பொங்கல் பண்டிகையை ஒட்டி ஜன.10-ம் தேதியில் இருந்து 14,104 சிறப்பு பேருந்துகள் இயக்கம்: அமைச்சர் சிவசங்கர் அறிவிப்பு

சென்னை: பொங்கல் பண்டிகையை ஒட்டி ஜன.10-ம் தேதியில் இருந்து 14,104 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார். சிறப்பு பேருந்துகள் இயக்கம் காரணமாக போக்குவரத்து நெரிசலை தவிர்க்க காவல்துறை, நெடுஞ்சாலைத்துறை, போக்குவரத்துறை அதிகாரிகளுடன் அமைச்சர் சிவசங்கர் ஆலோசனை மேற்கொண்டார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர்; பொங்கல் பண்டிகையையொட்டி தமிழகத்தில் சென்னையிலிருந்து மற்ற மாவட்டங்களுக்கும் பிற மாவட்டங்களுக்கு இடையேயும் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன.

வருகின்ற 10 11 12 13 ஆகிய நாட்களுக்கு 14 ஆயிரத்து 104 பேருந்துகள் இயக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. வழக்கமாக இயக்கப்படும் 8,368 பேருந்துகளுடன் குறிப்பிட்ட இந்த நாட்களில் கூடுதலாக 5736 பேருந்துகள் என மொத்தம் 14 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. கோயம்பேடு கிளாம்பாக்கம் மாதவரம் ஆகிய மூன்று பேருந்து நிலையத்திலிருந்து பல்வேறு ஊர்களுக்கு பேருந்துகள் இயக்கப்பட உள்ளது. மொத்தம் 7 லட்சத்து 75 ஆயிரத்து 720 பேர் வரை சென்னையில் இருந்து மற்ற மாவட்டங்களுக்கு பயணம் மேற்கொள்வார்கள் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

கடந்தாண்டு 6 லட்சத்து 54 ஆயிரத்து 472 பேர் பயணம் மேற்கொண்டுள்ளனர். கோயம்பேட்டிலிருந்து இசிஆர் மார்க்கமாக செல்லும் பேருந்துகளும் காஞ்சிபுரம் வேலூர் திருத்தணி மார்க்கமாக செல்லும் பேருந்துகள் இயக்கப்படுகிறது. மாதவரத்தில் இருந்து பொன்னேரி ஊத்துக்கோட்டை மற்றும் ஆந்திர மாநிலம் செல்லும் பேருந்துகளுடன் திருச்சி சேலம் கும்பகோணம் திருவண்ணாமலை செல்லும் குறிப்பிட்ட சில பேருந்துகள் இயக்கப்படும். மற்ற அனைத்து பேருந்துகளும் கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்திலிருந்து இயக்கப்படும் என முடிவு செய்யப்பட்டுள்ளது.

பாண்டிச்சேரி கடலூர் சிதம்பரம் திருச்சி மார்க்கம் , திருச்சி மார்க்கம் , மதுரை தூத்துக்குடி செங்கோட்டை , திருநெல்வேலி சேலம் கோயம்புத்தூர், வந்தவாசி போளூர் திருவண்ணாமலை , திருவண்ணாமலை கும்பகோணம் தஞ்சாவூர் உள்ளிட்ட வழித்தட பேருந்துகள் கிளாம்பாகத்தில் இருந்து இயக்கப்படும். இதேபோல் பொங்கல் பண்டிகை முடிந்து சென்னை திரும்ப வசதியாக 15 ஆம் தேதி முதல் 19ஆம் தேதி வரை வழக்கமாக இயக்கப்படும் 10,460 பேருந்துகளுடன் சிறப்பு பேருந்துகளாக 5340 பேருந்துகளும் சேர்த்து 15,800 பேருந்துகள் இயக்க முடிவு செய்யபப்ட்டுள்ளது. வழக்கமாக நாளொன்றுக்கு 2092 பேருந்துகள் இயக்கப்படும் நிலையில் பயணிகள் வசதிக்காக சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன என்று கூறினார்.

The post பொங்கல் பண்டிகையை ஒட்டி ஜன.10-ம் தேதியில் இருந்து 14,104 சிறப்பு பேருந்துகள் இயக்கம்: அமைச்சர் சிவசங்கர் அறிவிப்பு appeared first on Dinakaran.

Related Stories: