* 15 ஆண்டுகள் கோலோச்சியவர்கள் சிக்கியது எப்படி?
நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களில் கடலோர பகுதிகளில் காணப்படும் தாதுமணல், சில நிறுவனங்களுக்கு கோடிக்கணக்கான வருவாயை அள்ளித்தரும் அட்சயபாத்திரமாக இதுவரை இருந்து வந்துள்ளது. இந்த தாது மணலில் கதிரியக்க தன்மை கொண்ட இலுமனைட், கார்னெட், ரூடைல், சிலிகான், மோனோசைட், டைட்டானியம் டை ஆக்சைடு போன்ற விலை மதிப்பில்லாத தாதுக்கள் உள்ளன. அணுசக்திக்கு தேவையான இயற்கையான கதிரியக்க தனிமங்கள் இந்த தாது மணலில் உள்ளன. தமிழக கடற்கரை பகுதிகளில் கிடைக்கும் இத்தகைய தாதுமணலுக்கு உலக அளவில் கூடுதல் மதிப்புள்ளது. கோடி, கோடியாக லாபம் கொட்டும் இந்த தாது மணலை வெளிநாடுகளுக்கு விற்பனை செய்வதில் பல்வேறு முறைகேடுகள் நடந்ததாக புகார்கள் எழுந்தன.
கடற்கரையோரங்களில் நடந்த இந்த இயற்கை வள சுரண்டல் குறித்து நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களில் பல்வேறு அமைப்புகளும் போராட்டத்தில் குதித்தன. கடந்த 2002ல் தொடங்கி 2013 வரை நெல்லை, தூத்துக்குடி கடலோர பகுதிகளில் தாது மணல் அதிக அளவில் சட்ட விரோதமாக கடத்தப்பட்டதாக புகார்கள் எழுந்தன. தாதுமணல் அள்ளுவதில் கைதேர்ந்த நிறுவனமான வி.வி.மினரல்சும், அதை நடத்திய வி.வைகுண்டராஜனும் தென்னகத்தில் கடற்கரைகளை வளைத்து ஒரு சாம்ராஜ்யத்தையே நடத்தி வந்தனர். அதிலும் அதிமுக ஆட்சிக்காலங்களில் அவர்கள் கை நீட்டுபவரே வேட்பாளராக மாறும் அளவுக்கு உயர்ந்தனர்.
நெல்லை மாவட்டம், திசையன்விளை அருகே கீரைக்காரன்தட்ைட தலைமை அலுவலகமாக கொண்டு செயல்பட்ட வி.வி.மினரல்ஸ் நிறுவனத்தை வி.வைகுண்டராஜன் மற்றும் அவரது சகோதரர்கள் நடத்தினர். நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களில் கடற்கரை பகுதிகளில் கிடைக்கும் தாது மணலை எடுத்து சுத்திகரிப்பு செய்து அதில் கிடைக்கும் கார்னெட், ரூட்டைல், இலுமனைட், சிர்க்கான் போன்ற தாதுக்களை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்து கோடிக்கணக்கில் பணம் சம்பாதித்தனர்.
இந்நிலையில் 2012ல் தூத்துக்குடி மாவட்டம் வேம்பார் பகுதியில் அளவுக்கு மீறி தாது மணல் அள்ளப்பட்டதை அப்போதைய தூத்துக்குடி கலெக்டர் ஆஷிஸ்குமார் நேரடியாக ஆய்வு செய்து கண்டுபிடித்தார். இந்த விவகாரத்தில் கலெக்டர் உடனடியாக மாற்றப்பட்ட போதிலும் 25 ஆண்டுகளாக மணல் பிசினசில் கோலோச்சி வந்த வைகுண்டராஜனின் சாம்ராஜ்யம் அப்போதிருந்து லேசாக சரிவை சந்திக்க தொடங்கியது. இந்த விவகாரம் பூதாகரமாக வெடித்த நிலையில் 2013 செப்டம்பர் 17ம் தேதி தாது மணல் அள்ள தடை விதித்து தமிழக அரசு உத்தரவிட்டது.
