செங்கல்பட்டில் இருந்து மாமல்லபுரத்திற்கு கூடுதல் பேருந்துகள் இயக்க வேண்டும்: பொதுமக்கள் கோரிக்கை

செங்கல்பட்டு: செங்கல்பட்டில் இருந்து மாமல்லபுரத்திற்கு கூடுதல் பேருந்துகளை இயக்க வேண்டும் என பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். செங்கல்பட்டு மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் இருந்தும், மேல் மருவத்தூரில் இருந்து வருவோர் செங்கல்பட்டு வந்து மால்லபுரம் செல்கின்றனர். அதேபோல், அரசு மற்றும் தனியார் அலுவலகங்களுக்கு செல்வோர், செங்கல்பட்டிற்கு வந்து படித்து விட்டு செல்லும் கல்லூரி மற்றும் பள்ளி மாணவர்கள் தினமும் பேருந்துகளில் பயணம் செய்கின்றனர். மேலும், காஞ்சிபுரம், வேடந்தாங்கலுக்கு வரும் சுற்றுலா பயணிகளும் செங்கல்பட்டு வந்து மாமல்லபுரம் செல்கின்றனர். அவ்வாறு வந்து மாமல்லபுரம் செல்லும் சுற்றுலா பயணிகள் அங்கு புராதன சின்னங்களான கடற்கரை கோயில், ஐந்து ரதம், அர்ஜூனன் தபசு, வெண்ணெய் உருண்டை பாறை, புலிக்குகை உள்ளிட்டவற்றை பார்த்து மகிழ்கின்றனர். கோவளம் பகுதியில் உள்ள பாம்பு பண்ணைக்கும் செல்கின்றனர்.

அதேபோல், மாமல்லபுரத்தில் உள்ள பொதுமக்கள் பலர் செங்கல்பட்டு வந்து இங்கிருந்து ரயில் மூலம் சென்னையில் பல்வேறு இடங்களுக்கு வேலை செல்வோரும் போதிய போருந்துகள் இல்லாததால் அவதிப்பட்டு வருகின்றனர். பணி முடிந்து செங்கல்பட்டு வருவோர் மாமல்லபுரம் செல்ல போதிய அளவிலான பேருந்துகள் இயக்கப்படாததால் வீடு திரும்பி செல்ல முடியாமல் நீண்ட நேரம் செங்கல்பட்டு பேருந்து நிலையத்தில் காத்திருக்க வேண்டிய நிலை உள்ளதாக கூறப்படுகிறது. எனவே, சுற்றுலாப் பயணிகள், பொதுமக்கள் நலனை கருத்தில் கொண்டு சம்பந்தப்பட்ட போக்குவரத்து அதிகாரிகள் மாமல்லபுரத்துக்கு கூடுதல் பேருந்துகளை இயக்க விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இது குறித்து பயணிகள், சமூக ஆர்வலர்கள் கூறுகையில், மாமல்லபுரத்துக்கு கடந்த சில ஆண்டுகளாக குறைவான பேருந்துகளே இயக்கப்பட்டு வருகிறது. இதனால், வெளியூரிலிருந்து வரும் பயணிகள் கடும் சிரமமடைந்து வருகின்றனர். குறிப்பாக, போக்குவரத்துத் துறை அதிகாரிகளின் அலட்சியத்தால் சில ஆண்டுகளாக மாமல்லபுரத்துக்கு மிக குறைவான பேருந்துகளே இயக்கப்பட்டு வருகிறது. இது குறித்து, போக்குவரத்துத் துறை அதிகாரிகளுக்கு பலமுறை புகார் தெரிவித்தும், பலமுறை நேரில் சென்று மனு கொடுத்தும் இதுவரை எந்தவித நடவடிக்கை எடுக்காமல் அலட்சியமாக செயல்படுகின்றனர். சில நேரங்களில், புகார் தெரிவிக்க போன் மூலம் தொடர்பு கொண்டால் அதிகாரிகள் போனை எடுப்பதில்லை. எனவே, மாவட்ட நிர்வாகம் இது குறித்து தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்றனர்.

The post செங்கல்பட்டில் இருந்து மாமல்லபுரத்திற்கு கூடுதல் பேருந்துகள் இயக்க வேண்டும்: பொதுமக்கள் கோரிக்கை appeared first on Dinakaran.

Related Stories: