அரிய வகை ஆலிவ் ரெட்லி ஆமை இனத்தில் முட்டைகளில் இருந்து வெளிவரும் ஆயிரம் குஞ்சுகளில் ஒரே ஒரு ஆமை குஞ்சு மட்டும்தான் பிழைத்து உயிர் வாழும். இத்தகைய ஆலிவ் ரெட்லி ஆமைகள் முட்டையிட்டு குஞ்சு பொறிக்க டிசம்பர், ஜனவரி மாதங்களில் தமிழக கடற்பகுதிக்கு வருவது வழக்கம்.ஆனால், கடந்த சில நாட்களாக ஆலிவ் ரெட்லி ஆமைகள் இறந்து கரை ஒதுங்கி வருகின்றன. நீலாங்கரையில் இருந்து கோவளம் வரை ஏராளமான ஆமைகள் இறந்து கரையோரம் உள்ளது. கடந்த 20 ஆண்டுகளில் அதிகப்படியான ஆமைகள் உயிரிழப்பு இந்த 15 நாட்களில் நடைபெற்று இருப்பதாக சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.
ராமநாதபுரம் மாவட்டத்தினை ஒட்டியுள்ள மன்னார் வளைகுடா கடல் பவளப்பாறைகள், கடல் பசு, கடல் ஆமை, கடல் குதிரை என பல்வேறு வகையான அரியவகை உயிரினங்கள் உள்ளன. இவற்றினை வனத்துறை, மீனவர்கள், தன்னார்வலர்கள் அரிய வகை உயிரினங்களை அழிய விடாமல் பாதுகாத்து வருகின்றனர். தமிழக கடற்கரையானது 1076 கிலோமீட்டர் நீளமுடைய பகுதியாகும். இப்பகுதியில் அரியவகை கடல்வாழ் உயிரினங்கள் வாழ்ந்து வருகின்றன. இதில் ஆலிவ் ரெட்லி, லெதர்பேக், ஹாக்ஸ்பில் ஆமை, பச்சை ஆமை, லாக்கர் ஹெட் என 5 வகையான ஆமை இனங்கள் உள்ளன. இவை சுற்றுச்சூழல் சமன்பாட்டிற்கும், மீன்வளத்தினை அழிக்கும் ஜெல்லி மீன்களை உட்கொண்டும் மீன்வளத்தினை காக்க முக்கிய பங்காற்றி வருகிறது.
கடந்த 2 வாரங்களாக, ஆலிவ் ரெட்லி கடலாமைகள் அதிக எண்ணிக்கையில் சென்னை கடற்கரையில் இறந்ததால், பாதிக்கப்படக்கூடிய கடல் ஊர்வனவற்றுக்கான போதிய பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் தெரிவித்து வருகின்றனர். ஆலிவ் ரெட்லி ஆமைகள் இனப்பெருக்கம் செய்வதற்காக செப்டம்பர்-அக்டோபர் மாதங்களில் தமிழ்நாட்டின் கடற்கரைக்கு அருகில் வருகின்றன, மேலும் கூடு கட்டும் காலம் நவம்பர் இறுதியில் தொடங்கி மார்ச் மாதத்தில் முடிவடைகிறது. கூடு கட்டும் பருவத்தில் ஏற்படும் இறப்புகள் அசாதாரணமானது அல்ல என்றாலும் கூட, கூடு கட்டும் காலத்தின் ஆரம்பத்தில் அதிக எண்ணிக்கையிலான இறப்புகள் வேதனையான விஷயமாக உள்ளது.
இது குறித்து மாநில வனத்துறை அதிகாரி தெரிவிக்கையில்: சென்னை மற்றும் காஞ்சிபுரம் மாவட்டம் முழுவதும் சுமார் 350 ஆமைகள் இறந்து கரை ஒதுங்கியுள்ளது. நீலாங்கரை, பெசன்ட் நகர், கோவளம் உள்ளிட்ட சென்னை மற்றும் காஞ்சிபுரம் மாவட்ட பகுதிகளில் ஆமைகள் இறந்துள்ளது.இறப்புகள் குறித்த சரியான தரவுகளை இன்னும் சேகரித்து வருகிறோம் . சென்னைக்கு வடக்கே திருவள்ளுவர் மாவட்டத்தில் உள்ள புலிக்காட்டில் இருந்தும் இறப்புகள் பதிவாகியுள்ளது. சில பாதுகாப்பு அமைப்புகளின் தன்னார்வத் தொண்டர்கள், சென்னை மற்றும் அதைச் சுற்றியுள்ள குடிமக்களிடமிருந்து தொடர்ந்து அழைப்புகள் வருகிறது.
ஆலிவ் ரெட்லி ஆமைகள் இறந்து கரை ஒதுங்குவது அசாதாரணமான நிகழ்வு அல்ல. ஆமைகள் அருகிலுள்ள கரையோரங்களில் இனப்பெருக்கத்திற்காக இணைகின்றன மற்றும் பெண் ஆமைகள் மாநிலத்தின் கடற்கரைகளில் கூடு கட்டுவதற்காக சிறிய தொகுதிகளாக வந்து சேரும். வணிக விசைப்படகுகளின் மீன்பிடி வலைகளில் சிக்கியதால் நீரில் மூழ்குவதே ஆமைகள் இறப்பிற்கு முதன்மையான காரணமாக இருக்கலாம். ஆலிவ் ரெட்லி ஆமைகள் சுவாசிக்க கடல் மேற்பரப்பு வரை நீந்த வேண்டும். அவை வலையில் சிக்கினால் மூச்சுத்திணறல் ஏற்பட்டு இறந்துவிடும்,’’அதிக எண்ணிக்கையில் மீன்கள் கிடைப்பதால், ஆமைகள் அதிகம் கூடும் இடத்திற்கு அருகிலேயே விசைப்படகுகள் இயங்க வாய்ப்புள்ளது.
* கடற்கரை ஓரங்களில் முட்டையிட்டு செல்வதால் இதனை நாய், பறவைகள் மற்றும் சில சமூக விரோதிகள் அழித்து விடுகின்றனர். இவற்றில் இருந்து பாதுகாக்கும் வகையில் வனத்துறை, மீனவர்கள் மற்றும் தன்னார்வலர்கள் மூலம் இதனை கண்காணிக்க குழு அமைத்து அதனை தமிழகத்தில் 53 இடங்களில் வனத்துறையின் மூலம் செயல்பட்டு வரும் ஆமைகுஞ்சு பொரிப்பகங்களில் வைத்து பாதுகாத்து குஞ்சு பொரித்து வந்தவுடன் கடலில் விடும் பணியினை மேற்கொண்டு வருகின்றனர். 2363 ஆமை முட்டைகள் இட்ட குழியில் இருந்து மொத்தமாக 2,58,775 ஆமை முட்டைகள் சேகரிக்கப்பட்டுள்ளது. இவற்றில் இருந்து பொறிக்கப்பட்ட 2,15,778 ஆமை குஞ்சுகளை பாதுகாப்பாக கடலில் விடப்பட்டது. கடந்த ஆண்டு 1,87,917 ஆமை குஞ்சுகளை விடப்பட்டது. கடந்த ஆண்டினை விட இந்த எண்ணிக்கை அதிகமாகும்.
The post கடந்த சில தினங்களாக சென்னை, காஞ்சிபுரம் கடற்கரையோரம் வரலாறு காணாத அளவு ஆலிவ் ரெட்லி ஆமைகள் இறப்பு: ஆய்வு நடத்த தமிழ்நாடு அரசு திட்டம்; கடந்த 15 நாளில் இறந்த ஆமைகளின் எண்ணிக்கை 350 appeared first on Dinakaran.