அந்த அறிக்கையில், அனுமதிக்கப்பட்ட அளவை விட கூடுதலாக தாது மணல் அள்ளியதும், ஏற்றுமதியை குறைத்து காட்டி பல லட்சம் டன் தாது மணல் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டதும் தெரியவந்தது. அதன் மூலம் பல கோடி ரூபாய் அரசுக்கு இழப்பு ஏற்படுத்தியதாக விசாரணை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது. இதற்கு பிறகும் தடையை மீறி விவி மினரல்ஸ் நிறுவனம் தாது மணலை சட்டவிரோதமாக ஏற்றுமதி செய்தே வந்தது. இந்த சட்டவிரோத ஏற்றுமதி நெல்லை கலெக்டராக கருணாகரன் இருந்த போது 2017ல் கண்டுபிடிக்கப்பட்டது. தாது மணல் எடுக்க தடை விதிக்கப்பட்ட நிலையில் விவி மினரல்ஸ் நிறுவனம் இரும்பு கம்பி உற்பத்தி, சிமென்ட் ஆலை, பெயின்ட், வணிக நிறுவனங்கள் உள்ளிட்ட பிற துறைகளில் கால் பதித்தது.
இந்நிலையில் விவி மினரல்ஸ் நிறுவனம் தாது மணல் ஏற்றுமதியில் பல கோடி ரூபாய் வரி ஏய்ப்பு செய்ததாக வருமான வரித்துறைக்கு புகார்கள் சென்றன. இதையடுத்து மும்பை வருமான வரித்துறையினர் நெல்லை மாவட்டம், கீரைக்காரன்தட்டில் உள்ள விவி மினரல்ஸ் தலைமை அலுவலகம், வல்லவன் விளை, ஆவுடையாள்புரம், உவரி, விவி பொறியியல் கல்லூரி, விவி அரிசி ஆலை, தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் தாலுகா, அரசூர் கிராமத்தில் அமைந்துள்ள வைகுண்டராஜன் தம்பி சுகுமாருக்கு சொந்தமான பிஎம்சி ெதாழிற்சாலை, கீரைக்காரன்தட்டில் உள்ள வைகுண்டராஜன், சுகுமார், சந்திரேசன், ஜெகதீசன் ஆகியோருக்கு சொந்தமான வீடுகள், சென்னையில் விவி மினரல்ஸ் நிறுவனத்திற்கு சொந்தமான அலுவலகங்கள் உள்ளிட்ட 100 இடங்களில் சோதனை நடத்தியதில் பல்வேறு முறைகேடுகள் வெளிவந்தன.
இதுஒருபுறமிருக்க தென்மாவட்டங்களை புரட்டி போட்ட தாதுமணல் கொள்ளை விவகாரம் தொடர்பாக 2015ல் சென்னை ஐகோர்ட் தாமாக முன்வந்து விசாரணைக்கு வழக்கை எடுத்துக் கொண்டது. இந்த வழக்கில் தமிழக அரசின் தொழில்துறை சார்பில் தாக்கல் செய்யப்பட்ட பதில் மனுவில், ‘தாது மணல் எடுப்பதற்கு 7 நிறுவனங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டிருப்பதாகவும், இதில் நெல்லையில் 52 உரிமங்கள், தூத்துக்குடியில் 6, குமரியில் 6 என மொத்தம் 64 உரிமங்கள் வழங்கப்ப்பட்டதாகவும், சட்டவிரோதமாக தாதுமணல் எடுப்பது தொடர்பான புகார்களின் அடிப்படையில், 2013 முதல் அதற்கு தடை விதிக்கப்பட்டிருப்பதாகவும்’ தெரிவிக்கப்பட்டது.
தடை விதிக்கும் முன்பும், தடை விதித்த பின்பும் சட்டவிரோதமாக எடுக்கப்பட்ட தாது மணல் இழப்பை ஈடுகட்டும் வகையில் ரூ.5,832 கோடியை தனியார் தாது மணல் ஏற்றுமதியாளர்களிடமிருந்து வசூலிக்க முடிவு செய்யப்பட்டது. நெல்லை மாவட்டத்தில் கூடங்குளம், இடிந்தகரை, திசையன்விளை சுற்றுவட்டாரங்கள், கூத்தங்குழி பகுதிகளில் 10 ஆண்டுகளில் இலுமினைட், சிர்கான், கார்னெட் உள்ளிட்ட தாது மணல்கள் 80 லட்சம் டன்னுக்கு மேலாக எடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில் ஐகோர்ட்டில் நடந்து வந்த வழக்கும் கடந்த இரு மாதங்களாக சூடுபிடிக்க தொடங்கியுள்ளது. கடந்த டிசம்பர் மாதம் தாது மணல் விவகாரம் தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம், நீதிபதி ஜோதிராமன் அமர்வில் விசாரணை நடந்தது.
* ரூ.1 லட்சம் கோடி சுருட்டல்
நில ஆராய்ச்சி நிபுணர் விக்டர் ராஜமாணிக்கம் சென்னை உயர் நீதிமன்றத்தில் கடந்த 2015 ஜனவரி 23ம் தேதி ஒரு பொதுநல வழக்கை தொடர்ந்தார். அந்த மனுவில், சட்டவிரோதமாக தாது மணல் எடுப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும். இந்த மணல் மோசடி குறித்து விசாரணை நடந்த சிறப்பு விசாரணை குழுவை அமைக்க வேண்டும் என்று கூறியிருந்தார். இதுகுறித்து விக்டர் ராஜமாணிக்கம் அப்போது கூறுகையில், ‘1980 முதல் இந்த மணல் கொள்ளையை எதிர்த்து போராடி வருகிறோம். மணல் மாபியாக்கள் கடற்கரை முழுவதையும் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருந்தனர். எங்களை கடற்கரை பக்கம் நடமாடவே விட மாட்டார்கள். நான் தாக்கல் செய்த மனுவில், தென் தமிழக கடற்கரை பகுதிகளில் சுமார் ரூ.1 லட்சம் கோடி மதிப்பு மணல் சுரண்டப்பட்டு வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது. இங்குள்ள மணலில் கனிம வளம் அதிகம், அதற்காகத்தான் இந்த மணல் கொள்ளை நடக்கிறது’ என்றார்.
* வி.வி.மினரல்சுக்கு 16 குவாரிகள்
16 தாது மணல் குவாரிகள் வி.வி.மினரல்ஸ் என்ற ஒரே நிறுவத்துக்கு தரப்பட்டது. தனி சாம்ராஜ்யம் நடத்திய வி.வி.மினரல்ஸ் தாது மணல் கொள்ளை ஆதிக்கம் வெளிநாடுகளுக்கு சட்டவிரோதமாக ஏற்றுமதி செய்து பல ஆயிரம் கோடி சம்பாதித்தது. அதிமுக ஆட்சி காலத்தில் தனி ராஜாவாக செயல்பட்ட வி.வி.மினரல்ஸ் உரிமையாளர் வைகுண்டராஜன் அண்ட் கோ, அதிகாரிகள் கையில் போட்டு கொண்டு தாது மணல் கொள்ளையில் கோலோச்சினர். குறிப்பாக தூத்துக்குடி துறைமுகம் வழியாக குறைந்த அளவி ஏற்றுமதிக்கு அனுமதி பெற்று கப்பல் மூலம் சட்டவிரோதமாக அதிகளவு தாது மணல் ஏற்றுமதி செய்யப்பட்டது.
தாதுக்கள் அளவு
இல்மனைட் 20%
கார்னெட் 55%
ரூடைல் 6%
சிர்கான் 2%
மோனசைட் 1%
சில்லுமேனைட் 10%
தாது மணல்களில் அதிக விலை மோனோசைட் என்ற பொருளுக்கு உள்ளது. இருப்பினும் இதில் கதிர்வீச்சு அதிக என்பதாலும், அணுகுண்டு தயாரிக்க பயன்படுத்தலாம் என்பதாலும் இதை தனியார் நிறுவனங்கள் ஏற்றுமதி செய்யக்கூடாது என்ற தடை உள்ளது.
* விவி மினரல்ஸ் நிறுவனம் தாது மணல் ஏற்றுமதியில் பல கோடி ரூபாய் வரி ஏய்ப்பு செய்ததாக வருமான வரித்துறைக்கு புகார்கள் சென்றன. இதையடுத்து மும்பை வருமான வரித்துறையினர் நெல்லை மாவட்டம், கீரைக்காரன்தட்டில் உள்ள விவி மினரல்ஸ் தலைமை அலுவலகம், வைகுண்டராஜன், அவரது சசோதரர்கள் சுகுமார், சந்திரேசன், ஜெகதீசன் ஆகியோருக்கு சொந்தமான வீடுகள், அலுவலகங்கள் சென்னையில் விவி மினரல்ஸ் நிறுவனத்திற்கு சொந்தமான அலுவலகங்கள் உள்ளிட்ட 100 இடங்களில் சோதனை நடத்தியதில் பல்வேறு முறைகேடுகள் வெளிவந்தன.
* தென்மாவட்டங்களை புரட்டி போட்ட தாதுமணல் கொள்ளை விவகாரம் தொடர்பாக 2015ல் சென்னை ஐகோர்ட் தாமாக முன்வந்து விசாரணைக்கு வழக்கை எடுத்துக் கொண்டது. தடை விதிக்கும் முன்பும், தடை விதித்த பின்பும் சட்டவிரோதமாக எடுக்கப்பட்ட தாது மணல் இழப்பை ஈடுகட்டும் வகையில் ரூ.5,832 கோடியை தனியார் தாது மணல் ஏற்றுமதியாளர்களிடமிருந்து வசூலிக்க முடிவு செய்யப்பட்டது.
ரூ.96,120 கோடி அரசுக்கு இழப்பு
தாது பொருள் அளவு மதிப்பு
இல்மனைட் 60,00,000 டன் ரூ.9000 கோடி
கார்னெட் 2,40,00,000 டன் ரூ.24,000 கோடி
ரூடைல் 12,00,000 டன் ரூ.17,760 கோடி
சிர்கான் 12,00,000 டன் ரூ.17,040 கோடி
மோனோசைட் 24,00,000 டன் ரூ.24,000 கோடி
சில்லுமேனைட் 36,00,000 டன் ரூ.4,320 கோடி
மொத்தம் ரூ.96,120 கோடி அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டதாக முன்னாள் கலெக்டர் வி.சுந்தரம் தெரிவித்திருந்தார்.
தாது மணல் அள்ளுவதற்கு தமிழக அரசு 2013 செப்.17ம் தேதி தடை விதித்தது. ஆனால், செப்.2013 முதல் நவம்பர் 2016 வரை வி.வி.மினரல்ஸ் நிறுவனம் 9.65 லட்சம் டன், டிரான்ஸ்வேர்ல்டு கார்னட் நிறுவனம் 1.06 லட்சம் டன், பீச் மினரல் கம்பெனி 3.37 லட்சம் டன், ஐஓஜிஎஸ் நிறுவனம் 1.06 லட்சம் டன், ஐஎம்சி நிறுவனம் 3.11 லட்சம் டன் தாது மணலை சட்டவிரோதமாக ஏற்றுமதி செய்ததை அப்போதைய ெநல்லை கலெக்டர் கருணாகரன் அம்பலப்படுத்தியது குறிப்பிடத்தக்கது.
* அரிய கனிமங்களுக்காக தாது மணல் கொள்ளை
பெரும்பாலும் கடற்கரையில் இருந்து எடுக்கப்படும் தாது மணலில் இருந்து பிரிக்கப்படும் கனிமம்தான் அணுசக்தி உற்பத்தி செய்ய பயன்படுகிறது. உலகின் மூன்றில் 2 பங்கு அரிய வகை கனிமமான மோனோசைட் தேவையை இந்தியாவின் தெற்கு, கிழக்கு கடற்கரையில் இருந்துதான் கிடைக்கிறது. மணலில் 2 சதவீதத்தில் இருந்து 5% வரை மோனோசைட் இருக்கிறது. இதில் இருந்து கதிரியக்க கனிமங்களான தோரியம், யுரேனியம் பெறப்படுகிறது. மற்ற அரிய வகை கனிமங்களான கார்னெட், இல்மனைட், ரூடைல், சிர்கான், சில்லுமேனைட் ஆகியவற்றுடன் தாது மணலில் மோனோசைட் கலந்திருக்கும். இந்த அரிய வகை கனிமங்கள் ராணுவத்திலும், தொலைத்தொடர்புகான கண்ணாடி இழை தயாரிப்பதிலும், விண்வெளி, அனுக்கரு ஆராய்ச்சி துறையிலும் பயன்படுத்தப்படுகின்றன. இவை தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா, ஒடிசா கடற்கரையில் கிடைக்கிறது. ஆனால் தமிழ்நாடு கடற்கரையில் அதிக அளவில் இந்த கனிமங்களுக்காக தாது மணல் கொள்ளை நடக்கிறது.
* 40 கி.மீ கடற்கரை, 2300 ஏக்கர் நிலம் வி.வி.மினரல்ஸ் குத்தகை
40 கிலோ மீட்டர் நீளமான கடற்கரை மற்றும் 2300 ஏக்கர் நிலத்தை தங்கள் கட்டுப்பாட்டிற்கு வைத்திருந்த ஒரே நிறுவனம் வி.வி.மினரல்ஸ். ஆண்டுக்கு 100 ஏக்கருக்கு ரூ.16, 50 ஏக்கருக்கு ரூ.9 வீதம் 40 ஆண்டு குத்தகைக்கு பெற்றிருந்தது இந்த நிறுவனம். இதில் இருந்து ஆண்டுக்கு 1.50 லட்சம் டன் கார்னெட், 2.25 லட்சம் டன் இல்மனைட், 12,00 டன் சிர்கான், 5000 டன் ரூடைல் கனிமங்களை ஏற்றுமதி செய்து உள்ளது. உலம் முழுவதும் உள்ள நிறுவனங்களுக்கு இல்மனைட் மொத்த விற்பனையாளராக செயல்படுவது ஆஸ்திரேலியன் மினரல்ஸ் அண்ட் டிரேடிங் லிமிடெட். இந்த ஆஸ்திரேலிய நிறுவனத்துக்கு வி.வி.மினரல்ஸ் நிறுவனமே மெயில் இல்மனைட் சப்ளயர் என்பது குறிப்பிடத்தக்கது. இதை தவிர ரூடைல் உட்பட கணக்கில் வராத கனிமங்களும் உள்ளன. இந்த நிறுவன தங்கள் இணையதளத்தில் குறிப்பிட்டிருக்கும் ஏற்றுமதி அளவை விட குறைந்த அளவே அரசிடம் கணக்கு காட்டியுள்ளதாக கூறப்படுகிறது.
* அதிமுக ஆட்சிக்காலத்தில் அதிகாரிகளும் உடந்தை
தமிழக கடற்கரை பகுதிகளில் இருந்து தாது மணல் எடுக்க கடந்த 8.8.2013 தமிழக அரசு தடை விதித்தது. இந்நிலையில், நெல்லை மாவட்டம், திசையன்விளையைச் சேர்ந்த வி.வி. மினரல்ஸ் நிறுவனம், மாவட்ட ஆட்சியர் வழங்கியது போல் போலி சான்றிதழை சமர்ப்பித்து, தூத்துக்குடி வ.உ.சி. துறைமுகம் வழியாக, துபாய்க்கு 420 டன் தாது மணலை ஏற்றுமதி செய்ய முயன்றது வெளிச்சத்துக்கு வந்தது. இச்சான்றிதழை அளித்த, தூத்துக்குடி மாவட்ட கனிமவளத் துறை உதவி இயக்குநர் கிருஷ்ணமோகன் தற்காலிக பணி நீக்கம் செய்யப்பட்டார். மேலும், கடத்த முயன்ற 420 மெட்ரிக் டன் தாது மணல் பறிமுதல் செய்யப்பட்டது. அதிமுக ஆட்சிக்காலத்தில் பல அதிகாரிகளை தனது கைப்பாவையாக வைத்து கொண்டு வி.வி.மினரல்ஸ் நிறுவனம் தாதுமணலை போலி சான்றுகள் மூலம் கடத்தியது குறிப்பிடத்தக்கது.
* விதிமுறை மீறல்கள் பலவகை
நெல்லை, தூத்துக்குடி, குமரி மாவட்டங்களில் காணப்படும் தாதுமணல் நிறுவனங்கள், டன் கணக்கில் மணலை அள்ளி விற்று கொள்ளை லாபம் சம்பாதிப்பதோடு, சட்ட விதிமுறைகளை காலில் போட்டு மிதிப்பதிலும் கை தேர்ந்தவையாகும். கார்னெட் மணலை சுத்திகரிக்கும்போது வரும் மோனோசைட்டை திரும்ப அரசிடம் ஒப்படைப்பதில்லை. அட்டாமிக் எனர்ஜி சட்டம் 1962 மற்றும் அட்டாமிக் எனர்ஜி பயன்படுத்துதல் சட்டம் 1984க்கு முரணாகவே செயல்பட்டு வருகின்றன. மோனோசைட் போன்ற கதிர்வீச்சுக் கனிமங்களைப் பிரித்தெடுக்க அணுசக்தி துறையிடம் முறையான அனுமதி பெறுவதே கிடையாது.
மோனோசைட்டில் தோரியம் உள்ளதால் மோனோசைட் கையாளப்பட்டது தொடர்பான ஆண்டறிக்கை அணுசக்தித்துறைக்கு ஒவ்வொரு ஆண்டும் அளிக்க வேண்டும். ஆனால் இவ்வறிக்கையை தாது மணல் கொள்ளையில் ஈடுபடும் நிறுவனங்கள் கொடுப்பதே கிடையாது. ஒன்றிய அரசின் சுற்றுச்சூழல், வனத்துறை மற்றும் கடலோர ஒழுங்குமுறை ஆணையத்திடம் கார்னெட் நிறுவனங்கள் அனுமதி பெறுவதும் கிடையாது. ஏற்றுமதிக்கு முன்பாக அணுசக்தித் துறையின் கனிமப்பிரிவிடம் மாதிரிகளை அனுப்பி மோனோசைட் இல்லை என்ற சான்றிதழ் பெற வேண்டும். அவ்வாறு பெறுவதும் கிடையாது. தமிழக அரசு கடற்கரையோரங்களில் வைத்திருக்கும் சவுக்கு மரங்களையும் பலமுறை அழித்துள்ளனர்.
* பாலைவனமாக மாறிய கடற்கரைகள்
நெல்லை, தூத்துக்குடி, குமரி மாவட்ட கடற்கரைகள் எப்போதுமே இயற்கை சூழலுக்கும், கனிம வளத்திற்கும் பெயர் பெற்றவையாகும். தூத்துக்குடி, மணப்பாடு, முட்டம் உள்ளிட்ட கடலோர பகுதிகளில் பல தமிழ் சினிமாக்கள் எடுக்கப்பட்டுள்ளன. இந்த கடலோர கிராமங்கள் இயற்கை வளங்களை இழந்து, அழிந்துபோவதற்கும், நிலத்தடி நீர் இன்றி பாலைவனமாக மாறுவதற்கும் தாது மணல் நிறுவனங்களே காரணமாகும். தாது மணலை தோண்டி எடுக்கும் நிறுவனங்கள் மரங்களை மொட்டை அடித்ததோடு, தங்கள் போக்குவரத்துக்கு தடையாக இருக்கும் பனை மரங்களை கூட வேரோடு வெட்டி எடுத்த சம்பவங்களும் உண்டு.
The post சாம்ராஜ்யம் நடத்திய வி.வி. மினரல்ஸ் தாதுமணல் கொள்ளை; தாதுமணல் கொள்ளை; ரூ.3,528 கோடி அபராதம் விதித்த கலெக்டர் appeared first on Dinakaran.
