ஒன்றிய அரசு நிதி வழங்க மறுப்பு பொங்கல் பரிசு தரமுடியவில்லை: அமைச்சர் பதில்

சட்டப் பேரவையில் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவித்து விவாதம் நடந்தது. அப்போது உறுப்பினர்கள் பேசியதாவது:
திருத்துறைப்பூண்டி மாரிமுத்து (இந்திய கம்யூனிஸ்ட்): ஆளுநர் உரையில் அரசு ஊழியர், ஆசிரியர்களுக்கான பழைய ஓய்வூதிய திட்டம் எப்போது செயல்படுத்தப்படும் என்பது குறித்து இடம்பெறவில்லை. இதை அரசு கவனிக்க வேண்டும்.
அமைச்சர் டிஆர்பி.ராஜா: திருவாரூர் மாவட்டத்தில் அனைத்து ஏழை எளிய மக்களுக்கும் வீடுகள் வழங்கும் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. ஒரு இடங்களில் நீர்நிலை புறம்போக்கில் வாழும் மக்களுக்கு மாற்று இடம் கொடுத்தாலும் அவர்கள் அங்கிருந்து வர மறுக்கின்ற நிலை உள்ளது. அது குறித்து பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம்.
மாரிமுத்து: தமிழ்நாட்டில் நுகர்பொருள் வாணிபக் கழகம் தொடங்கி அதன் மூலம் நெல் கொள்முதல் நிலையத்தை தொடங்கியவர் கலைஞர். அங்கு பணியாற்றும் தொழிலாளர்களுக்கு வேலை உத்தரவாதம் இல்லை. தேசிய விற்பனை முனையம் அங்கு அமைக்க தனியாருக்கு அனுமதி வழங்கப்பட உள்ளதாக தெரிகிறது. அதனால் பணியாளர்கள் இடையே பதற்றம் நிலவுகிறது.
அமைச்சர் சக்கரபாணி: டெல்டா மாவட்டங்களில் எங்கும் தனியார் நேரடி கொள்முதல் மையம் செயல்படவில்லை. அதேபோல அங்கு பணியாற்றும் பணியாளர்களுக்கு கூலி உயர்த்தி வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அமைச்சர் தங்கம் தென்னரசு: ஒன்றிய அரசிடம் இருந்து நிவாரண நிதியாக ரூ.37 ஆயிரத்து 860 கோடி கேட்டிருந்தோம். ஆனால் அவர்கள் வழங்கியது வெறும் ரூ.276 கோடிதான். அதேபோல சர்வசிக்‌ஷா அபியான் திட்டத்தின் கீழ் ரூ.2159 கோடி கேட்கப்பட்டது. இந்த ஆண்டும் அந்த நிதியை ஒன்றிய அரசு வழங்கவில்லை. நிதி காரணமாக இந்த ஆண்டு பொங்கல் பரிசு வழங்க இயலவில்லை.
மாரிமுத்து: விவசாய தொழிலாளர் நல வாரியம் மீண்டும் கொண்டு வர வேண்டும். முத்துப்பேட்டையில் பெண்கள் கல்லூரி ஒன்று கொண்டு வர வேண்டும். கோட்டூரில் ஆரம்ப சுகாதார நிலையம் கொண்டு வர வேண்டும்.
அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா: என்இபிசி குறித்து உறுப்பினர் தெரிவித்தது புரளியாக இருக்கும். என்இபிசி வாங்கிய நிலத்தில் ஒரு பகுதியை அரசு தற்போது கையகப்படுத்த உள்ள நிலையில் விவசாய நிலங்களையும் அரசு கையகப்படுத்தப் போவதாக புரளி கிளப்பி இருக்கலாம். விவசாயிகளுக்கு பாதிப்பு இல்லாமல் அங்கு வளர்ச்சித் திட்டம் செயல்படுத்தப்படும். இவ்வாறு உறுப்பினர்கள் பேசினர்.

* மூக்கையா தேவருக்கு சிலை செல்லூர் ராஜூவுக்கு சபாநாயகர் அப்பாவு கேள்வி
சட்டசபையில் கேள்வி நேரத்தின் போது அதிமுக எம்எல்ஏ செல்லூர் கே.ராஜூ பேசுகையில், பி.கே.மூக்கையா தேவருக்கு உருவச் சிலை அமைப்பதற்கும், அவர் பிறந்த, வாழ்ந்த ஊரான பாப்பாப்பட்டியில் அவர் இருக்கின்ற அரசுப் பள்ளிக்கு அவருடைய பெயரை நூற்றாண்டு விழாவில் அமைக்க வேண்டும் என்றார்.
இதற்கு சபாநாயகர் அப்பாவு, இவ்வளவு காலம் அமைச்சர்களாக இருந்தபோதெல்லாம் ஞாபகம் வராதது வந்திருக்கிறது என்றார். அதற்கு அமைச்சர் மு.பெ.சாமிநாதன், வரும் ஆண்டிலே பரிசீலிக்கப்படும் என்றார்.

* சட்டமன்றத்தில் சென்னை மாகாண முதல்வர் பி.எஸ்.குமாரசாமி ராஜா திருவுருவப்படம்: அமைச்சர் விளக்கம்
சட்டப்பேரவையில் கேள்வி நேரத்தின் போது ராஜபாளையம் எம்எல்ஏ எஸ்.தங்கப்பாண்டியன் (திமுக) பேசுகையில், ஏழை எளியமக்களுக்காக தனது சொத்துகளை நன்கொடையாக வழங்கிய பி.எஸ்.குமாரசாமி ராஜாவின் திருவுருவப் படத்தினை சட்டமன்றத்தில் வைத்திட அரசு முன்வருமா? என்றார்.
இதற்கு பதில் அளித்து தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் பேசுகையில், முழுக்க முழுக்க பேரவைத் தலைவருடைய கட்டுப்பாட்டிலும், அதையொட்டி பொதுப் பணித் துறையின் மூலமாகத்தான் இந்த அரங்கத்திற்குள்ளே புகைப்படம் வைப்பது சம்பந்தமான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. பேரவைத் தலைவரும் கவனத்திலே எடுத்திருக்கின்றார். வரும் ஆண்டிலே பரிசீலிப்பதற்கு ஆவண செய்யலாம் என்றார்.

* அமைச்சர் தா.மோ. அன்பரசன் பதில் தாலிக்கு தங்கம் திட்டத்தை கிடப்பில்போட்டது அதிமுக
சட்டப்பேரவையில் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவித்து உறுப்பினர்கள் பேசியதாவது: பாப்பிரெட்டிப்பட்டி, கோவிந்தசாமி (அதிமுக): பகுதிநேர ஆசிரியர்கள் எப்போது பணி நிரந்தரம் செய்யப்படுவார்கள்.
அமைச்சர் சிவசங்கர்: எல்லா பெண்களும் சொத்து பதிவு செய்கிறார்களா… இல்லை.
கோவிந்தசாமி: எட்டபாடி பழனிசாமி முதல்வராக இருந்த போது தாலிக்கு தங்கம் என்று அறிவிக்கப்பட்டது. அதை விட்டுவிட்டு மாதம் ரூ.1000 வழங்குகிறீர்கள்.
அமைச்சர் சிவசங்கர்: திரும்பத்திரும்ப பொய் சொல்கிறார். அவர் காலத்திலேயே அந்த திட்டம் நிறுத்தப்பட்டுவிட்டது.
அமைச்சர் தாமோ அன்பரசன்: தாலிக்கு தங்கம் திட்டம் அறிவித்தபோது அதைப் பெற, 3 லட்சத்து 50 ஆயிரம் விண்ணப்பங்கள் வந்தன. தங்கம் விலை ஏற்றம் காரணமாக அந்த விண்ணப்பங்களை அப்படியே கிடப்பில் போட்டவர்கள்தான் நீங்கள்.
அமைச்சர் சிவசங்கர்: முதலில் 8ம் வகுப்பு படித்த பெண்களுக்கு திருமண உதவியாக ரூ.5 ஆயிரம் கொடுத்தவர் கலைஞர்தான். அதற்குப் பிறகு, பத்தாம் வகுப்பு படித்த பெண்களுக்கு ரூ.10 ஆயிரம் வழங்கினார். இதை மாற்றித்தான் பெயர் வைத்தது நீங்கள்தான்.
வேலுமணி (அதிமுக): தாலிக்கு தங்கம் திட்டம் அறிவித்தபோது கொரோனா தொ்ற்று வந்தது. பின்னர் தங்கத்துக்கு டெண்டர் கோரப்பட்டது. அதற்கு பிறகு ஆட்சி முடிந்தது. அப்படியே இருந்தாலும் அதை நீங்கள் ஏன் தொடரவில்லை. இவ்வாறு உறுப்பினர்கள் பேசினர்.

The post ஒன்றிய அரசு நிதி வழங்க மறுப்பு பொங்கல் பரிசு தரமுடியவில்லை: அமைச்சர் பதில் appeared first on Dinakaran.

Related Stories: