இதுகுறித்து லஞ்ச ஒழிப்புத் துறை போலீசார் விசாரணை நடத்தி வைத்திலிங்கம் மற்றும் அவரது மகன்கள் உட்பட 11 பேர் மீது வழக்கு பதிவு செய்தனர். ஸ்ரீராம் ப்ராபர்ட்டீஸ் இன் பிளாஸ்டிக் பிரைவேட் லிமிடெட் என்ற தனியார் நிறுவனத்தின் இயக்குநர் ரமேஷ் மற்றும் அமைச்சர் வைத்திலிங்கத்தின் மகன்கள் பிரபு மற்றும் சண்முக பிரபு, உறவினர் பன்னீர்செல்வம் ஆகியோரை இயக்குனர்களாக சேர்த்து முத்தம்மாள் எஸ்டேட் பிரைவேட் லிமிடெட் என்ற நிறுவனத்தை தொடங்கினர். இந்நிலையில் ஸ்ரீராம் ப்ராபர்ட்டீஸ் நிறுவனம் பெருங்களத்தூரில் அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றை கட்டி வந்தது.
அப்போது பெருங்களத்தூர் ஜி.எஸ்.டி சாலையில் 57.94 ஏக்கரில் கூடுதலாக 1453 குடியிருப்புகள் மற்றும் ஐடி நிறுவனங்கள் கட்டுவதற்கு திட்ட அனுமதி கேட்டு சிஎம்டிஏ அலுவலகத்தில் விண்ணப்பித்தனர். மூன்று வருடங்களாக அனுமதி வழங்காமல் இருந்த நிலையில் 2016ம் ஆண்டு அமைச்சர் வைத்திலிங்கம் அனுமதி வழங்கி உத்தரவு பிறப்பித்தார். இதற்காக ஸ்ரீராம் ப்ராபர்ட்டீஸ் நிறுவனத்திடம் இருந்து ரூ.28 கோடி லஞ்சம் பெற்றது விசாரணையில் தெரியவந்தது.
மேலும் ரூ.28 கோடியை தனது மகன் மற்றும் உறவினர்கள் மூலம் லஞ்சமாக பெற்றதும், அந்த பணத்தில் திருச்சியில் நிலம் வாங்கியதும் லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸ் நடத்திய விசாரணையில் தெரிய வந்தது.
இந்நிலையில் இந்த வழக்கில் சட்டவிரோத பணப்பரிமாற்றம் நடந்துள்ளதாக எழுந்த புகாரின் அடிப்படையில், அமலாக்கத்துறை அதிகாரிகள் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் சோதனை நடத்தியது. மேலும் சென்னை மற்றும் தஞ்சாவூர் உள்ளிட்ட இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம் தொடர்புடைய இடங்கள் மற்றும் தனியார் கட்டுமான நிறுவனம், அதன் தொடர்புடைய இடங்களில் சோதனையை தொடர்ந்து மேற்கொண்டனர். குறிப்பாக சிஎம்டிஏ அலுவலகத்திலும் அதன் உறுப்பினர் செயலரிடமும் சோதனை நடத்தி விசாரணை மேற்கொண்டனர். 2 நாட்கள் நீடித்த இந்த சோதனையில் வழக்கு தொடர்பாக முக்கிய ஆவணங்களை அதிகாரிகள் கைப்பற்றி ஆய்வு செய்தனர்.
இந்த நிலையில் சட்டவிரோத பணிவர்த்தனை வழக்கில் முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கத்துக்கு சொந்தமான ரூ.100.92 கோடி மதிப்பிலான 2 அசையா சொத்துகளை முடக்கியுள்ளதாக அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது. மேலும் அமைச்சராக இருந்தபோது இதேபோன்று சட்டவிரோதமாக லஞ்சம் பெற்றுக் கொண்டு ஏதேனும் திட்டங்களுக்கு அனுமதி அளித்துள்ளாரா? அது தொடர்பான சட்ட விரோத பண பரிமாற்றம் தொடர்பாகவும் அமலாக்கத்துறை அதிகாரிகள் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இவர், தற்போது அதிமுகவின் ஓபிஎஸ் அணியில் உள்ளார்.
The post அதிமுக ஆட்சியில் திட்ட அனுமதி வழங்கியதற்கு ரூ.28 கோடி லஞ்சம் முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கத்தின் ரூ.100.92 கோடி அசையா சொத்துகள் முடக்கம்: அமலாக்கத்துறை அதிரடி நடவடிக்கை appeared first on Dinakaran.