தாட்கோ மூலமாக பிளஸ் 2, பட்டப்படிப்பு முடித்தவர்களுக்கு சர்வதேச விமான நிலையத்தில் பணிபுரிய பயிற்சி வகுப்பு: சென்னை கலெக்டர் தகவல்

சென்னை: தாட்கோ மூலமாக பிளஸ் 2 அல்லது பட்டப்படிப்பு முடித்த ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினத்தை சார்ந்தவர்களுக்கு சர்வதேச விமான நிலையத்தில் பணிபுரிய பயிற்சி அளிக்கப்பட உள்ளது. இதுகுறித்து சென்னை மாவட்ட கலெக்டர் ரஷ்மி சித்தார்த் ஜகடே வெளியிட்ட அறிவிப்பு: தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டுவசதி மற்றும் மேம்பாட்டுக்கழகம் (தாட்கோ) நிறுவனமானது ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு பல்வேறு திறன் அடிப்படையிலான பயிற்சி திட்டங்களை வழங்கிவருகிறது.

அதன் அடிப்படையில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின சார்ந்தவர்களுக்கு சர்வ தேசவிமான போக்குவரத்தால் அங்கீகரிக்கப்பட்ட நிறுவனத்தால் விமான நிலைய பயணிகள் சேவை அடிப்படை படிப்பு, சரக்கு ஏற்றுமதி மற்றும் இறக்குமதி அடிப்படை படிப்பு, சுற்றுலா துறையின் அடிப்படை படிப்புகள் மற்றும் விமான பயண முன்பதிவு போன்ற பயிற்சிகளுக்கு சான்றிதழ்களை வழங்கி வேலைவாய்ப்பு பெற வழிவகை செய்யப்பட்டுள்ளது.

இப்பயிற்சி பெற 12ம் வகுப்பு அல்லது பட்டப்படிப்பில் தேர்ச்சி பெற்றவர்கள், 18 முதல் 23 வயது நிரம்பிய ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினத்தை சேர்ந்தவர்களாக இருக்க வேண்டும். இப்பயிற்சிக்கான கால அளவு 6 மாதம். விடுதியில் தங்கி படிக்க வசதியும் உள்ளது. பயிற்சிக்கான செலவீன தொகையான ரூ.95,000த்தை தாட்கோவால் மேற்கொள்ளப்படும். இப்பயிற்சியினை வெற்றிகரமாக முடிக்கும் பட்சத்தில் ஐஏடிஏ-இன்டர்நேஷனல் ஏர் டிரான்ஸ்போர்ட் அசோசிஷேன்-கண்டா மூலம் அங்கீரிக்கப்பட்ட சான்றிதழ் வழங்கப்படும்.

மேலும் தனியார் விமான நிறுவனங்களிலும், சரக்கு ஏற்றுமதி மற்றும் இறக்குமதி நிறுவனங்களிலும், நட்சத்திர விடுதிகளிலும், சொகுசு கப்பல் மற்றும் சுற்றுலா துறையிலும் வேலை வாய்ப்பு பெறலாம். ஆரம்ப கால மாதாந்திர ஊதியமாகரூ.20,000 முதல் ரூ.22,000 வரை பெறுவதற்கு வழிவகை செய்யப்படும்.

பின்னர் திறமைக்கேற்றவாறு பதவி உயர்வின் அடிப்படையில் ரூ.50,000 முதல் ரூ.70,000 ஊதிய உயர்வு பெறலாம். இத்திட்டத்தின்கீழ் 55 நபர்களுக்கு பயிற்சி வழங்கப்பட்டு முதற்கட்டமாக 46 நபர்கள் முன்னனி விமான நிறுவனங்கள் மற்றும் சேவைமையங்களில் பணிபுரிந்து வருகின்றனர். இத்திட்டத்தில் பதிவு செய்வதற்கு www.tahdco.com என்ற தாட்கோ இணையதளத்தில் பதிவு செய்யலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

The post தாட்கோ மூலமாக பிளஸ் 2, பட்டப்படிப்பு முடித்தவர்களுக்கு சர்வதேச விமான நிலையத்தில் பணிபுரிய பயிற்சி வகுப்பு: சென்னை கலெக்டர் தகவல் appeared first on Dinakaran.

Related Stories: