இதையடுத்து வனத்துறையினர், சிறுத்தையின் நடமாட்டத்தை கண்காணிப்பு கேமரா பொருத்தி கண்காணித்து உறுதி செய்தனர். பின்னர் அப்பகுதியில், கூண்டு வைத்து பிடிக்க பல முறை முயற்சி மேற்கொண்டனர். ஆனால் சிறுத்தை கூண்டில் சிக்காமல் போக்கு காட்டி தப்பியது. மேலும் தனியார் பண்ணையில் ஓட்டல் கழிவுகளை சாப்பிட வரும் நாய்களையும் கடித்து தின்று, அப்பகுதியிலேயே முகாமிட்டு வந்தது.
இந்நிலையில் கடந்த வாரம் தேவராஜ் என்பவர் மேய்த்துக்கொண்டு ஆடுகளில் ஒன்றை சிறுத்தை கடித்துள்ளது. இதை பார்த்து அங்கிருந்தவர்கள் கூச்சல்போடவே ஆட்டை போட்டுவிட்டு தப்பியது. உயிருக்கு போராடிய ஆட்டுடன் தேன்கனிக்கோட்டை வனத்துறை அலுவலகம் முன் தர்ணாவில் ஈடுபட்டதை தொடர்ந்து மாவட்ட வன உயிரின காப்பாளர் ஜகதீஸ் பாக்கர், சிறுத்தையை பிடிக்க நடவடிக்கை எடுத்தார். இந்நிலையில், நேற்று அதிகாலை 3 மணி அளவில் கூண்டில் வைத்திருந்த ஆட்டை சாப்பிட வந்த சிறுத்தை உள்ளே சிக்கியது. வனத்துறையினர் விரைந்து சென்று கூண்டுடன் சிறுத்தையை பொக்லைன் மூலம் ராட்சத வாகனத்தில் ஏற்றி அய்யூர் வனப்பகுதிக்கு கொண்டு சென்றனர்.
சிறுத்தை சிக்கியதால் அங்குள்ள 30க்கும் மேற்பட்ட கிராம மக்கள் நிம்மதி அடைந்தனர். இது குறித்து மாவட்ட வன உயிரின காப்பாளர் ஜகதீஸ் பாக்கர் கூறுகையில், ‘பிடிபட்ட சிறுத்தை ஆண் சிறுத்தை. 4 முதல் 6 வயது இருக்கும். இந்த சிறுத்தையை அடர்ந்த வனப்பகுதியில் விட நடவடிக்கை எடுக்கப்படும்’ என்றார்.
The post தேன்கனிக்கோட்டை அருகே கிராம மக்களை 2 ஆண்டாக அச்சுறுத்திய சிறுத்தை கூண்டில் சிக்கியது appeared first on Dinakaran.