ஆரணி, ஜன.9: ஆற்காடு- விழுப்புரம் சாலையில் ஆரணி டவுனில் ஆக்கிரமிப்புகளை அகற்ற விடாமல் அதிகாரிகளுடன் வாக்குவாதம் செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது. ஆரணி டவுன் காந்தி சாலையில் இருந்து இரும்பேடு கூட்ரோடு வரை (ஆற்காடு- விழுப்புரம்) 2.04 கிலோ மீட்டர் தூரத்திற்கு நெடுஞ்சாலைத்துறை சார்பில் ஒருங்கிணைந்த உள்கட்டமைப்பு சாலை மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ₹5.86 கோடி மதிப்பில் புதிய சாலை, கல்வெர்ட் மற்றும் பக்க கால்வாயுடன் சாலைகள் அமைக்கும் பணிகள் நடந்து வருகிறது. இந்நிலையில், ஆற்காடு சாலையில் உள்ள மாங்காமரம் பஸ் நிறுத்தம் பகுதியில் 3 வழிச்சாலை சந்திப்பு, இரும்பேடு கூட்ரோடு வரை தனிநபர்கள் சாலையை ஆக்கிரமித்து கடைகள், வணிக வளாகம், வீடுகள், கறிக்கடை, ஓட்டல்கள், திருமண மண்டபங்கள் கட்டியுள்ளனர். சாலையின் மேல் தடுப்பு சுவர்கள், இரும்பு சீட்கள் அமைத்து ஆக்கிரமித்துள்ளனர்.
தற்போது சாலை அமைக்கும் பணிகள் நடந்து வருவதால் நெடுஞ்சாலையை ஆக்கிரமித்து கட்டியுள்ள கடைகள், தடுப்பு சுவர்கள், இரும்பு தகர சீட் உள்ளிட்ட ஆக்கிரமிப்புகளை நெடுஞ்சாலைத்துறை உதவி கோட்ட பொறியாளர் நாராயணன் தலைமையில் உதவி பொறியாளர் வரதராஜன் மற்றும் அதிகாரிகள் மற்றும் சாலை பணியாளர்கள் ஈடுபட்டனர். அப்போது, சாலைகளை ஆக்கிரமித்து கடைகள் கட்டியுள்ள சிலர் அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு, ஆக்கிரமிப்புகளை அகற்றவிடாமல் தடுத்து நிறுத்தி தகராறில் ஈடுபட்டனர்.
தொடர்ந்து, அதிகாரிகள் சம்பந்தப்பட்ட நபர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி, ஏற்கனவே ஆக்கிரமிப்பு அகற்றுவது தொடர்பாக நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளதது. அதனால், நாளைக்குள்(இன்று) ஆக்கிரமிப்பாளர்கள் தாங்களாகவே ஆக்கிரமிப்புகளை முழுமையாக அகற்றிக்கொள்ள வேண்டும். தவறும்பட்சத்தில் நாங்கள் ஆக்கரமிப்புகளை முழுமையாக அகற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்தனர். இந்நிலையில், ஆரணி டவுனில் இருந்து இரும்பேடு கூட்ரோடு வரையுள்ள ஆற்காடு- விழுப்புரம் நெடுஞ்சாலையில் போக்குவரத்து இடையூறாக உள்ள மின்கம்பங்கள் மற்றும் கட்டிட ஆக்கிரமிப்புகளை முழுமையாக அகற்றி சாலை மற்றும் கல்வெர்ட் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
The post ஆக்கிரமிப்புகளை அகற்றவிடாமல் அதிகாரிகளுடன் வாக்குவாதம் ஆரணியில் பரபரப்பு ஆற்காடு- விழுப்புரம் நெடுஞ்சாலையில் appeared first on Dinakaran.