கோவிந்தா, கோவிந்தா கோஷம் முழங்க சேலம் கோட்டை பெருமாள் கோயிலில் சொர்க்கவாசல் திறப்பு

சேலம்: வைகுண்ட ஏகாதசியையொட்டி சேலம் கோட்டை அழகிரி நாதர் கோயிலில் இன்று அதிகாலை பக்தர்களின் கோவிந்தா, கோவிந்தா கோஷம் முழங்க சொர்க்கவாசல் திறக்கப்பட்டது. இந்துகளின் விரத வழிபாட்டில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது வைகுண்ட ஏகாதசியாகும். அந்த வகையில், சேலம் பழைய பஸ் ஸ்டாண்ட் அருகே உள்ள பிரசித்தி பெற்ற கோட்டை அழகிரிநாதர் கோயிலில் இன்று அதிகாலை வைகுண்ட ஏகாதசி வைபவ சொர்க்க வாசல் திறப்பு நிகழ்ச்சி நடந்தது. முன்னதாக அதிகாலை 4 மணிக்கு உற்சவ மூர்த்தியான பெருமாள், ஸ்ரீதேவி, பூதேவிக்கு பல்வேறு திரவியங்களால் சிறப்பு அபிஷேகங்கள் நடந்தது. பின்னர் வண்ண மலர்களை கொண்டு அலங்காரம் செய்யப்பட்டது. தொடர்ந்து தங்கக் கவசம் ரத்ன கிரீடத்தில் ராஜா அலங்காரத்தில் பெருமாளும், தாயாரும் கோயிலின் உட்பிரகாரத்தில் வலம் வந்தனர்.

பின்னர் வடக்குபுறம் அமைந்துள்ள ஆண்டுக்கு ஒருமுறை திறக்கப்படும் சொர்க்க வாசல் திறக்கப்பட்டு அதன் வழியாக பல்லகில் பெருமாள் பவனி வந்தார். தொடர்ந்து கோயிலை சுற்றி வலம் வந்தபின், பெருமாளுக்கும் தாயருக்கும் மாலை மாற்றும் நிகழ்ச்சி நடந்தது. பின்னர் சிறப்பு பூஜை செய்யப்பட்டு மஹா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. நள்ளிரவு முதலே பக்தர்கள் கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் காத்திருந்து தரிசனம் செய்தனர். பக்தர்கள் சிரமமின்றி தரிசனம் செய்ய தடுப்புகள் அமைக்கப்பட்டிருந்தது. இலவச தரிசனம் செய்ய வந்த பக்தர்கள் பழைய புத்தக கடை வீதி, ஹபீப் தெரு வழியாக கோயிலை வந்தடையும் கியூ வரிசை பயன்படுத்தி தரிசனம் செய்தனர்.

ஆன்லைனில் ₹25 கட்டணம் செலுத்திய பக்தர்கள் குண்டுபோடும் தெரு வெங்கடசாமி தெரு வரும் கியூ வரிசை பயன்படுத்தி தரிசனம் செய்தனர். தொடர்ந்து ஜன.21ம் தேதி வரை இராப்பத்து உற்சவம் நடக்கிறது. 14ம் தேதி பெருமாள், ஸ்ரீதேவி, பூதேவி, ஆஞ்சநேயர் உற்சவ மூர்த்திக்கு சந்தனகாப்பு அலங்காரம், 19ம் தேதி ஆழ்வார் மோட்சம் திருவீதி புறப்பாடு, திருவாய்ெமாழி சாற்றுமுறை, 20ம் தேதி சொர்க்கவாசல் திருக்காப்பு நடக்கிறது. சொர்க்க வாசல் திறப்பையொட்டி மாநகர காவல் ஆணையாளர் பிரவீன்குமார் அபிநபு தலைமையில் சுமார் 500க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பில் ஈடுபட்டனர்.

கோயிலை சுற்றி பல்வேறு இடங்களில் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டு தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது. இதேபோல் சேலம் தேர்நிலையம் லட்சுமி நாராயணசுவாமி, சின்னகடைவீதி வேணுகோபால சுவாமி, பட்டைகோயில் பிரசன்ன வரதராஜ பெருமாள், சிங்கமெத்தை சௌந்திரராஜ பெருமாள், சின்னதிருப்பதி வரதராஜ பெருமாள், செவ்வாய்பேட்டை பாண்டுரங்கநாதர், பிரசன்ன வெங்கடாசலபதி, நாமமலை வரதராஜ பெருமாள், கோவிந்தராஜ பெருமாள், உடையாப்பட்டி பெருமாள், நெத்திமேடு கரியபெருமாள், குரங்குச்சாவடி கூசமலை பெருமாள் உள்பட சேலம் மாநகரம், மாவட்ட பகுதிகளில் உள்ள பெருமாள் கோயில்களில் சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சி நடந்தது. இவ்விழாவில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர். பட்டைகோயில் வரதராஜ பெருமாள் கோயிலில் பக்தர்களுக்கு 50 ஆயிரம் லட்டு பிரசாதமாக வழங்கப்பட்டது.

The post கோவிந்தா, கோவிந்தா கோஷம் முழங்க சேலம் கோட்டை பெருமாள் கோயிலில் சொர்க்கவாசல் திறப்பு appeared first on Dinakaran.

Related Stories: