சென்னை: பட்டினப்பாக்கம் சீனிவாசபுரம் பகுதியை சேர்ந்தவர் மகேஷ்குமார் (46). இவர், கடந்த மாதம் 13ம் தேதி குடும்பத்துடன் மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயிலுக்கு வழிபாடு செய்ய வந்தார். சாமி தரிசனம் செய்துவிட்டு, அனைவரும் கோயில் பிரகாரத்தில் அமர்ந்து இருந்தனர். அப்போது மகேஷ்குமாரின் குழந்தை கால்களில் அணிந்து இருந்த ஒரு சவரன் கொலுசு மாயமாகி இருந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த மகேஷ்குமார், உடனே மயிலாப்பூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
அதன்பேரில், குற்றப்பிரிவு போலீசார் கோயில் வளாகத்தில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி காட்சிகளை பெற்று ஆய்வு செய்தனர். அப்போது மகேஷ்குமார் கோயிலில் சாமி தரிசனம் செய்யும் போது, அவரது குழந்தையிடம் பெண் ஒருவர் பேச்சு கொடுத்து, நைசாக கொலுசுவை திருடியது தெரியவந்தது.
அதனை தொடர்ந்து திருடிய பெண்ணின் புகைப்படங்களை வைத்து போலீசார் தீவிர விசாரணை நடத்திய போது, கோட்டூர்புரம் பகுதியை சேர்ந்த கலைவாணி (59) என்று தெரியவந்தது. இவர் ஐயப்பன் கோயிலுக்கு மாலை அணிந்து கொண்டு கபாலீஸ்வரர் கோயிலுக்கு குடும்பத்துடன் வரும் குழந்தைகளை மட்டும் குறிவைத்து தொடர் திருட்டில் ஈடுபட்டு வந்ததும் விசாரணையில் தெரியவந்தது.
பின்னர் போலீசார் கலைவாணியை கைது செய்தனர்.
The post மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயிலில் குழந்தையிடம் தங்க கொலுசு திருடிய பெண் appeared first on Dinakaran.