சமீபகாலமாக சிறைத்துறையில் மோசடிகள் நடப்பது அம்பலத்திற்கு வந்துள்ளது. மதுரையில் கடந்த அதிமுக ஆட்சி காலத்தில் கைதிகள் தயாரிக்கும் பொருட்களுக்கான மூலபொருட்களை வெளியில் இருந்து வாங்கியதாகவும், தயாரித்த பொருட்களை விற்பனை செய்ததாகவும் போலியாக ஆவணங்களை தயாரித்து ரூ.100 கோடி மோசடி நடைபெற்றது சமீபத்தில் கண்டுபிடிக்கப்பட்டது. இதுதொடர்பாக மதுரை விஜிலென்ஸ் போலீசார், அப்போது இருந்த மதுரை சிறை கண்காணிப்பாளர் ஊர்மிளா, கூடுதல் கண்காணிப்பாளர் வசந்தகண்ணன், நிர்வாக அதிகாரியாக இருந்த தியாகராஜன் உள்பட 11பேர் மீது வழக்கு பதிவு செய்தனர். அதில் ஊர்மிளா உள்பட 6பேர் முன்ஜாமீன் கேட்டு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தனர்.
அந்த மனு நேற்றுமுன்தினம் தள்ளுபடி செய்யப்பட்டது. இதேபோல் வேலூர் மத்திய சிறையில், அடைக்கப்பட்டிருந்த ஆயுள் தண்டனை கைதி சிவக்குமார் என்பவரை சிறைத்துறை டிஐஜியாக இருந்த ராஜலட்சுமி வீட்டு வேலைக்கு அழைத்து சென்ற நிலையில் வீட்டில் இருந்த பல லட்சம் ரூபாய் பணத்தை கைதி திருடியதும், இதனால் அவரை சிறையில் வைத்து தாக்கியது தொடர்பாக வேலூர் சிபிசிஐடி போலீசார் வழக்கு பதிவு செய்தனர். இதில் டிஐஜி ராஜலட்சுமி உள்பட 11பேர் மீது வழக்கு பதிவு செய்தனர். அவர்கள் அனைவரும் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். வேலூர் சரக டிஐஜி பணியிடமும் காலியாக இருந்து வருகிறது.
திருச்சி சிறையில் திருநங்கை கைதி தாக்கப்பட்ட விவகாரத்தில் சிறை வார்டன் ஒருவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். இது தொடர்பாக அதிகாரிகள் மீது நடவடிக்கை பாய்ந்தது. அதேபோல், சென்னை புழல் சிறையில் சிலிண்டர் மோசடி தொடர்பாக விஜிலென்ஸ் விசாரணை நடத்தி வருகிறது. இங்கும் சில அதிகாரிகள் சிக்குவார்கள் என்பதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. சென்னை சரக சிறைத்துறை டிஐஜி முருகேசன் பணியிடத்திற்கு வேறு யாரும் நியமிக்கப்படவில்லை. அங்கு போலீஸ் துறையை சேர்ந்த ஐபிஎஸ் அதிகாரிகளை நியமித்து ஊழலை முற்றிலும் அகற்றுவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. சிறைத்துறையில் உயர்ந்த பதவியான டிஜிபி பொறுப்பில் ஐபிஎஸ் அதிகாரியான மகேஸ்வர் தயாள் நியமிக்கப்பட்டுள்ளார். அவர் சிறைத்துறையில் எடுத்து வரும் நடவடிக்கையால் சிறை அதிகாரிகள் கலக்கத்தில் உள்ளனர்.
The post வேலூர், மதுரை, திருச்சி, கோவை 4 சிறைத்துறை டிஐஜிக்கள் அதிரடியாக இடமாற்றம்: மோசடி உள்ளிட்ட புகார்களால் நடவடிக்கை appeared first on Dinakaran.