முட்டுக்காடு படகு குழாமில் மிதவை உணவகம் திறப்பு: சுற்றுலா பயணிகள் உற்சாகம்

சென்னை: கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள முட்டுக்காடு படகு குழாமில், நவீன மிதவை உணவகம் மக்கள் பயன்பாட்டிற்காக திறக்கப்பட்டுள்ளது. சென்னையின் முக்கிய சுற்றுலா தலங்களில் ஒன்றாக, கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள முட்டுக்காடு படகு குழாம் அமைந்துள்ளது. தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகம் சார்பில் செயல்படும் இந்த படகு குழாமில், மக்கள் சாகச பயணம் மேற்கொள்ளும் விதமாக மிதவை படகுகளும், இயந்திர படகுகளும் இயக்கப்பட்டு வருகின்றன. தொடர் விடுமுறை மற்றும் வார விடுமுறையில் குடும்பத்தினருடன் ஏராளமான சுற்றுலா பயணிகள் இங்கு வந்து, படகு சவாரி செய்து உற்சாகமடைகின்றனர். இதனால், விடுமுறை நாட்களில் முட்டுக்காடு படகு குழாமில், சுற்றுலா பயணிகள் கூட்டம் நிறைந்து காணப்படுகிறது. இந்நிலையில், தமிழகத்தின் முதல் மிதவை உணவகம், முட்டுக்காடு பகுதியில் ரூ.5 கோடியில் அமைக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகம் மற்றும் கொச்சியை சேர்ந்த கிராண்ட்யூனர் மரைன் இன்டர்நேஷனல் நிறுவனத்தின் மூலமாக தனியார் மற்றும் பொது பங்களிப்பு திட்டத்தின் மூலம் இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது. 2 அடுக்குகளுடன் இந்த உணவக கப்பல் அமைக்கப்பட்டுள்ளது. 125 அடி நீளம், 25 அடி அகலத்தில் உருவாக்கப்பட்டுள்ளது. உணவகத்தின் தரைத்தளம் முழுவதும் குளிரூட்டப்பட் வசதியுடன் அமைக்கப்பட உள்ளது. அதேபோல் முதல் தளம் திறந்தவெளி தளமாகவும், மேல் தளத்தில் அமர்ந்து உணவு உண்டு பயணிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. சமையலறை, சேமிப்பு அறை, கழிவறை மற்றும் இயந்திர அறை அமைக்கப்பட்டுள்ளது. இந்த மிதவை உணவகம் 60 குதிரை சக்தி திறனுடைய இயந்திரம் மூலம் இயக்கப்படும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. அதன்படி நேற்று மிதவை உணவகம் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக திறந்து வைக்கப்பட்டுள்ளது. இது சுற்றுலா பயணிகளிடையே வரவேற்பை பெற்றுள்ளது.

 

The post முட்டுக்காடு படகு குழாமில் மிதவை உணவகம் திறப்பு: சுற்றுலா பயணிகள் உற்சாகம் appeared first on Dinakaran.

Related Stories: