திராவிட இயக்கங்களின் தலைவர்களில் ஒருவராய் கோவிந்தசாமி இருந்திருக்கிறார். திமுக கொள்கைகளை தொடர்ந்து முழங்கியவர் ஏஜி தான். தமிழ்நாடு பெயர் வைக்க சட்டமன்றத்தில் தொடர்ந்து முழங்கியது அவர்தான். இன்றைக்கு தமிழ்நாட்டிலே உதயசூரியன் சின்னத்தில் முதலில் நின்று வென்றது நம்முடைய ஏஜி. கொள்கை குன்றம் நம்முடைய தந்தை பெரியார் ஏஜியை பற்றி என்ன சொன்னார் என்றால், மாற்றார் கூட குறை சொல்ல முடியாத அளவிற்கு மிக நேர்மையாக ஒழுக்கத்தோடு நாணயத்தோடு நடந்து கொண்டவர் ஏ.கோவிந்தசாமி என்று கூறினார். தந்தை பெரியாரும், கலைஞரும் அவரை பாராட்டி உள்ளனர். ஏஜிவிற்கு திமுக அரசு இன்று மணிமண்டபம் அமைத்து, அதனை திறந்து வைக்கும் பாக்கியம் எனக்கு கிடைத்தது பெருமை.
அடுத்து 21 சமூக நீதி போராளிகளுக்கு நினைவு மண்டபம் திறந்து வைக்கப்பட்டுள்ளது. மிகவும் பிற்படுத்தப்பட்ட வன்னியர் சமுதாய மக்கள் சமூக நீதி உரிமையை கேட்டு அதிமுக ஆட்சி காலத்தில் போராடியபோது காக்கை குருவிகளை சுடுவதை போல சுட்டு தள்ளப்பட்டார்கள். 1987ம் ஆண்டு இது நடந்தது. வன்னியர் சமுதாய மக்களின் கோரிக்கைக்கு அன்றைக்கு அதிமுக அரசு செவி சாய்க்கவில்லை. 1989ம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் அறிக்கையில் கலைஞர், திமுக ஆட்சிக்கு வந்தால் மிகவும் பிற்படுத்தப்பட்ட மக்களின் நியாயமான கோரிக்கையை ஏற்று தனி ஒதுக்கீடு வழங்க வழிவகை செய்வோம் என உறுதி கூறினார்.
சொன்ன மாதிரி கலைஞர், முதலமைச்சர் நாற்காலியில் அமர்ந்து 43வது நாளில் மிகவும் பிற்படுத்தப்பட்டோருக்கான 20 விழுக்காடு ஒதுக்கீடு கொடுத்தது தான் கலைஞரின் வரலாறு, திமுகவின் வரலாறு. 1989ம் ஆண்டு நடந்த அமைச்சரவை கூட்டத்தில், வரலாற்று புகழ் பெற்ற முடிவுதான் மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கும், சீர் மரபினருக்கும் 20 விழுக்காடு தனி இட ஒதுக்கீடு செய்யப்படும் என அறிவிக்கப்பட்டது. இன்றைக்கு கல்வியில், வேலைவாய்ப்பில் மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் பிள்ளைகள் படித்து வேலைக்கு போய் முன்னேறுகிறார்கள். இதற்கு கலைஞர் கொடுத்த இட ஒதுக்கீடு தான் மிக முக்கிய காரணம். இதுமட்டுமா, உயிர் தியாகம் செய்த 21 குடும்பத்தினருக்கு 3 லட்ச ரூபாய் கருணைத்தொகையும், மாதந்தோறும் பென்ஷனும் வழங்கியவர் நம் கலைஞர். இன்றைக்கும் இந்த குடும்பங்கள் மாதம் மூவாயிரம் பெற்றுக்கொண்டு வருகிறார்கள். அவர்களுக்கு சமூகநீதி போராளிகள் பட்டமும் வழங்கப்பட்டது. அப்போது நடைபெற்ற சாலை மறியலில் கைதான 2 லட்சம் பேரின் மீதான வழக்குகள் திரும்ப பெறபட்டது.
அதுமட்டுமல்ல குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்ட வன்னியர் சங்கத்தின் நிர்வாகிகளாகிய அருண்மொழி, பு.தா.இளங்கோவன் இங்கு அமர்ந்திருக்கிறார்கள். வாழைச்செல்வன், ஆரணி ராஜேந்திரன், தாராசிங் ஆகிய 5 பேர் மீதான வழக்கும் திரும்ப பெறப்பட்டது. அதேபோல வாழப்பாடி ராமமூர்த்தி, வன்னிய அடிகளாரும், வன்னியர் கூட்டமைப்பினுடைய நிறுவனத்தலைவர் சி.ராமமூர்த்தி ஆகியோர் முதலமைச்சர் கலைஞரை சந்தித்து எஸ்.எஸ்.ராமசாமி படையாச்சிக்கு சென்னையில் சிலை வைக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர். அப்போது நான் சென்னை மேயராக இருந்தேன். எங்கிட்ட தான் அனுப்பி வைத்தார் கலைஞர். அதன்படி சென்னையில் சிலை வைக்கப்பட்டது.
வன்னியர் பொது சொத்து வாரியம் அமைக்க 2009ம் ஆண்டு அதற்கான ஆணை பிறப்பித்ததும் கழக அரசு தான். 2021ம் ஆண்டு 6வது முறையாக கழகம் அரசு ஆட்சி அமைந்த பிறகு, 1987-ல் போராட்டத்தில் துப்பாக்கி சூட்டுக்கு பலியான 21 சமூக நீதி போராளிகளுக்்கு 4 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மணிமண்டபம் அமைக்கப்படும் என்று நான் அறிவித்தேன். சொன்னபடியே மணிமண்டபம் கட்டி திறந்து வைத்துள்ளேன்.
திமுக அரசை பொறுத்தவரை பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட, பட்டியலின, பழங்குடியின, விளிம்புநிலை மக்களின் முன்னேற்றத்திற்காக தங்களை முழுமையாக ஒப்படைத்துவிட்ட சமூக நீதிக்கான இயக்கம். திராவிட இயக்கம் தோன்றியதே சமூக நீதியை நிலைநாட்டுவதற்காக தான். 1921ம் ஆண்டு எல்லா சமூகத்திற்கும் இட ஒதுக்கீடு வழங்கியது நீதிகட்சி ஆட்சி. இந்த இடஒதுக்கீட்டு முறைக்கு உச்ச நீதிமன்றத்தால் ஆபத்து வந்தபோது கடுமையாக போராடி 1950ம் ஆண்டு, முதல் அரசியல் சட்டத் திருத்தத்தை செய்ய வைத்தது தந்தை பெரியாரும், பேரறிஞர் அண்ணாவும்.
அதுமட்டுமல்ல திமுக ஆட்சியில் தான் பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு 25 விழுக்காடு இட ஒதுக்கீட்டை, 35 விழுக்காடாக உயர்த்தினோம். பட்டியலின இட ஒதுக்கீட்டை 16 இட ஒதுக்கீட்டை, 18 விழுக்காடாக உயர்த்தினோம். பழங்குடியினருக்கு ஒரு விழுக்காடு தனியாக இட ஒதுக்கீடு வழங்கினோம். பின்னர் மிகவும் பிற்படுத்தப்பட்டோருக்கான 20 விழுக்காட்டை பிரித்து வன்னியர் சமுதாயத்தினரில் மிகவும் பிற்படுத்தப்பட்டோருக்கான இடஒதுக்கீட்டை அறிவித்து தனி இட ஒதுக்கீடு கொடுத்தோம். இஸ்லாமியர்களுக்கு 3.5 விழுக்காடு கொடுத்தோம். இட ஒதுக்கீட்டிற்காக போராடுவது திமுக தான்.
எல்லாருக்கும் எல்லாம் என்ற திராவிட மாடல் ஆட்சியை நடத்திக்கொண்டிருக்கிறோம். எந்த சூழ்நிலையிலும் சமரசம் இல்லாமல் செயல்படுத்தி காட்டுவது தான் இந்த முத்துவேல் கருணாநிதி ஸ்டாலினுடைய வாழ்க்கை பயணம். என்னை பொருத்துவரை என்னை நான் சமரசப்படுத்தி முன்னிலைப்படுத்திக் கொள்வதில்லை. தமிழ்நாட்டை முன்னிலை படுத்தித்தான் செயல்படுத்திக்கொண்டிருக்கிறேன். அதனால் தான் நமது ஆட்சியை திராவிட மாடல் ஆட்சி என்று சொல்கிறோம். இது ஸ்டாலின் மாடல் ஆட்சி என்று கூறி தற்பெருமை தேடிக்கொள்ள விரும்பவில்லை. பல்வேறு விமர்சனங்கள் வந்தாலும் திராவிட மாடல் ஆட்சி என்று தான் நான் சொல்வேன்.
திராவிடம் தான் நம் தாய் நிலத்துக்கு தமிழ்நாடு என பெயர் சூட்டியது. திராவிடம்தான் தமிழுக்கு செம்மொழித் தகுதியை பெற்றுத் தந்தது. திராவிடம்தான் பட்டியலின, பழங்குடி, பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு இடஒதுக்கீடு உரிமையை பெற்றுத் தந்தது. திராவிடம்தான் பெண் விடுதலைக்காக போராடியது, பெண்களை படிக்க வைத்தது. திராவிடம்தான் ஏராளமான கல்லூரிகள், கல்லூரிகள், பல்கலை.கள், நூலகங்கள், மருத்துவமனைகளை உருவாக்கியது. திராவிடம்தான் நவீன தமிழ்நாட்டை உருவாக்கியது. மொத்தத்தில் திராவிடம் தான் நவீன தமிழ்நாட்டை உருவாக்கியது. இனி இது தொடரும், தொடரும். தமிழ்நாடு இன்றைக்கு எல்லா துறையிலும் உன்னதமான நிலையில் இருப்பதற்கு காரணம் திராவிட மாடல் தான். இவ்வாறு அவர் பேசினார்.
The post தமிழ்நாடு உன்னதமான நிலையில் இருப்பதற்கு காரணம் திராவிட மாடல் தான்: முதல்வர் மு.க. ஸ்டாலின் பெருமிதம் appeared first on Dinakaran.