புற்றுநோய் உருவாகும் காரணங்களும் தடுக்கும் வழிகளும்!

நன்றி குங்குமம் டாக்டர்

கதிர்வீச்சு புற்றுநோய் மருத்துவர் கே. அஸ்மி சவுந்தர்யா

மக்களிடையே ஆரம்ப கால நோய் அறிதல் மற்றும் பரிசோதனை குறித்த விழிப்புணர்வை அதிகரித்தால் மட்டுமே இந்தியாவில் புற்றுநோய் வராமல் தடுக்க முடியும் என்று ஐஸ்வர்யா மருத்துவமனையின் கதிர்வீச்சு புற்றுநோயியல் மருத்துவர். கே. அஸ்மி சவுந்தர்யா கூறியுள்ளார். மேலும் புற்றுநோய் ஏற்படுவதற்கான காரணங்கள் மற்றும் புற்றுநோய் வராமல் தற்காத்துக் கொள்ளும் வழிகள் போன்றவற்றை நம்முடன் பகிர்ந்து கொள்கிறார்.

புற்றுநோய் என்றால் என்ன?

ஒவ்வொரு மனிதனுக்கும் உடல் உறுப்புகள் இயல்பாக இயங்க உடலில் பலவித செல்கள் இயங்குகிறது. இந்தசெல்கள் தன்னை அவ்வப்போது புதுப்பித்துக் கொண்டே இருக்கும். அந்தவகையில், பழைய செல்கள் அழியும்போது அங்கு புதிய செல்கள் உருவாகிறது. சில நேரங்களில் இந்த செயல்முறை மாறுபடும்போது, புதிய செல்கள் தோன்றாமல் சேதமடைந்த பழைய செல்கள் கட்டுப்பாடில்லாமல் வளர்ந்து பெருகி உடலின் மற்ற பாகங்களுக்கும் பரவுகிறது. இவ்வாறு பெருகும் செல்கள் கட்டிகளை உருவாக்குகிறது. இதுவே புற்றுநோய் என்று அழைக்கப்படுகிறது. இவற்றில் 100க்கும் மேற்பட்ட புற்று நொய்கள் உள்ளன.

காரணம் என்ன?

புற்றுநோய் வருவதற்கு எந்த ஒரு காரணமும் இல்லை. இதற்கு வாழ்க்கை முறை மாற்றம், உணவு பழக்க வழக்கம், பாரம்பரிய பாதிப்பு, மரபணு கோளாறுகள், சில வைரஸ்கள் மற்றும் சுற்றுச்சூழல் பாதிப்பு என பல்வேறு காரணங்கள் சொல்லப்படுகின்றன. பொதுவாக, இதன் காரணமாக புற்றுநோய் உருவாக பல ஆண்டுகள் ஆகும். வயது அதிகரிக்கும் போது, ​​புற்றுநோய் வருவதற்கான வாய்ப்பும் அதிகரிக்கிறது. இருப்பினும் இதுபோன்ற எந்தவித பிரச்னையும் இல்லாதவர்களுக்கும் புற்றுநோய் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளது. ஒருவருக்கு ஏன் புற்று நோய் வருகிறது; மற்றவருக்கு ஏன் வரவில்லை என்பது குறித்தும் இதுவரை தெளிவான ஆய்வுகள் இல்லை.

புற்றுநோய் வராமல் தடுப்பது எப்படி?

புற்று நோய் வராமல் தடுக்க முதன்மை தடுப்பு மற்றும் இரண்டாம் நிலை தடுப்பு என இரு வழிமுறைகள் உள்ளன. அதில் முதன்மை தடுப்பு என்பது கார்சினோஜென்கள் எனப்படும் புற்றுநோயை உண்டாக்கும் காரணிகளின் வெளிப்பாட்டைத் தவிர்ப்பது ஆகும். புற்று நோய் வராமல் இருக்க அதை தடுப்பதே சிறந்த வழியாகும். ஆனால் அதேசமயம் எல்லா புற்றுநோய்களையும் தடுக்க முடியாது.

அதேசமயம் அதன் பாதிப்பை குறைக்க நாம் சில விஷயங்களைச் செய்யலாம். அதாவது மது அருந்துதல் மற்றும் புகைபிடிப்பதை தவிர்த்தல், ஆரோக்கியமான உடல் எடையை பராமரித்தல், ஆரோக்கியமான உணவு, பூச்சிக்கொல்லிகள் மற்றும் உடலுக்கு தீங்கு விளைவிக்கும் ரசாயனங்கள் போன்றவற்றை வீட்டிலோ அல்லது வேலையிலோ பயன்படுத்துவதை தவிர்ப்பது, ஹெபடைடிஸ் பி மற்றும் எச்பிவி தடுப்பூசிகளை போடுவது, அதிக வெயில் படாமல் பார்த்துக் கொள்வது உள்ளிட்டவற்றை செய்யும்போது புற்றுநோய் பாதிப்பில் இருந்து நம்மை பாதுகாத்துக்
கொள்ளலாம்.

இரண்டாம் நிலை என்பது முறையான பரிசோதனையாகும். இந்தியாவில் பல்வேறு புற்றுநோய் பரிசோதனை திட்டங்கள் உள்ளன. பல புற்றுநோய்களை ஆரம்பத்திலேயே கண்டறியும்போது அதை எளிதாக குணப்படுத்த முடியும். எனவே பரிசோதனை செய்யும்போது புற்றுநோயை ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்து அதற்கு முறையான சிகிச்சை வழங்க முடியும். மார்பகப் புற்றுநோய், கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோய் மற்றும் வாய்வழி புற்றுநோய் வராமல் இருக்க குறைந்த கட்டணத்தில் இதற்கான பரிசோதனைகள் செய்யப்படுகின்றன.

25 வயதை எட்டிய பெண்கள் கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோய் பரிசோதனை செய்யலாம். அதேபோல் 40 வயதை கடந்த பெண்கள் ஆண்டுக்கு ஒருமுறை மேமோகிராம் மூலம் மார்பக புற்றுநோய் பரிசோதனை செய்து கொள்ளலாம். 45 வயதைக் கடந்தவர்கள் பெருங்குடல் மற்றும் மலக்குடல் புற்றுநோய் பாதிப்பு இல்லாமல் இருக்க கொலோனோஸ்கோபி பரிசோதனையும், புகைபிடிப்பவர்கள் மற்றும் 50 வயதைக் கடந்தவர்களுக்கு நுரையீரல் புற்றுநோய் பரிசோதனையும் பரிந்துரைக்கப்படுகிறது. முக்கியமாக இதுபோன்ற வழக்கமான பரிசோதனைகளை செய்து கொள்வதன் மூலம் புற்றுநோய் வராமல் நம்மை பாதுகாத்துக் கொள்ளலாம். மேலும் தேவைப்படும் சமயங்களில் மருத்துவ நிபுணர்களை அணுகி ஆலோசனையை பெறலாம்.

மேலும், ஆரம்பகால நோய் கண்டறிதல் எவ்வளவு முக்கியம் என்பதை வலியுறுத்துவதும், புற்றுநோய்க்கு எதிரான போராட்டத்தில் ஒற்றுமையாக போராடுவதுமே இதற்கான தடுக்கும் வழிகள் ஆகும். இந்தியாவில் கடந்த 2022-ம் ஆண்டு புதிதாக 14,61,427 பேருக்கு புற்றுநோய் பாதிப்புகள் இருப்பதாக கண்டறியப்பட்டு உள்ளது. தற்போது அது அடுத்த ஆண்டில் 10 சதவீதம் அதிகரிக்கக் கூடும் என்றும் அஞ்சப்படுகிறது.

ஆண்களைப் பொறுத்தவரை நுரையீரல் மற்றும் வாய்வழி குழி புற்றுநோயும், பெண்களைப் பொறுத்தவரை மார்பக மற்றும் கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோய் ஆகியவையும் பொதுவான ஒன்றாக உள்ளன. எனவே, ஆரோக்கியமான வாழ்க்கை முறை மற்றும் உணவு பழக்கத்தை கடைபிடித்து வந்தாலே புற்றுநோயிலிருந்து முடிந்தவரை தற்காத்துக் கொள்ள முடியும்.

The post புற்றுநோய் உருவாகும் காரணங்களும் தடுக்கும் வழிகளும்! appeared first on Dinakaran.