பாமக நிறுவனர் ராமதாஸ்: தமிழ்நாட்டில் ஆளுநர் இல்லாமலேயே ஆளுநர் உரை படிக்கப்பட்டிருக்கிறது. உரையை படிப்பதற்காக வந்த ஆளுனர், ஏற்றுக்கொள்ள முடியாத காரணங்களைக் கூறி, உரையை படிக்காமல் வெளிநடப்பு செய்திருப்பதை ஏற்க முடியாது.
மதிமுக பொதுச்செயலாளர் வைகோ: ஆளுநர் ஆர்.என்.ரவி தமிழ்நாடு அரசு தயாரித்துள்ள உரையை வாசிக்காமலேயே வெளியேறிவிட வேண்டும் என்று முன்கூட்டியே முடிவு செய்து கொண்டு அதையே நிறைவேற்றிக் காட்டியிருக்கிறார். தமிழ்நாடு சட்டமன்றத்தை அவமதித்துள்ள ஆளுநர் ஆர்.என். ரவி செயல் கடும் கண்டனத்துக்குரியது. தமிழ்நாட்டில் தொடர்ந்து இதுபோன்று மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில அரசின் நடவடிக்கைகளுக்கு குந்தகம் விளைவிப்பதும், அரசியல் கட்சிப் பிரதிநிதி போல அரசுக்கு எதிராக அவதூறுகளை ஆளுநர் அள்ளி வீசி வருவதும் அவர் வகித்து வரும் அரசியல் சாசன பொறுப்புக்கு ஏற்றது அல்ல.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் பெ.சண்முகம்: தமிழ்நாடு சட்டப்பேரவை மரபுகளை மதிக்காமலும், ஆளுநருக்கு உள்ள கடமைகளை நிறைவேற்றாமலும் ஒன்றிய பாஜ அரசு விரும்புகிறபடி நடந்து கொள்வதை ஆளுநர் ஆர்.என்.ரவி வழக்கமாக கொண்டுள்ளார். சட்டமன்றத்திலிருந்து வெளிநடப்பு செய்வதையே வாடிக்கையாகவும் தேசிய கீதத்தை அவமதிக்கும் வகையிலும் நடந்து கொண்டுள்ள ஆளுநர் ஆர்.என்.ரவியை, ஆளுநர் பதவியிலிருந்து வெளியேற வேண்டும். தமிழ்நாடு ஆளுநரின் இந்த ஜனநாயக விரோத நடவடிக்கையினை கண்டித்து அனைத்து ஜனநாயக சக்திகளும் வலுவான கண்டனக் குரலெப்பிட முன்வர வேண்டும்.
பாமக தலைவர் அன்புமணி : தமிழ்நாட்டின் மரபுகளையும், தமிழக மக்களின் உணர்வுகளையும் ஆளுநர் புரிந்து கொள்ள வேண்டும். தமிழ்நாட்டில் சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு உள்பட ஏராளமான விவகாரங்கள் உள்ளன. அவற்றை விடுத்து, கவனத்தை திசைதிருப்பும் வகையிலான எந்த செயலையும் ஏற்றுக் கொள்ள முடியாது. அவை தவிர்த்திருக்கப்பட வேண்டும்.
கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சி தலைவர் ஈஸ்வரன் கூறியதாவது: தேசிய கீதத்திற்கு மதிப்பளிக்க வேண்டும் என கூறும் ஆளுநர் ஆர்.என்.ரவி சென்றாண்டு நடந்து கொண்ட விதத்தை யாரும் மறக்கவில்லை. தொடர்ந்து ஆளுநர் ஆர்.என்.ரவி இந்த நிலையை கடைபிடித்தால் தமிழகத்தின் வளர்ச்சி என்பது மிகவும் பாதிக்கக்கூடிய ஒன்றாக மாறி விடும்.
தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன்: தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி இருக்கை முன்பு வந்தவுடன் தமிழ்தாய் வாழ்த்து பாடி முடித்த உடனே, தேசிய கீதம் பாடப்பட வேண்டும் என கூறுவது ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்று. இது வன்மையான கண்டனத்திற்குரியது.
மனிதநேய மக்கள் கட்சி தலைவர் எம்.எச்.ஜவாஹிருல்லா: மக்கள் நலத்திட்டங்களை செயல்படுத்துவதற்கு தேவையான நிதித்தேவைகளை பெற்று தருவதற்கு முயற்சி எடுக்காத ஆளுநர் ஆர்.என் ரவி, பிரச்சனைகளை திசைத்திருப்ப மீண்டும் மீண்டும் நாட்டுப்பண் விவகாரத்தை முன்னெடுப்பது சட்டமன்ற மரபுகளையும், தமிழக மக்களின் உணர்வுகளை களங்கபடுத்தும் செயலாகும். தொடர்ந்து தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் மன்றத்தின் மாண்பை சீர்குலைக்கும் ஆளுநர் ஆர்.என்.ரவியை குடியரசு தலைவர் தலையிட்டு அவரை பதவி நீக்கம் செய்ய வேண்டுமென கேட்டுக் கொள்கிறேன். ஆளுநரின் செயல்பாடுகள் குறித்த நீதிமன்ற தீர்ப்புகளுக்கு விரோதமாக செயல்படும் ஆளுநரின் செயல்களுக்கு வன்மையான கண்டனங்களை தெரிவித்துக் கொள்கிறேன்.
அமமுக பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன்: நூற்றாண்டு கண்ட வரலாற்றுச் சிறப்புமிக்க தமிழக சட்டப்பேரவையில் காலம் காலமாக பின்பற்றப்பட்டுவரும் அவை மரபுகளை மீண்டும் மீறியுள்ள தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியின் செயல்பாடு மிகுந்த வேதனையளிக்கிறது.
The post சட்டமன்ற மரபுகளை மதிக்காமல், தமிழக மக்களை அவமதிக்கும் ஆளுநர் ரவியை பதவி நீக்க வேண்டும்: அரசியல் கட்சி தலைவர்கள் வலியுறுத்தல் appeared first on Dinakaran.