தமிழ்நாடு அரசின் பொது நிகழ்வுகளின் ஆரம்பத்தில் தமிழ் தாய் வாழ்த்தும், நிகழ்வின் நிறைவில் தேசிய கீதம் பாடுவது பல பத்தாண்டுகளாக மரபாக கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. இதனை நன்கறிந்த ஆளுநர், தமிழ்நாடு அரசு தேசிய கீதத்தையும், அரசியலமைப்பு சட்டத்தையும் அவமதித்து வருவதாக ஆளுநர் கூறுவது அப்பட்டமான அவதூறு பரப்பும் நோக்கம் கொண்டதாகும். நாட்டின் உச்ச நீதிமன்றம் ஆளுநரின் கடமைப் பொறுப்புகளை சுட்டிக்காட்டி, அறிவுறுத்திய உத்தரவுகளையும் அலட்சியப்படுத்தி வருகிறார். சட்டப் பேரவையில் ஆளுநர் உரை நிகழ்வுகள் முடிவடையும் வரை இருந்து, தேசிய கீதத்தை மதிக்க தவறிய ஆளுநர் ஆர்.என்.ரவியின் மரபுகளையும், அமைதி நிலையினையும் சீர்குலைக்கும் தீய உள்ள நோக்கம் கொண்ட தொடர் நடவடிக்கைகளை இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு வன்மையாக கண்டிக்கிறது.
ஆளுநர் உரை கடந்த நான்கு ஆண்டுகளில் நிறைவேற்றிய திட்டங்களையும், செயல்பாடுகளையும், இயற்கை பேரிடர் காலத்தில் மேற்கொண்ட நிவாரண நடவடிக்கைகளை தொகுத்து வழங்கியுள்ளது. ஒன்றிய அரசு, மாநில அரசுகளுடன் செய்து கொள்ள வேண்டிய நிதிப் பகிர்வு கோரிக்கைகள் மீது பதினாறாவது நிதி ஆணையம் தக்க பரிந்துரை வழங்கும் என நம்பிக்கை தெரிவித்துள்ளது. மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்புத் திட்டத்திற்கு ஒன்றிய அரசு போதிய நிதி ஒதுக்காமல் பாரபட்சம் காட்டுவதால், வேலை வழங்குவதில் சரிவு ஏற்பட்டு வருவதில் ஆளுநர் உரை கவனம் செலுத்தவில்லை.
சிறு, குறு, நடுத்தரத் தொழில் துறையினரின் மின் கட்டணம், நிலைக் கட்டணம் போன்ற கோரிக்கைகள் மீது ஆளுநர் உரை எதுவும் குறிப்பிடாதது ஏமாற்றம் அளிக்கிறது. நிரந்தரத் தன்மை வாய்ந்த பணியிடங்களில் வெளிமுகமை முறையில் பணி அமர்த்தல், தொழிற் சங்கங்கள் பதிவு செய்வதில் நீடிக்கும் கால தாமதம் போன்றவைகளும் ஆளுநர் உரையில் இடம் பெறவில்லை. இது போன்ற மக்கள் நலன் சார்ந்த கோரிக்கைகளில் இருந்து, கவனத்தை திசை திருப்புவதாக ஆளுநர் நடவடிக்கை அமைந்து விட்டது.
மக்களின் எதிர்பார்ப்புகள் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்தின் போது கவனம் செலுத்த வேண்டும் என இந்தியக் கம்யூனிஸ்டு கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு தமிழ்நாடு அரசைக் கேட்டுக் கொள்கிறது. இவ்வாறு தெரிவித்துள்ளார்.
The post தமிழ்நாட்டில் நிலவி வரும் அமைதி நிலையை ஆளுநர் சீர்குலைத்து வருகிறார்: முத்தரசன் கண்டனம் appeared first on Dinakaran.