அக்கடிதத்தில், காரைக்கால் மீன்பிடித் துறைமுகத்திலிருந்து மீன்பிடிக்கச் சென்ற 10 இந்திய மீனவர்களையும் அவர்களது மீன்பிடி விசைப்படகையும் 08.01.2025 அன்று இலங்கைக் கடற்படையினர் கைது செய்யப்பட்டுள்ளதை மாண்புமிகு ஒன்றிய வெளியுறவுத் துறை அமைச்சர் அவர்களின் கவனத்திற்கு கொண்டு வருவதாக தெரிவித்துள்ள மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள், கைது செய்யப்பட்ட 10 மீனவர்களில், 6 மீனவர்கள் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் (5 பேர் மயிலாடுதுறை மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் மற்றும் ஒருவர் நாகப்பட்டினம் மாவட்டத்தைச் சேர்ந்தவர்) என்று குறிப்பிட்டுள்ளார்.
மீனவர்கள் தங்கள் வாழ்வாதாரத்திற்கு மீன்பிடித் தொழிலை மட்டுமே பெரிதும் நம்பியுள்ளதை ஒன்றிய வெளியுறவுத் துறை அமைச்சர் அவர்கள் அறிவார்கள் என்று குறிப்பிட்டுள்ள முதலமைச்சர், இலங்கைக் கடற்படையினார் இதுபோன்று மீனவர்களைச் சிறைபிடிப்பதால், அவர்களது குடும்பத்தினர் மிகுந்த துயரத்திற்கு ஆளாகியுள்ளனர் என்றும், தற்போதைய நிலவரப்படி 102 மீனவர்களும், 210 மீன்பிடி படகுகளும் இலங்கை வசம் உள்ளதாகவும் தனது கடிதத்தில் கோடிட்டுக் காட்டியுள்ளார். எனவே, உரிய தூதரக வழிமுறைகளை முன்னெடுத்து, இலங்கை அரசால் கைது செய்யப்பட்டுள்ள அனைத்து மீனவர்களையும், அவர்களது மீன்பிடிப் படகுகளையும் விரைவில் விடுவிக்க உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், ஒன்றிய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் அவர்களை தனது கடிதத்தில் வலியுறுத்திக் கேட்டுக் கொண்டுள்ளார்.
The post இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை தேவை: ஒன்றிய அமைச்சருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் appeared first on Dinakaran.