டினத்தை சேர்ந்த சசிகுமார், நந்தகுமார், பாபு, குமரன் ஆகிய 13 பேரையும் இலங்கை கடற்படை கைது செய்துள்ளனர். இந்த சம்பவத்தால் காரைக்கால் பகுதி மீனவ மக்கள் அனைவரும் மிகுந்த துயரத்திலும், மன வேதனையிலும் உள்ளனர். இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்ட மீன்பிடி படகுடன் 13 மீனவர்களை விடுவிக்க, ஒன்றிய அமைச்சர் தலையிட்டு தூதரகத்தின் உதவியுடன் இலங்கை அரசை தொடர்பு கொண்டு விடுவிக்க நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

The post இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட புதுச்சேரி, தமிழக மீனவர்கள் 13 பேரை மீட்க வேண்டும்: வெளியுறவுத்துறை அமைச்சருக்கு முதல்வர், எம்பி கடிதம் appeared first on Dinakaran.

Related Stories: