அலங்காநல்லூர்: தைப்பொங்கல் பண்டிகை நெருங்குவதையொட்டி அலங்காநல்லூர் பகுதியில் வெல்லம் தயாரிக்கும் பணி மும்முரமாக நடந்து வருகிறது. மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் பகுதியில் செம்புகுடிப்பட்டி, அய்யனகவுண்டன்பட்டி, வலசை, கொண்டையம்பட்டி, கல்லணை, சம்பக்குளம் உள்ளிட்ட பல கிராமங்களில் விவசாயிகள் கரும்பு சாகுபடி செய்து வருகின்றனர். தமிழர் திருநாளான தைப்பொங்கல் பண்டிகை ஜன.14ம் தேதி கொண்டாடப்படுகிறது. பொங்கல் பண்டிகையன்று வீடுகள்தோறும் வாசலில் பொங்கல் வைத்து வழிபடுவது வழக்கம். இனிப்பு பொங்கல் தயாரிக்க வெல்லம் முக்கிய பொருளாகும். இதில் அலங்காநல்லூர் வெல்லத்திற்கு தனி மவுசு. தைப்பொங்கல் பண்டிகை நெருங்குவதையொட்டி அலங்காநல்லூர் பகுதியில் கரும்பு அறுவடை செய்யப்பட்டு வெல்லம் தயாரிக்கும் பணி மும்முரமாக நடந்து வருகிறது.
இங்கு தயாரிக்கப்படும் மண்டை வெல்லம் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கும், கேரளா உள்ளிட்ட வெளி மாநிலங்களுக்கும் அனுப்பி வைக்கப்படுகின்றன. மொத்த வியாபாரிகள் குறைந்த விலைக்கு கொள்முதல் செய்வதால் அரசே கொள்முதல் செய்து ரேஷன் கடைகள் மூலம் விற்பனை செய்ய வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதுகுறித்து கல்லணையை சேர்ந்த கரும்பு விவசாயி ராஜா (63) கூறுகையில், ‘பல ஆண்டுகளாக கரும்பு சாகுபடி செய்து வெல்லம் தயாரிக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறோம். ஒரு நாளைக்கு 500 கிலோ வரை வெல்லம் தயார் செய்வோம். கிலோ ரூ.60 முதல் ரூ.65 மொத்த விலைக்கு கொள்முதல் செய்யப்படுகிறது. ஒரு ஏக்கரில் கரும்பு பயிரிட்டால் 1000 கிலோ வெல்லம் தயாரிக்கலாம். வருடத்தில் 10 மாதம் வெல்லம் தயாரிக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறோம்.
வெல்லம் தயாரிக்கும் பணிக்கு சுமார் 6 நபர்கள் தேவை. ஒரு ஏக்கரில் கரும்பு பயிரிட ரூ.45 ஆயிரம் முதல் ரூ.50 ஆயிரம் வரை செலவாகும். கரும்பு வெட்டு கூலி, ஆலை அரவை கூலி செலவு போக லாபம் கிடைப்பதில்லை. இதனால் வெல்லம் தயாரிக்கும் பணியில் ஈடுபடுபவர்களுக்கு போதிய ஊதியம் கொடுக்க முடியவில்லை. வியாபாரிகள் எங்களிடம் குறைந்த விலைக்கு கொள்முதல் செய்து அதிக விலைக்கு விற்கின்றனர். அலங்காநல்லூரில் செயல்பட்டு வந்த கூட்டுறவு சர்க்கரை ஆலை மூடப்பட்டுள்ளதால் நலிவடைந்து வரும் கரும்பு விவசாயத்தை காப்பாற்ற அரசு நாட்டு வெல்லத்திற்கும் விலை நிர்ணயம் செய்ய வேண்டும். மேலும் அரசே கொள்முதல் செய்த ரேஷன் கடைகளில் சீனி வழங்குவதுபோல் நாட்டு சர்க்கரை, வெல்லம் வழங்க வேண்டும்’ என்றார்.
The post பொங்கல் பண்டிகையை தித்திப்பாக்க அலங்கையில் வெல்லம் தயாரிப்பு தீவிரம்: தமிழகம் முழுவதும் அனுப்பும் பணி விறுவிறு appeared first on Dinakaran.