இயற்கை 360°

நன்றி குங்குமம் தோழி

கத்தரிக்கா… குண்டுக் கத்தரிக்கா..!

‘அரிப்புக் காய்..!’
‘சாப்பிட்டால் புண் ஆறாது..!’
‘மாசமா இருக்கும் போது இந்தக் காய் வேணாம்..!’
‘ஆபரேஷன் செஞ்சா இதைத் தொடவே வேணாம்..!’
என எதிர்ப்புகள் பலவற்றை அன்றாடம் சந்திக்கிற காய்..!
‘‘ஏய் குண்டுக் கத்தரிக்கா..!”
‘‘ஏய் குள்ளக் கத்தரிக்கா..!”

என கேலியாக உருவங்களை உருவகப்படுத்த பயன்படும் காய்..!
‘‘கத்தரிக்கா… கத்தரிக்கா… குண்டுக் கத்தரிக்கா..!”

என கவிஞர்களை திரையிசைப் பாடலை எழுதத் தூண்டிய காய்..! இப்படி, காய்களிலே அதிக விமர்சனங்களைச் சந்தித்தும், அப்பட்டமாகப் பழிகளைச் சுமந்தும் நிற்கும் காய் என்றால் அது சர்வ நிச்சயமாக கத்தரிக்காய்தான்..!ஆனால், கத்தரிக்காய் இன்றி சமையலே இல்லை என்கிற அளவிற்கு, கத்தரிக்காய் சாம்பார், கத்தரிக்காய் சட்னி, கத்தரிக்காய் பொரியல், கத்தரிக்காய் வறுவல், கத்தரிக்காய் பஜ்ஜி என நமது அன்றாட உணவை நிச்சயம் ஆக்கிரமிக்கிற காய்..!

உண்மையிலேயே, இந்தக் கத்தரிக்காயை உட்கொள்வது நல்லதா… கெட்டதா..? இன்றைய இயற்கை 360°யில் தெரிந்துகொள்ளலாம் வாருங்கள்..!ஊதா நிறம், அடர் ஊதா நிறம், ஊதா மற்றும் வெள்ளை கலந்த நிறம், பச்சை நிறம், தூய வெள்ளை நிறம், மஞ்சள் நிறம் என பல நிறங்களில் காணப்படும் கத்தரிக்காயின் தாவரப்பெயர் Solanum melongena. தோன்றிய இடம் இந்தியா. இங்கிருந்து மெல்ல கிழக்கே சீனா மற்றும் பிற ஆசிய நாடுகளுக்கும், மேற்கே அரபு நாடுகளுக்கும், அங்கிருந்து ஐரோப்பிய மற்றும் அமெரிக்க நாடுகளுக்கும் பயணித்த கத்தரிக்காய், தற்சமயம் உலகெங்கும் பயன்படுத்தப்படுகிற உணவாக விளங்குகிறது. குறிப்பாய் மலிவு விலையில், எளிதாகக் கிடைக்கும் என்பதால், அனைத்து தரப்பு மக்களுக்குமான உணவாகவும் இருக்கிறது.

கத்தரிக்காய் போலவே, அதன் பெயரும் உலகம் முழுக்க பயணித்ததை வரலாற்றின் மூலம் அறிய முடிகிறது. உண்மையில், நான்காயிரம் ஆண்டுகள் தொன்மை வாய்ந்த ‘முண்டா’ (munda) மொழிகளில் ‘வர்தகா’ (vartaka) எனும் பெயருடன் வழங்கப்பட்ட கத்தரிக்காய், ‘வதிங்கனா’ (vatingana) என சமஸ்கிருதத்திலும், அதிலிருந்து மருவி, ‘படிங்கன்’, ‘பைங்கன்’ (Baingan, Al Badingan) என ஹிந்தி மற்றும் பிற வடமொழிகளிலும், ‘படிஞ்ஜன்’ (Badinjan) என பெர்சிய மற்றும் அரபு மொழியிலும், ‘ஆபர்ஜின்’ (Aubergine) என ஃப்ரெஞ்சு மொழியிலும் ‘பிரிஞ்செல்லா’ (Brinjella) என போர்ச்சுக்கீசிய மொழியிலும், ஸ்பெயினில் பிரிஞ்செனா (Brinjena) என வழங்கப்பட, பிரிஞ்செல்லா அல்லது பிரிஞ்செனாவிலிருந்துதான் அதன் பொதுப்பெயரான ‘பிரிஞ்ஜால்’ (Brinjal) பெறப்பட்டது என்கிறது வரலாறு.

அதேசமயம் தமிழ், மலையாளம் மற்றும் கன்னட மொழிகளில் கத்தரிக்காய் ‘வழுதலை’, ‘வருதுனை’, ‘வருதினா’, ‘பதனேக்காய்’ போன்ற தொன்மைப் பெயர்களுடன், முதல் பெயரான வதிங்கனாவை நினைவூட்டுவதையும் நாம் காணலாம். மேலும், முட்டை வடிவத்திலான காய் என்பதால், Egg plant எனவும் ஆங்கிலத்தில் அழைக்கப்படுகிறது. உண்மையில் பிரிஞ்ஜால் என்பது ஆசிய நாடுகளிலும், ஆபர்ஜின் என்பது ஐரோப்பிய நாடுகளிலும், எக் பிளான்ட் என்பது அமெரிக்க நாடுகளிலும் கத்தரிக்காயின் வழக்குப் பெயராக மாறிவிட்டது எனலாம்.பெயரில் காய் இருந்தாலும், உண்மையில் கத்தரிக்காய் பழ வகையைச் சார்ந்த தாவரமாகும்.

இதன் அடர் ஊதா நிறத்திற்கு காரணமாக இருக்கும் அந்தோ-சயனின்கள் (anthocyanins) மற்றும் குளோரோஜெனிக் அமிலம் (Chlorogenic acid) போன்ற தாவரச்சத்துகள் பளபளப்பையும் சேர்த்தே இதற்கு அளிக்கின்றது. ஊதா நிறத்திற்கு இடையில் வெண்ணிறக் கோடுகள் கொண்ட காய்கள் Zebra Eggs என வழங்கப்படுகின்றன. முற்றிலும் நிறமியற்ற காய்கள், பச்சை அல்லது வெள்ளை நிறத்தில் காணப்படுகின்றன. சிறிய மஞ்சள் நிறக் காய்கள் கசப்பு தரக்கூடியவை என்பதுடன் மருத்துவ குணங்கள் நிறைந்தவை என்று கூறப்படுகிறது. பறித்த 7 நாட்கள் வரை பயன்படுத்தலாம் என்பதுடன், புள்ளிகள் இல்லாத, நிறம் மங்காத காய்களை வாங்குவது அவசியம்.

பெயரில் மட்டுமன்றி, உபயோகத்திலும் தனித்துவம் மிக்கது கத்தரிக்காய் எனக் கூறும் உணவு ஊட்ட வல்லுநர்கள், உணவில் சுவையை கூட்டுவதோடு, உடலுக்கும் பல்வேறு நன்மைகளையும் அள்ளித்தருகிறது என்கிறார்கள். குறைந்த கலோரிகள் (25/100g), அதிக நார்ச்சத்து, அதிக நீர்த்தன்மை (92%), அத்துடன் பொட்டாசியம், பாஸ்பரஸ், மெக்னீசியம், கால்சியம், மாங்கனீஸ், துத்தநாகம் உள்ளிட்ட முக்கியத் தாதுக்கள், வைட்டமின் சி, பி, ஈ, கே போன்றவை நிறைந்தவை கத்தரிக்காய். மேலும் இதிலுள்ள நசுனின் & ஃப்ளாவனால்ஸ் (Nasunin & Flavonols) தாவரச்சத்துகள் நோயெதிர்ப்பு சக்தி, ஞாபகத்திறன் அதிகரிப்பு, அழற்சி எதிர்ப்பு, செல்களுக்கு பாதுகாப்பாக இருந்து பற்பல நன்மைகளை அளிக்கின்றன. சிறந்த ஆன்டி-ஆக்சிடெண்டாகவும் விளங்குவதால் கத்தரிக்காயை நல்லதொரு ஆரோக்கிய உணவாகவும் பார்க்கலாம்.

இவ்வளவு ஆரோக்கியத்தையும் தன்னுள்ளே தேக்கி வைத்திருக்கும் இந்தக் கத்தரிக்காய், மற்ற எந்தவொரு இயற்கை உணவைப் போலவே உடற்பருமன், சர்க்கரை நோய், உயர் ரத்த அழுத்தம், அதிகக் கொழுப்பு, மாரடைப்பு, எலும்புப்புரை, குடல் அழற்சி, மலச்சிக்கல், கண் மற்றும் சரும நோய்கள் ஆகிய வாழ்க்கை முறை நோய்களைக் கட்டுக்குள் வைக்க உதவுகின்றன. இதிலுள்ள அந்தோ-சயனின்கள், வைட்டமின் ஈ, மெக்னீசியம் மற்றும் பொட்டாசியம் போன்றவை, இதயத்திற்கு வலிமை சேர்ப்பதுடன், புற்றுநோய் செல்களுக்கு எதிர்ப்பாகவும் இருந்து, நரம்பு மண்டல நோய்களிலிருந்தும் நமக்கு பாதுகாப்பளிக்கின்றன.

போலிக் அமிலம் மற்றும் அமினோ அமிலங்கள் நிறைந்த கத்தரிக்காய் கர்ப்பகாலத்தில் ரத்தசோகையை குறைத்து, குழந்தை வளர்ச்சிக்கும் உதவுகிறது. கத்தரிக்காயில் உள்ள மிகக் குறைந்த அளவிலான நிகோடின், புகைப் பழக்கத்திலிருந்து விடுபடவும் உதவுகிறது. அதேபோல, அதன் க்ளைக்கோ-ஆல்கலாயிட் மற்றும் வைட்டமின் ஈ, தோல் அழற்சியைக் குறைத்து, காயங்கள் ஆறவும், தழும்புகள் குறையவும் வழிவகுக்கிறது. விஷக் காளான்களால் ஏற்படும் வயிற்று அழற்சி மற்றும் ஒவ்வாமைக்கும் பயனளிக்கிறது.

பத்திய உணவிலும் கத்தரிக்காய் முக்கியப் பங்காற்றுவதால், தேரையர் தனது கரிசல் எனும் மருத்துவ நூலில், ‘‘வழுதலை யாகிய வங்கக் காய் தினப் பழுதிலை யஃதுநற் பத்திய மாகுமே” என்று பாடியுள்ளார்! இப்படியாக அனைவருக்கும் பல நன்மைகளைப் பயக்கும் கத்தரிக்காய் ஏன் இத்தனை பழிகளைச் சுமக்கிறது என்றால் இதிலுள்ள ப்ரொஃபிலின், பாலிஃபீனால், ஆக்சலேட்கள் மற்றும் சில சத்துகள், சிலரில் ஒவ்வாமைக்கான ஹிஸ்டமின் சுரப்பை அதிகரிப்பதால், தோல் அரிப்பு, வீக்கம், மூச்சுத் திணறல், சிறுநீரகத்தில் கற்களை ஏற்படுத்தக்கூடும். இதன் கூடுதல் நார்ச்சத்து வயிற்றுப்போக்கையும் அதிகரிக்கலாம் என்பதால், ஒவ்வாமை இருப்பவர்கள் இதைத் தவிர்ப்பது நல்லது. குறிப்பாக, இந்தக் காயை பறிக்கும் போது விரல்களில் படுகிற மகரந்தம், தோல் அழற்சியை (atopic dermatitis) சிலருக்கு உடனடியாக ஏற்படுத்துகிறது என்பதாலேயே பழிச்சொல்லுக்கு ஆளாகிறது எனப் புரிகிறது.

மேலும், நைட் ஷேட் எனப்படும் மணத்தக்காளியைப் போலவே கத்தரிக்காயும் Solanaceae குடும்பத்தைச் சார்ந்தது என்பதால், அதைப் போலவே இதன் இலைகளும் பூக்களும் சோலானின் எனும் விஷத்தன்மை கொண்டது என்றாலும் இதன் காய்களும் கனிகளும் முற்றிலும் பாதுகாப்பானவையே. நம்மிடையே சாம்பார், சட்னி, பொரியல் என பயன்படுவதைப் போலவே, பைங்கன் சப்ஜி, பைங்கன் பர்ட்டா, வாங்கி பட், பர்லி வாங்கி, பேகன் போரா என வடக்கில் முக்கிய உணவுகளில் இடம்பிடிக்கிறது.

அதேபோல சாலட், ஊறுகாய், தொக்கு என நமது அன்றாட சமையலில் பெரும்பங்கு வகிக்கிறது. இதன் சதைப்பகுதி அசைவக் கறிக்கு ஒப்பானது என்பதால், மலேய, ஜப்பானிய, கொரிய மற்றும் சீன உணவுகளில் அசைவத்துடன் சேர்த்து சமைக்கப்படுகிறது (meat mincer). அதேபோல இத்தாலி, துருக்கி, ஈரான், மொராக்கோ, கிரேக்கம், ஆப்பிரிக்க மற்றும் அமெரிக்க நாடுகளில் இதனை சமைத்து, வறுத்து, தீயில் பொசுக்கி, தயிருடன் சேர்த்து எனவும், உலகெங்கும் உள்ள க்யூசின்களில் முக்கிய இடம்பிடிக்கிறது. பண்டைய கிரேக்க விருந்துகளில் பதினெட்டு உணவு வகைகளில் குறைந்தது பதினைந்து உணவுகளில் கத்தரிக்காய் இடம்பெற்றிருந்ததாம்.

வருடம் முழுவதும் காய்க்கும் கத்தரிக்காய், விதைகளிலிருந்தே பயிரிடப்படுகிறது. வெப்பமண்டலப் பயிரான இதனை, ஜூன்-ஜூலை மாதங்களிலும், டிசம்பர்-ஜனவரி மாதங்களிலும் பயிரிடுகின்றனர். பொதுவாக 90-120 நாட்களுக்குள் காய்ப்புக்கு வரும் இதனை, உலகில் சீனா மற்றும் இந்தியா அதிகளவில் உற்பத்தி செய்கின்றன.நமது நாட்டில், மேற்குவங்கம், ஒடிசா மற்றும் பீகார் மாநிலங்களில் அதிகம் பயிரிடப்படுகிறது. இதில் ஏற்படும் அதீத தொற்றுநோய் மற்றும் பயிர்கள் இழப்பு (95%) காரணமாக, உயிரியல் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி, இந்தியாவில் முதன்முதலாக உருவாக்கப்பட்ட பி.டி. கத்தரிக்காய் (Bt Brinjal), உழவர்களுக்கும் பயனாளர்களுக்கும் உண்மையில் பெரு வரமாக உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

பல நூற்றாண்டுகளாக பயன்பாட்டில் உள்ள கத்தரிக்காயை தோல் முதல் கால் வரை தோன்றும் அனைத்து உபாதைகளுக்கும் பெர்சியாவில் மருந்தாகப் பயன்படுத்தியுள்ளனர். சீன மருத்துவத்தில் வயிற்றுப் புண்ணுக்கு மருந்தாகவும், மலாய மருத்துவத்தில் அழற்சிக்கான மருந்தாகவும் பயன்படுத்தப்பட்டுள்ளது. ஜப்பானியர்களின் சுப சகுனங்களில்
ஒன்றாக கத்தரிக்காய் எப்போதும் விளங்கி வருகிறது.

நமது சைதன்ய சாரகத்திலும் புத்த மற்றும் ஜைன சமய வரலாற்றுப் புதினங்களிலும் கத்தரிக்காய் குறிப்பிடப்பட்டுள்ளது.காய்களிலேயே அதிக விமர்சனங்களையும், வீண் பழிகளைச் சுமந்தும் கம்பீரமாக நிற்கும் இந்த அரிய, எளிய, வலிய கத்தரிக்காய், உண்மையில் காய்களின் அரசன்தான். அதனால்தானோ என்னவோ, இயற்கையே அதற்கு பசுமை நிறக் காம்பை மகுடம் போலப் படைத்துள்ளது..!

(இயற்கை பயணம் நீளும்!)

மகப்பேறு மருத்துவர், சமூக ஆர்வலர்: டாக்டர் சசித்ரா தாமோதரன்

The post இயற்கை 360° appeared first on Dinakaran.

Related Stories: