அவனியாபுரம், பாலமேடு, சூரியூரில் ஜல்லிக்கட்டில் சீறிப்பாய்ந்த 2600 காளைகள்: தீரமுடன் அடக்கிய வீரர்கள்; மாடு முட்டி ஒருவர் பலி, 198 பேர் படுகாயம்

அலங்காநல்லூர்: அவனியாபுரம், பாலமேடு, சூரியூரில் நடந்த ஜல்லிக்கட்டில் 2600 காளைகள் களமிறங்கின. அவனியாபுரம், பாலமேட்டில் அதிக காளைகளை அடக்கி முதலிடம் பிடித்த வீரர்களுக்கு கார் பரிசு வழங்கப்பட்டது. சிறந்த காளைகளுக்கு டிராக்டர் பரிசாக வழங்கப்பட்டது. அவனியாபுரத்தில் காளை முட்டியத்தில் வீரர் ஒருவர் உயிரிழந்தார். திருச்சி சூரியூரில் நடந்த ஜல்லிக்கட்டில் முதல் இடம் பிடித்த வீரருக்கு பைக் பரிசாக வழங்கப்பட்டது. 3 இடங்களில் நடந்த ஜல்லிக்கட்டில் 198 பேர் படுகாயமடைந்தனர். மதுரை மாவட்டத்தின் அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூர் கிராமங்கள் ஜல்லிக்கட்டுக்கு புகழ் பெற்றதாகும். நேற்று முன்தினம் பொங்கல் திருநாளன்று அவனியாபுரத்தில் மாவட்டத்தின் முதல் ஜல்லிக்கட்டு காலை 7 மணிக்கு துவங்கியது.

இதில், 500 வீரர்கள் களமிறங்கினர். 888 காளைகள் களமிறக்கப்பட்டன. வீரர்கள் தீரத்துடன் காளைகளை அடக்கினர். ஒரு சில காளைகள் வீரர்களுக்கு ஆட்டம் காட்டி களத்தில் நின்று விளையாடின. 10 சுற்றுகளில், ஒரு சுற்றுக்கு 50 மாடுபிடி வீரர்கள் வீதம் களமிறக்கப்பட்டனர். ஒவ்வொரு சுற்றிலும் சிறந்த வீரர்களை தேர்வு செய்து, 11வது சிறப்பு சுற்றில் 30 வீரர்கள் களமிறக்கப்பட்டனர். இறுதிச்சுற்றின் முடிவில் 19 காளைகளை அடக்கிய திருப்பரங்குன்றம் கார்த்திக், சிறந்த மாடுபிடி வீரராக தேர்வானார். அவருக்கு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் சார்பில், அமைச்சர்கள் பி.மூர்த்தி, பிடிஆர்.பழனிவேல் தியாகராஜன் கார் பரிசாக வழங்கினர். குன்னத்தூர் அரவிந்த் திவாகர், 15 காளைகளை அடக்கி 2வது பரிசு பெற்றார். அமைச்சர்கள் டூவீலரை பரிசாக வழங்கினர்.

காளைக்கு டிராக்டர்: புதுக்கோட்டை பொன்னமராவதி மலையாண்டியின் காளைக்கு, சிறந்த காளைக்கான டிராக்டர் பரிசு வழங்கப்பட்டது. 2ம் பரிசான டூவீலர், மதுரை ஜி.ஆர்.கார்த்தியின் காளைக்கு வழங்கப்பட்டது. காளை உரிமையாளர்கள் தங்களுடைய காளைகளை அடக்குவோருக்கு ரூ.50 ஆயிரம், ரூ.1 லட்சம் பரிசு அறிவித்திருந்தனர். இதில், மாடுபிடி வீரர் ரஞ்சித், சிவகங்கை ஆவரங்காடு காளையை அடக்கி ரூ.1 லட்சம் ரொக்கப்பரிசு மற்றும் சைக்கிள் பரிசு வென்றார். சிறந்த காளை உரிமையாளர் மலையாண்டிக்கும், சிறந்த மாடுபிடி வீரர் கார்த்திக்கிற்கும், மதுரை மேயர் இந்திராணி பொன்வசந்த் சார்பில் கன்றுடன் கூடிய பசு பரிசாக வழங்கப்பட்டது.

வீரர் உயிரிழப்பு: ஜல்லிக்கட்டில் வென்ற மாடுபிடி வீரர்கள், காளைகளின் உரிமையாளர்களுக்கு ரொக்கம், தங்கக்காசு, பேன், சைக்கிள், கட்டில், பீரோ, அண்டா, குக்கர் உள்ளிட்ட ஏராளமான பரிசுப் பொருட்கள் வழங்கப்பட்டன. அவனியாபுரம் ஜல்லிக்கட்டில் 65 பேர் காயமடைந்தனர். இதில் மதுரை விளாங்குடி சொக்கநாதபுரத்தை சேர்ந்த நவீன் (23), மாடு முட்டியதில் படுகாயம் அடைந்து சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். 8 பேர் மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். மாடுபிடி வீரர்களுக்கு அரசு சார்பில் ரூ.1 கோடி காப்பீடு செய்யப்பட்டிருந்தது.

பாலமேட்டில் அசத்தல்: மாட்டுப்பொங்கல் நாளான நேற்று காலை மதுரை மாவட்டம் பாலமேட்டில் உள்ள மஞ்சமலை ஆற்று திடலில் ஜல்லிக்கட்டு நடந்தது. இதில் பங்கேற்க ஆன்லைன் மூலம் 1,100 காளைகள், 910 வீரர்கள் முன்பதிவு செய்திருந்தனர். இதில் 3 பேர் தகுதி நீக்கப்பட்டனர். முன்னதாக காளைகளுக்கும், வீரர்களுக்கும் மருத்துவ பரிசோதனைகள் நடந்தன. பின்னர், கிராமத்தில் உள்ள பாதாள விநாயகர் கோயிலில் சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டது. தொடர்ந்து இங்கிருந்து பாரம்பரிய முறைப்படி வெற்றி பெற்ற வீரர்களுக்கும், காளைகளுக்கும் வழங்கும் வேட்டி, துண்டு உள்ளிட்ட பரிசுப் பொருள்களை தலைச்சுமையாக, வாண வேடிக்கையுடன், மேளதாளம் முழங்க ஊர்வலமாக எடுத்து வந்தனர்.

வாடிவாசலில் வீரதீரம்: வாடிவாசல் முன்பாக அமைச்சர் பி.மூர்த்தி, கலெக்டர் சங்கீதா, எஸ்பி அரவிந்த் மற்றும் மாவட்ட அதிகாரிகள் முன்னிலையில் மாடுபிடி வீரர்கள் பாதுகாப்பு உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். காலை 7.40 மணிக்கு ஜல்லிக்கட்டு போட்டியை அமைச்சர் பி.மூர்த்தி தொடங்கி வைத்தார். முதலாவதாக வாடிவாசலில் இருந்து கோயில் காளை அவிழ்த்து விடப்பட்டது. பின்னர் ஒவ்வொன்றாக காளைகள் அவிழ்த்து விடப்பட்டன. வாடிவாசலில் இருந்து சீறிப்பாய்ந்த காளைகளை வீரர்கள் தீரத்துடன் அடக்கினர். தொட்டால் சீறுவேன் என சில காளைகள் களத்தில் நின்று ஆட்டம் காட்டின. காலை 7.40 மணிக்கு தொடங்கிய ஜல்லிக்கட்டு மாலை 6 மணியளவில் நிறைவடைந்தது. மொத்தம் 930 காளைகள் அவிழ்த்து விடப்பட்டன. மாலை 4.15 மணிக்கு துவங்கிய இறுதிச் சுற்று சுமார் ஒன்றரை மணிநேரம் நடந்தது. மழை குறுக்கிட்டதால் சுற்று ரத்து செய்யப்பட்டு, 10 சுற்றுகளுடன் ஜல்லிக்கட்டு நிறைவு பெற்றதாக அறிவிக்கப்பட்டது.

முதல்வர் சார்பில் டிராக்டர்: சிறந்த மாடுபிடி வீரருக்கான முதல் பரிசை 14 காளைகளை பிடித்து நத்தம் பார்த்திபன் பெற்றார். இவருக்கு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சார்பில் கார் பரிசளிக்கப்பட்டது. மஞ்சம்பட்டி துளசிராம் 12 காளைகள் பிடித்து 2ம் இடம் பிடித்தார். இவருக்கு டூவீலர் பரிசு வழங்கப்பட்டது. 3ம் பரிசாக 11 காளைகளை அடக்கிய பொதும்பு பிரபாகரனுக்கு எலக்ட்ரிக் டூவீலர் பரிசு வழங்கப்பட்டது. மதுரை சத்திரப்பட்டியை சேர்ந்த விஜய தங்கபாண்டியின் காளைக்கு சிறந்த காளைக்கான முதல் பரிசாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சார்பாக டிராக்டர் வழங்கப்பட்டது. 2வது பரிசு சின்னப்பட்டியை சேர்ந்த கார்த்திக்கிற்கு பசுவும், கன்றும் பரிசாக வழங்கப்பட்டது. மூன்றாம் பரிசாக குருவித்துரை பவித்ரனுக்கு விவசாய ரோட்டவேட்டர் கருவி வழங்கப்பட்டது.

அமைச்சர்கள் பி.மூர்த்தி, பிடிஆர்.பழனிவேல் தியாகராஜன் வழங்கினர். இது தவிர வெற்றி பெற்ற வீரர்களுக்கு டிவி, பிரிட்ஜ், வாஷிங் மெஷின், மிக்ஸி கிரைண்டர், கட்டில் மெத்தை, சைக்கிள், தங்கம், வெள்ளிக்காசுகள், பித்தளை, சில்வர் பாத்திரங்கள் உள்ளிட்ட பல்வேறு வீட்டு உபயோகப் பொருட்கள் வழங்கப்பட்டன. மேலும், மகாலிங்க சுவாமி மடத்து கமிட்டி சார்பில் தங்கக்காசு உள்ளிட்ட பரிசுகள் வழங்கப்பட்டன. 2 ஆயிரம் போலீசார் பாலமேடு ஜல்லிக்கட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். ஜல்லிக்கட்டு போட்டியில் சிறுமி உள்ளிட்ட 50 பேர் காயமடைந்தனர். முன்னதாக மருத்துவ பரிசோதனைக்கென பாலமேடு ஆரம்ப சுகாதார நிலையத்தில் வீரர்கள் குவிந்ததால், கம்புகளை சுழற்றி போலீசார் அவர்களை ஒழுங்குபடுத்தினர்.

சூரியூரில் கோலாகலம்: திருச்சி அருகே உள்ள பெரிய சூரியூர் கிராமத்தில் ஆண்டுதோறும் மாட்டுப்பொங்கல் அன்று சூரியூர் ஸ்ரீ நற்கடல் குடி கருப்பணசாமி கோயில் திருவிழாவை முன்னிட்டு ஜல்லிக்கட்டு போட்டி விமரிசையாக நடத்தப்படுவது வழக்கம். அதன்படி நேற்று ஜல்லிக்கட்டு நடந்தது. இதில் 681 காளைகளும், 349 மாடுபிடி வீரர்களும் போட்டியில் பங்கேற்றனர். போட்டி காலை 8 மணிக்கு தொடங்கியது. வீரர்கள் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். ஆர்டிஓ அருள் கொடியசைத்து தொடங்கி வைத்தார். வாடிவாசல் வழியே  நற்கடல் குடி கருப்பண்ணசாமி கோயில் காளை முதலில் அவிழ்த்து விடப்பட்டது. அதன் பிறகு ஜல்லிக்கட்டு காளைகள் ஒவ்வொன்றாக அவிழ்த்து விடப்பட்டன.
வாடிவாசல் வழியே சீறிப்பாய்ந்த காளைகளை வீரர்கள் போட்டி போட்டு அடக்கினர். சில காளைகள் களத்தில் நின்று போக்கு காட்டியது. இதில் காளைகள் முட்டியதில் மாடுபிடி வீரர் 15 பேர், உரிமையாளர் 35 பேர், பார்வையாளர் 33 பேர் என 83 பேர் காயம் அடைந்தனர்.

போட்டியில் கலந்து கொண்டு வெற்றி பெற்ற காளைகளுக்கும், காளைகளை அடக்கிய வீரர்களுக்கும் மிக்ஸி, கிரைண்டர், சைக்கிள், கட்டில், பீரோ, தங்க காசு, வெள்ளி காசு என ஏராளமான பரிசு பொருட்கள் வழங்கப்பட்டன. அதிக காளைகளை அடக்கிய வீரருக்கு முதல் பரிசாக பைக், 2வது பரிசாக எல்இடி டிவி வழங்கப்பட்டது. இதில் 13 மாடுகள் பிடித்து முதலிடம் பிடித்த நவல்பட்டு கிராமத்தை சேர்ந்த ரஞ்சித் என்ற வீரருக்கு அமைச்சர் அன்பில் மகேஷ் சார்பில் வழங்கப்பட்ட பைக்கை திருச்சி ஆர்டிஓ அருள் வழங்கினார். இந்த ஜல்லிக்கட்டு போட்டியை சூரியூர் மற்றும் அதை சுற்றி உள்ள ஊர்களை சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் கண்டு ரசித்தனர்.

* அலங்காநல்லூரில் இன்று ஜல்லிக்கட்டு துணை முதல்வர் தொடங்கி வைக்கிறார்
மதுரை மாவட்டம், அலங்காநல்லூரில் இன்று, 1,100 காளைகள், 900 காளையர் பங்கேற்க உலகப்புகழ் ஜல்லிக்கட்டு போட்டி நடக்கிறது. காலை 7 மணிக்கு தொடங்கி மாலை 5 மணி வரை ஜல்லிக்கட்டு போட்டி நடத்தப்படுகிறது. துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் ஜல்லிக்கட்டை தொடங்கி வைக்கிறார். டோக்கனில் குறிப்பிட்டுள்ள எண் படியே வாடிவாசலில் காளைகள் அவிழ்த்து விடப்படும். அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் வெற்றி பெறுவோருக்கு டிராக்டர், கார், டூவீலர் மற்றும் பயணிகள் ஆட்டோ பரிசுகள் வழங்கப்படுகிறது.

* டங்ஸ்டனுக்கு எதிராக போராட்டம்
பாலமேடு ஜல்லிக்கட்டில் நேற்று பொம்மிநாயக்கன்பட்டி ஹரிபிரசாத், சின்னத்துரை உள்ளிட்ட இளைஞர்கள் தலைமையில் விழிப்புணர்வு பதாகைகள் அடங்கிய வாசகங்களுடன், டங்ஸ்டன் திட்டத்தை ரத்து செய்யக்கோரி கோஷமிட்டனர். ஹரிபிரசாத் கூறும்போது, ‘‘டங்ஸ்டன் திட்டம் செயல்படுத்தினால் மேலூர் பகுதி மட்டுமின்றி, விரிவாக்கம் செய்யப்பட்டு செயல்படுத்தும்போது, சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி வரையிலான கிராமப்பகுதிகள் மொத்தமாக அழிந்து விவசாயம் பாதிப்பதுடன், கால்நடைகளே அழியும் நிலை ஏற்படும். இதனால் நம் தமிழகத்தின் பாரம்பரிய ஜல்லிக்கட்டு போட்டிகளுக்கும் பேராபத்து. எனவே இத்திட்டத்தை ரத்து செய்து மக்கள் வாழ்வாதாரத்தை, கால்நடைகளை காக்க வேண்டும்’’ என்றார்.

திடீர் மோதல்: காளை பலி
பெரியசூரியூரில் நடந்த ஜல்லிக்கட்டு போட்டியில் 681 காளைகள் பங்கேற்றன. இதில் திருவளர்சோலையை சேர்ந்த செல்லப்பனின் காளை வாடிவாசலுக்கு அழைத்து வரப்பட்டது. அப்போது வாடிவாசலுக்கு வருவதற்கு முன்பே பின்னால் அழைத்து வரப்பட்ட மற்றொரு காளை முட்டியதால் இரண்டு காளைகளும் ஆக்ரோஷமாக மோதின. இதில் பலத்த காயமடைந்த செல்லப்பனின் காளை சம்பவ இடத்திலேயே பலியானது. இந்த காளை முதல் முதலாக ஜல்லிக்கட்டில் பங்கேற்க அழைத்து வரப்பட்டது குறிப்பிடத்தக்கது.

