கெங்கவல்லி, ஜன.6: கெங்கவல்லி பஸ் ஸ்டாப்பில், சாலை விரிவாக்க பணிக்காக, ஆக்கிரமிப்பை அகற்றாமல், சென்டர் மீடியன் அமைத்ததால், போக்குவரத்து பாதிப்பட்டு வாகன ஓட்டிகள் சிரமப்பட்டு வருகின்றனர்.
கெங்கவல்லி பஸ் ஸ்டாப் குறுகலான சாலையில் உள்ளதால், பள்ளிக்குச் செல்லும் மாணவர்கள், பணிக்கு செல்வோர் சிரமப்பட்டனர். இதனையடுத்து, சாலை அகலப்படுத்தும் பணிக்காக ₹37.50 லட்சம் நிதி ஒதுக்கி கலெக்டர் பிருந்தாதேவி உத்தரவிட்டார். தற்போது கெங்கவல்லி பஸ் ஸ்டாப் பகுதியில், சென்டர் மீடியன் அமைக்கப்பட்டு வாகனங்கள் சென்று வருகின்றன. இந்த சாலை 11 மீட்டர் அளவுக்கு அகலப்படுத்த வேண்டும். ஆனால், அவ்வாறு அமைக்காததால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதனால் வாகன ஓட்டிகள் நீண்ட நேரம் காத்திருந்து செல்ல வேண்டி உள்ளது. வணிக நிறுவனங்கள் முன்புறம் செய்துள்ள ஆக்கிரமிப்பை முழுமையாக அகற்றி இருந்தால், போக்குவரத்து நெரிசல் ஏற்படாது. தற்போது நடுரோட்டில் சென்டர் மீடியன் அமைக்கப்பட்டதால், பயணிகள் இறக்கி விடும் போது, அவர்கள் கடந்து செல்ல முடியாமல், வாகன ஓட்டிகள் பின்புறம் நின்று காத்திருக்க வேண்டி உள்ளது.
எனவே, வணிக நிறுவனங்களில் முன்புறம் உள்ள ஆக்கிரமிப்பை அகற்றி சென்டர் மீடியன் அமைக்கப்பட்ட இடத்தில் சாலை விரிவாக்க பணிகளை மேற்கொள்ள வேண்டும் என வாகன ஓட்டிகள் நெடுஞ்சாலைத்துறைக்கு கோரிக்கை
விடுத்துள்ளனர்.
The post ஆக்கிரமிப்பை அகற்றாமல் சென்டர் மீடியன் அமைப்பு appeared first on Dinakaran.