அதிமுக ஆட்சியில் சிறைகளில் முறைகேடு புகார்.. விரிவான விசாரணை தேவை என முன்னாள் சிறை அலுவலர் கோரிக்கை

மதுரை: அதிமுக ஆட்சியில் சிறைகளில் முறைகேடு என புகார் எழுந்த நிலையில், விரிவான விசாரணை தேவை என முன்னாள் சிறை அலுவலர் ஐகோர்ட் கிளையில் கோரிக்கை விடுத்துள்ளார். மதுரை மத்திய சிறையில் இருக்கும் கைதிகள் எழுதுபொருள்கள் உள்ளிட்ட பல்வேறு பொருள்களைத் தயாரிக்கின்றனா். இவை பல்வேறு அரசுத்துறை அலுவலகங்களில் விற்பனை செய்யப்படுகின்றன. இதில் கிடைக்கும் வருமானத்தில் ஒருபகுதி கைதிகளுக்கு ஊதியமாகவும் வழங்கப்படுகிறது. இந்நிலையில், மதுரை மத்திய சிறையில், கடந்த 2016 முதல் 2021ம் ஆண்டுவரை சிறைக் கைதிகள் மூலம் பொருள்கள் தயாரிக்கவும், அதற்கான மூலப்பொருள்களை வாங்கியதிலும், விற்பனை செய்ததன் மூலம் கிடைத்த வருவாயிலும் பல கோடி ரூபாய் மோசடி நடந்ததாக புகார் எழுந்தது.

இதுகுறித்து ஏற்கெனவே வழக்கறிஞர் புகழேந்தி உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்திருந்த நிலையில், அதைத் தொடர்ந்து அப்போதைய சிறைத்துறை டி.ஜி.பி-யால் மதுரை மத்திய சிறையில் பணியாற்றிய 9 அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டனர். மேலும், இந்த மோசடிப் புகார் தொடர்பாக மத்திய கணக்கு தணிக்கைத்துறை அதிகாரிகள் மதுரை மத்திய சிறையில் உள்ள ஆவணங்களையும், மூலப்பொருள்களை கொள்முதல் செய்யப்பட்ட நிறுவனங்களில் விற்பனை செய்யப்பட ரசீதுகளையும் ஆய்வு செய்ததில் ரூ.ரூ.1.63 கோடி மோசடி நடந்துள்ளது தெரிய வந்தது. இந்த வழக்குக்கான ஆதாரங்களைத் திரட்டும் வகையில் தமிழகம் முழுவதும் 11 இடங்களில் ஊழல் தடுப்புப் பிரிவினா் வெள்ளிக்கிழமை திடீா் சோதனை செய்தனா். முறைகேடு தொடர்பாக மதுரை சிறைத்துறை எஸ்பி உட்பட 11 பேர் மீது லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

இந்நிலையில், 2016-21 அதிமுக ஆட்சிக் காலத்தில் மத்திய சிறைகளில் நடந்த முறைகேடு குறித்து விரிவான விசாரணை நடத்தக் கோரி உயர்நீதிமன்ற மதுரை கிளையில் முன்னாள் சிறை அலுவலர் மனு தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில், மதுரை சிறையை விட புழல், பாளையங்கோட்டை, கடலூர் சிறைகளில் பெரிய அளவில் உழல் நடைபெற்றுள்ளது. மற்ற சிறைகளில் நடந்த ஊழல்களையும் லஞ்ச ஒழிப்புத்துறைக்கு
விசாரணைக்கு எடுத்துக் கொள்ள வேண்டும். நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் மதுரை, புழல், பாளையங்ககோட்டை, சேலம், திருச்சி, கடலூர் சிறையில் சோதனை நடத்த வேண்டும். வெறும் கண்துடைப்பாக மதுரை சிறையில் பணியாற்றிய அலுவலர்கள் மீது மட்டும் இந்த வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது என குறிப்பிடப்பட்டு இருந்தது. விசாரணை முடிந்த நிலையில் உயர்நீதிமன்ற மதுரை கிளை தேதி குறிப்பிடாமல் தீர்ப்பை ஒத்திவைத்தது.

The post அதிமுக ஆட்சியில் சிறைகளில் முறைகேடு புகார்.. விரிவான விசாரணை தேவை என முன்னாள் சிறை அலுவலர் கோரிக்கை appeared first on Dinakaran.

Related Stories: