நன்றி குங்குமம் டாக்டர்
முதன்மை இதய நோய் மருத்துவர் அருண் கல்யாணசுந்தரம்
குளிர் காலத்தில் வெப்ப நிலை குறைவதால், மாரடைப்பு ஆபத்து அதிக அளவில் ஏற்படுவதற்கான வாய்ப்பு உள்ளது. மேலும் இது ஏன் என்று பலருக்கும் ஆச்சரியமாக உள்ளது. இதய பாதிப்பு உள்ளவர்களுக்கு குளிர்காலம் குறிப்பாக சவாலாக இருக்கும். மேலும் அவ்வாறு இல்லாதவர்களும் இந்தக் காலக்கட்டத்தில் மிகுந்த கவனமுடன் இருக்க வேண்டும். குளிர்காலத்தில் மாரடைப்பு ஏன் அதிகம் ஏற்படுகிறது மற்றும் இதயத்தைப் பாதுகாப்பாக வைத்திருக்க என்ன செய்ய வேண்டும் என்பது குறித்து முதன்மை இதய நோய் மருத்துவர் அருண் கல்யாணசுந்தரம் பகிர்ந்து கொண்டவை.
குளிர்காலத்தில் மாரடைப்பு ஏற்படுவதற்கான காரணங்கள்
குளிர்காலத்தில் மாரடைப்பு அதிகரிப்பதற்கான முக்கிய காரணங்களில் ஒன்று உடலால் குளிரை தாக்குப் பிடிக்க முடியாமை ஆகும். குளிர் காலத்தில், உடலின் வெப்பத்தை பாதுகாக்க மற்றும் உடலின் மைய வெப்பநிலையை பராமரிக்க ரத்த நாளங்கள் சுருங்கும். இந்த ரத்த நாளங்களின் சுருக்கம் அல்லது வாசோகன்ஸ்டிரிக்சன் காரணமாக, ரத்த அழுத்தம் அதிகரிக்கிறது, இது இதயத்தில் கூடுதல் அழுத்தத்தை ஏற்படுத்துகிறது. ஏற்கெனவே இதய நோய் பாதிப்பு உள்ளவர்களுக்கு, இந்த கூடுதல் திரிபு மாரடைப்புக்கு வழிவகுக்கும். மேலும், உடலின் அதிகரித்த வேலைப்பளுவும் ஒழுங்கற்ற இதயத் துடிப்பும் இதய பாதிப்பை அதிகரிக்கும் என்று தெரிவித்தார்.
மேலும், உடலில் திடீரென வெப்பநிலை குறைவதால் அது பல்வேறு மாற்றங்களை ஏற்படுத்தலாம். இதன் காரணமாக ரத்த அழுத்தம் அதிகரிப்பதோடு, ரத்த உறைவும் ஏற்படும். இவை இரண்டும் மாரடைப்பு அபாயத்தை அதிகரிக்கும். குளிரானது ரத்த உறைவு அபாயத்தை அதிகரிப்பதோடு, குறிப்பாக ஏற்கெனவே தமனிகளில் அடைப்பு உள்ளவர்களுக்கு கரோனரி தமனியில் உருவாகும் ரத்த உறைவு இதயத்திற்கு ஆக்சிஜனேற்றப்பட்ட ரத்த ஓட்டத்தைத் தடுக்கிறது, இதன் காரணமாக மாரடைப்பு ஏற்படுகிறது.
குளிர் காலத்தில் மக்கள் அதிக உடல் செயல்பாடுகள் இல்லாமல் இருப்பதும், மாரடைப்பு அதிகரிப்பதற்கு மற்றொரு காரணமாகும். உடற்பயிற்சி செய்வதன் மூலம் இதயத்தை நாம் ஆரோக்கியமாக வைத்திருக்க முடியும். குளிர் காலத்தில் பலர் வெளிப்புறத்தில் உடற்பயிற்சி செய்வதை தவிர்க்கிறார்கள். இதன் காரணமாகவும் இதய பாதிப்புகள் ஏற்படுகின்றன. உடல் உழைப்பின்மை, எடை அதிகரிப்பு, அதிக கொழுப்பு ஆகியவை ரத்த அழுத்தத்தை அதிகரிப்பதோடு இதய நோய் அபாயத்திற்கு முக்கிய காரணங்களாக உள்ளன.
மேலும், குளிர்காலத்தில் பெரும்பாலும் காய்ச்சல் மற்றும் சளி போன்ற சுவாச நோய்த்தொற்றுகளும் ஏற்படுகிறது. இவை ஏற்கெனவே இதய நோய் உள்ளவர்களின் நிலைமைகளை மேலும் மோசமாக்கும். சுவாச நோய்கள் உடலில் வீக்கத்தை அதிகரித்து இதயத்தில் கூடுதல் அழுத்தத்தை ஏற்படுத்தும். இதன் காரணமாக இதயத்திற்கு ரத்தம் முறையாக செல்லாமல், குறிப்பாக இதய நோய் உள்ளவர்களுக்கு மாரடைப்பு ஏற்படும் வாய்ப்பு உள்ளது.
மாரடைப்பை தடுக்கும் வழிகள்
குளிர் காலத்தில் கதகதப்பான ஆடைகளை அணிவது, வெப்பமூட்டும் சாதனங்கள் மூலம் உடல் சூட்டை சமநிலையில் வைத்திருப்பது மிகவும் அவசியம் ஆகும். எப்போதும் கதகதப்பான கால நிலையில் இருந்த ஒருவர் திடீரென கடுமையான குளிரில் திடீரென வெளியே செல்வதை தவிர்க்க வேண்டும். அதேபோல் குளிர்காலத்தில் இதயத்திற்கு ஆரோக்கியம் தரும் உணவையே சாப்பிட வேண்டும். நிறைவுற்ற கொழுப்புகள், உப்பு மற்றும் சர்க்கரை உள்ள உணவுகளை தவிர்க்க வேண்டும்.
அதே நேரத்தில் காய்கறிகள், பழங்கள், முழு தானியங்கள் மற்றும் புரதம் நிறைந்த உணவுகளை எடுத்துக் கொள்ள வேண்டும். இந்த உணவுகள் கொலஸ்ட்ரால் அளவு, ரத்த அழுத்தம் மற்றும் எடை ஆகியவற்றை கட்டுப்பாட்டிற்குள் வைத்திருக்க உதவுகின்றன. இவை அனைத்தும் இதய ஆரோக்கியத்திற்கான முக்கியமான விஷயங்கள் ஆகும். மேலும் உடலில் நீர் சத்து குறையாமலும் பார்த்துக் கொள்ள வேண்டும்.
இதய நோய் உள்ளவர்கள், தங்கள் மருத்துவர் பரிந்துரைத்த மருந்துகளைத் தொடர்ந்து எடுத்துக்கொள்வது அவசியம் ஆகும். வழக்கமான எந்த திடீர் மாற்றங்களையும் தவிர்க்கவும், உங்கள் ரத்த அழுத்தம் மற்றும் கொலஸ்ட்ரால் அளவை தொடர்ந்து சரி பார்த்துக் கொள்ள வேண்டும்.அதே சமயம் நாம் மிகவும் சுறுசுறுப்பாக இருக்க வேண்டும். எனவே இதயத்தை ஆரோக்கியமாக வைத்திருக்க டிரெட்மில்லில் நடப்பது, யோகா அல்லது உடலின் அனைத்து உறுப்புகளுக்குமான பயிற்சிகளையும் செய்வது நல்லது.
மேலும் குளிர் காலமாக இருந்தாலும் தினசரி உடற்பயிற்சி செய்வது அல்லது வாரத்தில் பெரும்பாலான நாட்கள் குறைந்தபட்சம் 30 நிமிடமாவது உடற்பயிற்சி கட்டாயம் செய்ய வேண்டும். மேலும், குளிர் காலத்தில் திடீர் உடல் செயல்பாடு இதயத்தில் அதிக அழுத்தத்தை ஏற்படுத்தும் என்பதால், எந்தவொரு உடற்பயிற்சியிலும் ஈடுபடுவதற்கு முன்பு உடலை சூடாக வைத்திருப்பது அவசியம் ஆகும். அதேபோல் மது அருந்துவது நீரிழப்பு அபாயத்தை அதிகரிக்கும் மற்றும் ரத்த அழுத்தத்தையும் அதிகரிக்கும், இவை இரண்டும் மாரடைப்பிற்கு முக்கிய காரணிகள் ஆகும். குளிர்காலத்தில், புகைபிடிப்பதைத் தவிர்ப்பது முக்கியம், ஏனெனில் குளிர்ந்த வானிலை ரத்த நாளங்களை சேதப்படுத்தும் மற்றும் இதயத்திற்கு தீங்கு விளைவிக்கும்.
அதேபோல் ஒவ்வொருவரும் அவ்வப்போது தங்கள் மன அழுத்தத்தை கண்காணித்துக் கொள்ள வேண்டும். ஏனெனில் விடுமுறை காலம் பலருக்கு குறிப்பாக மன அழுத்தத்தை ஏற்படுத்தும். மன அழுத்தமானது ரத்த அழுத்தத்தை அதிகரிப்பதோடு இதய பிரச்னைகளுக்கும் வழிவகுக்கிறது. எனவே, தியானம், ஆழ்ந்த சுவாசப் பயிற்சிகள் செய்யும்போது அவை மன அழுத்தத்தைக் குறைக்கவும் இதயத்தைப் பாதுகாக்கவும் உதவும்.
குளிர் காலத்தில் பல்வேறு உடல் நலப் பாதிப்புகள் ஏற்படும். அதே வேளையில், மாரடைப்பு அபாயத்தைக் குறைக்க நீங்கள் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வது நல்லது. கதகதப்பான ஆடைகளை அணிதல், சுறுசுறுப்பாக இருத்தல், இதயத்திற்கு ஆரோக்கியமான உணவை உட்கொள்ளுதல், மன அழுத்தத்தை நிர்வகித்தல் ஆகியவற்றின் மூலம் உங்கள் இதயத்தை ஆரோக்கியமாக வைத்திருக்க முடியும். குளிர் காலத்தில் நீங்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்வது மாரடைப்பு அபாயத்தை வெகுவாக குறைத்து, நீங்கள் ஆரோக்கியமாக இருப்பதை உறுதிசெய்யும் என்று தெரிவித்தார்.
தொகுப்பு: ஸ்ரீதேவிகுமரேசன்
The post குளிர்காலத்தில் அதிகரிக்கும் மாரடைப்பு… தடுக்கும் வழிகள் என்ன? appeared first on Dinakaran.