* ‘காளை தோத்தால் என்ன… பரிசை நீங்க புடிங்க…’ வீரரின் நெகிழ்ச்சி செயல்
அவனியாபுரம் ஜல்லிக்கட்டில் மதுரை முத்துப்பட்டியை சேர்ந்த மாடுபிடி வீரர் திருநாவுக்கரசு என்பவருக்கு காளையை அடக்கியதற்காக தங்க நாணயம் பரிசாக வழங்கப்பட்டது. இந்த பரிசினை பெற்றுக்கொண்டு திரும்பிய வீரர் திருநாவுக்கரசு, களத்தில் தனது காளை வெல்ல முடியாததால் மிகுந்த மன வருத்தத்துடன் நின்றிருந்த உரிமையாளரான மதுரை பெருங்குடியை சேர்ந்த சிறுமி ஆர்த்தியை பார்த்தார். உடனடியாக சிறிதும் தயக்கமின்றி, வீரர் திருநாவுக்கரசு, தான் பரிசாக பெற்ற தங்கக்காசு மற்றும் பரிசுப்பொருட்களை ஆர்த்தியை அழைத்து கையில் வழங்கினார். கடந்த முறையும் இந்த காளை தோற்ற நிலையில் இம்முறை வென்றெடுக்கும் என்ற எதிர்பார்ப்பில் இருந்த ஆர்த்தியிடம், ‘‘ஜல்லிக்கட்டில் உங்கள் காளை மிகச் சிறப்பாக விளையாடியது. இது உங்களுக்குரிய பரிசுதான்’’ என்றபடி பரிசை கொடுத்து விட்டு வேகமாக நடந்து சென்றார். இதைக்கண்ட பார்வையாளர்கள் ஆரவாரத்துடன் கைதட்டி பாராட்டினர்.

* மாஜி அமைச்சர் காளைக்கு பரிசு வழங்கிய அமைச்சர்
சூரியூர் ஜல்லிக்கட்டில் அதிமுக முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கரின் காளை களமிறங்கியது. இந்த காளை பிடிபடாமல் வெற்றி பெற்றது. இதையடுத்து வெற்றி பெற்ற காளையின் உரிமையாளரான அருகில் மேடையில் நின்ற சி.விஜயபாஸ்கரிடம், அமைச்சர் அன்பில் மகேஷ், சைக்கிள் பரிசுக்கான டோக்கனை வழங்கினார்.

* சூரியூரில் ரூ.3 கோடியில் ஜல்லிக்கட்டு ஸ்டேடியம்
விழா மேடையில் சூரியூரில் ஜல்லிக்கட்டு மைதானம் அமைப்பதற்காக தமிழக அரசு வெளியிட்ட அரசாணையை விழா கமிட்டியினரிடம் நேரில் வழங்கிய அமைச்சர் அன்பில் மகேஷ் கூறுகையில், ‘சூரியூரில் ரூ.3 கோடி செலவில் ஜல்லிக்கட்டு ஸ்டேடியம் அமைக்கப்பட உள்ளது. ஜல்லிக்கட்டு போட்டிக்கு மட்டுமல்லாமல் பல்வேறு விளையாட்டுகள் விளையாடும் வகையில் ஒருங்கிணைந்த விளையாட்டு திடலாக அது இருக்கும். இன்னும் ஒரு மாத காலத்தில் அதற்கான பணிகள் தொடங்கும். முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் ஜல்லிக்கட்டு போட்டியில் ஆர்வம் கொண்டவர். அதன் காரணமாக சூரியூர் ஜல்லிக்கட்டு போட்டியையும் காண வந்துள்ளார். ஜல்லிக்கட்டு தமிழர்களின் விழா. அவருடன் இணைந்து ஜல்லிக்கட்டு போட்டியை கண்டுகளித்தது மகிழ்ச்சிதான்’ என்றார்.

* முதலிடம் பிடித்த சசிகலா காளை
அவனியாபுரம் ஜல்லிக்கட்டில் சிறந்த காளையாக சசிகலா நடராஜனின் காளை தேர்ந்தெடுக்கப்பட்டது. இவரது காளையை வளர்த்து வரும் மலையாண்டிக்கு முதல் பரிசு டிராக்டர், பசு, கன்றும் பரிசாக வழங்கப்பட்டன. இந்த காளை களத்தில் இறக்கப்பட்டதும், வீரர்கள் தடுப்புகள் மீது ஏறிக்கொள்ளும் அளவிற்கு களத்தில் அச்சத்தை ஏற்படுத்தியது. காளையை பிடிப்பவர்களுக்கு சைக்கிள், தங்கக்காசு அறிவிக்கப்பட்டபோதும் ஒருவரும் பிடிக்க முன்வராத நிலையில் காளை வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.

The post அவனியாபுரம், பாலமேடு, சூரியூரில் ஜல்லிக்கட்டில் சீறிப்பாய்ந்த 2600 காளைகள்: தீரமுடன் அடக்கிய வீரர்கள்; மாடு முட்டி ஒருவர் பலி, 198 பேர் படுகாயம் appeared first on Dinakaran.

Related Stories: