* அரசியல் கட்சிகளின் வரவு-செலவு விவரங்களை வெளியிட்டது தேர்தல் ஆணையம்
புதுடெல்லி: அரசியல் கட்சிகளின் வரவு-செலவு விவரங்களை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. இதன்படி, கடந்த 2023-24 நிதியாண்டில் பாஜவுக்கு ரூ4,340 கோடி வருவாய் கிடைத்துள்ளது. இது அதற்கு முந்தைய ஆண்டைவிட ரூ1980 கோடி அதிகமாகும். அதே காலகட்டத்தில் காங்கிரஸ் கட்சிக்கு மொத்தம் ரூ1225 கோடி வருவாய் கிடைத்துள்ளது. நாடு முழுவதும் கடந்த 2018ம் ஆண்டு நடைமுறைக்கு வந்த தேர்தல் நன்கொடை பத்திரம் திட்டத்தின்படி அரசியல் கட்சிகள் நன்கொடை பெற்றுவந்தன. இந்த நன்கொடை பத்திரங்களை 15 நாட்களுக்குள் பணமாக மாற்ற வேண்டும். இல்லையெனில் தேர்தல் பத்திரங்களின் தொகை பிரதமர் நிவாரண நிதியில் டெபாசிட் செய்யப்படும். தேர்தல் பத்திரம் திட்டத்தில் வெளிப்படைத்தன்மை இல்லை என்று எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி வந்தன.
இதுதொடர்பான வழக்கில் தேர்தல் பத்திர முறை சட்டவிரோதமானது எனக் கூறி அவற்றை ரத்து செய்து உச்ச நீதிமன்றம் கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் தீர்ப்பளித்தது. இந்த நிலையில் ஒவ்வொரு ஆண்டும் தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்த அரசியல் கட்சிகள் தங்களது வரவு செலவு கணக்குகளை தேர்தல் ஆணையத்திடம் சமர்ப்பித்து வருகிறது. அந்த அடிப்படையில் அனைத்து கட்சிகளும் தாக்கல் செய்த கணக்குகளை தேர்தல் ஆணையம் இணையதளத்தில் வெளியிட்டுள்ளது. இதில்பாஜவின் ஆண்டு வருமானம் 2022-23ம் ஆண்டில் ரூ2,360.80 கோடி என்றிருந்த நிலையில், 2023 – 2024ம் ஆண்டில் ரூ4,340.5 கோடியாக அதிகரித்துள்ளது. இது அதற்கு முந்தைய ஆண்டைவிட ரூ1980 கோடி அதிகமாகும். இவற்றில் தேர்தல் பத்திரங்கள் மூலம் 1,685.6 கோடி ரூபாய் கிடைத்துள்ளது.
பாஜவின் 2023-24 தணிக்கை அறிக்கையின்படி 3,967 கோடி ரூபாய் தன்னார்வ அமைப்புகள் மூலமும், 1,685.6 கோடி ரூபாய் தேர்தல் பத்திரங்களிலிருந்தும், 236.3 கோடி ரூபாய் ஆஜிவன் சஹாயோக் நிதியிலிருந்தும், 2,042.7 கோடி ரூபாய் பிற பங்களிப்புகளிலிருந்தும் பெற்றுள்ளது. தனிநபர் நன்கொடையாளர்கள் சுமார் 240 கோடி ரூபாயும், கார்ப்பரேட்டுகள் மூலம் 1,890 கோடி ரூபாயும், நிறுவனங்கள் மற்றும் அமைப்புகளின் மூலம் 101.2 கோடி ரூபாயும், மற்ற வகைகளில் 50 கோடி ரூபாயும் நன்கொடை பெற்றுள்ளது. பாஜவின் செலவினங்களைப் பொறுத்தவரை, கடந்த நிதியாண்டில் பாஜவின் மொத்த செலவு 2,211.7 கோடி ரூபாயாக இருந்தது; அதே 2022-23ம் ஆண்டில் அறிவித்த ரூ1,361.7 கோடியை விட 62% அதிகமாகும். இவற்றில் ரூ1,754 கோடி தேர்தல் மற்றும் பிரசாரத்திற்காக செலவிடப்பட்டது.
பாஜவின் விளம்பரத்திற்காக 591 கோடி ரூபாயும், வேட்பாளர்களுக்கு நிதியுதவிக்காக 191 கோடி ரூபாயும் செலவிடப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தேர்தல் பத்திரங்கள் மூலம் பாஜவுக்கு அடுத்தபடியாக காங்கிரசும் அதிக நன்கொடையை பெற்றிருக்கிறது. 2023-2024ம் நிதியாண்டில் காங்கிரஸ் கட்சிக்கு ரூ452.4 கோடி வருமானம் கிடைத்த நிலையில், 2023-2024ல் கிட்டத்தட்ட 170% உயர்ந்து ரூ1,225 கோடியாக அதிகரித்துள்ளது. தேர்தல் பத்திரங்கள் மூலம் காங்கிரஸ் கட்சி முந்தைய நிதியாண்டை காட்டிலும் 384% அதிகரித்து 2023-2024ல் ரூ828.4 கோடி பெற்றுள்ளது. அதே 2022-2023ல் ரூ171 கோடி பெற்றிருந்தது. செலவின வகையில் 2022-2023ல் ரூ192.55 கோடியை செலவு செய்த காங்கிரஸ், 2023-2024ல் ரூ619.67 கோடியை செலவு செய்துள்ளது. கடந்த 2023-24ம் ஆண்டில் காங்கிரஸ் ஆண்டு செலவு 1,025.2 கோடி ரூபாயாக இருந்தது.
இது 2022-23ம் ஆண்டில் ரூ 467.1 கோடியிலிருந்து 120% அதிகரித்துள்ளது. 2022 செப்டம்பர் 7 முதல் ஜனவரி 30 வரை மேற்கொள்ளப்பட்ட ராகுல்காந்தியின் பாரத் ஜோடோ யாத்திரையில் 71.8 கோடி ரூபாய் செலவிடப்பட்டது. 2024 ஜனவரி 14 முதல் மார்ச் 16 வரை நடைபெற்ற ராகுல் காந்தியின் பாரத் ஜோடோ நியாய் யாத்திரைக்காக 49.6 கோடி ரூபாய் செலவிடப்பட்டது. அனைத்து செலவீனங்கள் போக தற்போது காங்கிரஸ் கட்சியின் வங்கி கணக்கில் ரூ857 கோடி மட்டுமே இருப்பில் உள்ளது. இதே போல் அனைத்து கட்சிகளின் செலவு கணக்கு விவரங்களும் தேர்தல் ஆணைய இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன.
மம்தா கட்சிக்கு ரூ646 கோடி நன்கொடை
2023-2024-க்கான திரிணமுல் காங்கிரஸின் ஆண்டு தணிக்கை அறிக்கையின்படி, மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜியின் கட்சி பெற்ற நன்கொடை
2022-23-ம் ஆண்டில் ரூ333.46 கோடியாக இருந்து, 2023-24-ல் ரூ 646.39 கோடியாக அதிகரித்துள்ளது. இதில்,
95% தேர்தல் பத்திரங்கள் மூலம் பெறப்பட்டவை.
மக்களவை தேர்தல் செலவு எவ்வளவு?
மக்களவை தேர்தலில் பாஜ ரூ1,754.06 கோடி செலவிட்டுள்ளது. காங்கிரஸ் கட்சி ரூ619.67 கோடி செலவிட்டுள்ளது. விமானம் மற்றும் ஹெலிகாப்டர் பயணத்திற்காக மட்டும் பா.ஜ ரூ174 கோடி செலவழித்துள்ளது. காங்கிரஸ் கட்சி விமானம், ஹெலிகாப்டர் பயணத்திற்காக ரூ62.65 கோடி செலவழித்தது.
பணக்கார கட்சி பாஜவிடம் ரூ7113 கோடி கையிருப்பு
ரூ7113 கோடி கையிருப்புடன் மிகப்பெரிய பணக்கார கட்சியாக பா.ஜ முதலிடத்தில் உள்ளது. அதே நேரத்தில், அனைத்து செலவீனங்கள் போக தற்போது காங்கிரஸ் கட்சியின் வங்கி கணக்கில் ரூ857 கோடி மட்டுமே இருப்பில் உள்ளது.
The post கடந்த நிதி ஆண்டில் பாஜவின் ஆண்டு வருவாய் ரூ4,340 கோடி: முந்தைய ஆண்டை விட ரூ1980 கோடி அதிகம்; காங்கிரசுக்கு ரூ1225 கோடி appeared first on Dinakaran.