ஒருபோக பாசனத்திற்காக வைகை அணையில் நீர்திறப்பு அதிகரிப்பு

ஆண்டிபட்டி/தேனி, ஜன. 4: வைகை அணையின் நீர் மட்டம் 65 அடிக்கு மேல் நீடிப்பதால், ஒருபோக பாசனத்திற்கான தண்ணீர் திறப்பு மேலும் அதிகரிக்கப்பட்டுள்ளது. தேனி மாவட்டம், ஆண்டிபட்டி அருகே, 71 அடி உயரமுள்ள வைகை அணை உள்ளது. இதில், தேக்கப்படும் தண்ணீர் மதுரை, தேனி, திண்டுக்கல், ராமநாதபுரம், சிவகங்கை ஆகிய 5 மாவட்டங்களின் குடிநீர், பாசனத்திற்கு பயன்படுத்தப்படுகிறது. கடந்த மாதம் பூர்வீக பாசனப் பகுதிகளுக்கு தண்ணீர் திறக்கபட்டதால் அணை நீர்மட்டம் 49 அடியாகக் குறைந்தது. அதன்பின்னர் பெய்த கனமழையால் 62 அடிக்கு உயர்ந்தது. இதையடுத்து ஒருபோக பாசனத்திற்கு 500 கனஅடி நீர் திறக்கப்பட்டது.

இருப்பினும் பெரியாறு அணையிலிருந்து நீர் திறப்பு காரணமாக, வைகை அணைக்கு நீர்வரத்து 1000 கனஅடிக்கு குறையாமல் இருந்து வருவதால், கடந்த டிச.31ல் நீர்மட்டம் மீண்டும் 65 அடியை கடந்தது. இதையடுத்து அணையிலிருந்து நீர் திறப்பு 1069 கன அடியாக அதிகரிக்கப்பட்டது. இந்த நிலையில் நேற்று முன் தினம் மாலை முதல் 1,319 கனஅடி நீர் திறக்கப்படுகிறது.

கூடுதல் தண்ணீர் திறப்பால் திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை, மதுரை மாவட்டம் வாடிப்பட்டி, மேலூர், மதுரை வடக்கு, திருமங்கலம், சிவகங்கை மாவட்டம் திருப்புத்தூர் பகுதிகளில் உள்ள சுமார் 1,05,002 ஏக்கர் நிலங்கள் பயன்பெறும். இதனால் அப்பகுதி விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
நேற்று காலை நிலவரப்படி வைகை அணையின் நீர்மட்டம் 65.12 அடி. நீர்வரத்து வினாடிக்கு 866 கனஅடி. அணையில் இருந்து வினாடிக்கு 1319 கனஅடி நீர் வெளியேற்றப்படுகிறது. நீர்இருப்பு 4,658 மில்லியன் கனஅடி.

152 உயரமுள்ள பெரியாறு அணையின் நீர்மட்டம் 126.60 அடி. அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 486 கனஅடி. அணையில் இருந்து வினாடிக்கு 1100 கனஅடி நீர் வெளியேற்றப்படுகிறது. நீர் இருப்பு 3,964 மில்லியன் கன அடி. தேவதானப்பட்டி அருகே 57 அடி உயரமுள்ள மஞ்சளாறு அணையின் நீர்மட்டம் 52.70 அடி. நீர்வரத்து 35 கனஅடி. அணையில் இருந்து வினாடிக்கு 80 கனஅடி நீர் வெளியேற்றப்படுகிறது. நீர் இருப்பு 389.50 மில்லியன் கன அடி.

பெரியகுளம் அருகே 126.28 அடி உயரமுள்ள சோத்துப்பாறை அணையின் நீர்மட்டம் 122.18 அடி. நீர்வரத்து 14 கனஅடி. நீர் திறப்பு 27 கன அடி. நீர்இருப்பு 95.48 மில்லியன் கன அடி. உத்தமபாளையம் அருகே 52.55 அடி உயரமுள்ள சண்முகநதி அணையின் நீர்மட்டம் 48.70 அடி. நீர்வரத்து இல்லை. நீர் வெளியேற்றம் 14.47 கனஅடி. நீர் இருப்பு 67.43 மில்லியன் கனஅடி.

The post ஒருபோக பாசனத்திற்காக வைகை அணையில் நீர்திறப்பு அதிகரிப்பு appeared first on Dinakaran.

Related Stories: