மதுரை, ஜன. 4: மதுரை, கோரிப்பாளையம் மேம்பால திட்டத்தின் கீழ், பாலம் ஸ்டேஷன் சாலையில் மழைநீர் வடிகால் கட்டுவதற்காக போக்குவரத்து மாற்றம் செய்ய முடிவு செய்யப்பட்டு உள்ளது.
மதுரை நகரின் போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு காணும் விதமாக, கோரிப்பாளையத்தில் நெடுஞ்சாலைத்துறை சார்பில் ரூ.190.40 கோடியில் மேம்பாலம் கட்டப்பட்டு வருகிறது.
மொத்தம், 61 தூண்களுடன் 2 கி.மீ நீளத்த்தில் இந்த மேம்பாலம் அமைய உள்ளது. இதன்படி தமுக்கத்தில் துவங்கும் பாலத்தின் ஏறுதளம் கோரிப்பாளையம் சந்திப்பு மற்றும் வைகை ஆற்றில் புதிதாக கட்டப்படும் பாலம் வழியாக 1.3 கி.மீ நீளம் மற்றும் 12 மீட்டர் அகலத்தில் ஒரு திசை வழித்தடமாக சென்று நெல்பேட்டை அண்ணா சிலை சந்திப்பில் இறங்கும் வகையில் கட்டப்பட உள்ளது.கடந்த, 16ம் தேதி நெடுஞ்சாலைத்துறையின் கட்டுமான பிரிவு தலைமை பொறியாளர் சத்தியபிரகாஷ், இந்த மேம்பால பணிகளை ஆய்வு செய்தார். அவரது ஆலோசனைப்படி மீனாட்சி கல்லூரி சாலையில் கட்டப்பட்டுள்ள தடுப்புச் சுவரிலிருந்து ஏவி மேம்பாலத்திற்கு செல்ல தற்காலிக பாதை அமைக்கப்பட்டு வருகிறது.
இதனிடையே, பாலம் ஸ்டேஷன் சாலையில் மேம்பாலம் இறங்கும் இடத்தில் வலதுபுறத்தில், தடுப்புச் சுவர் கட்டப்பட்டுள்ளதுடன், 10 மின்கம்பங்கள் மாற்றப்பட்டுள்ளது. அடுத்ததாக இரண்டு மின்மாற்றிகள் இடமாற்றம் செய்யப்பட உள்ளன.இதனுடன், 100 மீட்டர் அளவிற்கு பாதாள சாக்கடை திட்ட குழாய்களும், குடிநீர் குழாய்களும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளன. அடுத்ததாக, சாலையின் இடதுபுறத்தில் மழைநீர் வடிகால் கட்டுவதற்காக வலதுபுறத்தில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட உள்ளது. அப்பணிகளுக்காக சாலையில் உள்ள மரங்கள் வெட்டி அகற்றப்பட உள்ளதாகவும், போக்குவரத்து மாற்றம் செய்ய போலீசாரிடம் அனுமதி கோரப்பட்டுள்ளதாகவும் நெடுஞ்சாலைத்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
The post கோரிப்பாளையம் மேம்பால திட்டம்; பாலம் ஸ்டேஷன் சாலையில் போக்குவரத்தை மாற்ற முடிவு appeared first on Dinakaran.