இளைஞர் அணி தலைவராக பேரனை நியமிப்பதில் உறுதி; 9 மாவட்டச் செயலாளர்களுடன் 2வது நாளாக அன்புமணி ஆலோசனை: ஓரங்கட்டப்படுவாரா ராமதாஸ்?

சென்னை: இளைஞர் அணி தலைவர் பதவியில் பேரனை நியமிப்பதில் ராமதாஸ் உறுதியாக உள்ளதால், 9 மாவட்டச் செயலாளர்களுடன் அன்புமணி நேற்று 2வது நாளாக ஆலோசனை நடத்தினார். இதனால் ராமதாஸ் ஓரங்கட்டப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

புத்தாண்டையொட்டி ஒவ்வொரு ஆண்டும் பாமக பொதுக்குழு கூட்டம் கூட்டப்படும். அதேபோல கூட்டப்பட்ட பொதுக்குழுவில் மாநில இளைஞர் அணி தலைவராக அன்புமணியின் சகோதரி காந்தியின் மகன் முகுந்தனை நியமிப்பதாக ராமதாஸ் அதிரடியாக அறிவித்தார். இதற்கு மேடையிலேயே அன்புமணி எதிர்ப்பு தெரிவித்தார். கட்சியில் சேர்ந்த உடனேயே பதவி வழங்க வேண்டுமா? கொஞ்ச நாள் பொறுக்கலாமே என்று கூறினார். ஆனால் ராமதாசோ, இது என் கட்சி. என் பேச்சைக் கேட்பவர்கள் இருந்தால் மட்டுமே இருக்கலாம். இல்லாவிட்டால் கட்சியை விட்டு போகலாம் என்று அதிரடியாக கூறிவிட்டார்.

இதனால் மேடையில் இருவருக்கும் இடையே கடும் மோதல் வெடித்தது. கூட்டத்தை விட்டு புறப்பட்ட ராமதாசின் காரை மறித்த அன்புமணியின் தொண்டர்கள் சுமார் 30 நிமிடமாக செல்ல விடாமல் கோஷமிட்டபடியே இருந்தனர். இந்த பரபரப்புக்கிடையே அறிவிப்பு செய்த அடுத்த நாளே இளைஞர் அணியின் மாநில தலைவருக்கான கடிதத்தை முகுந்தனிடம் ராமதாஸ் வழங்கினார்.

முகுந்தனின் தம்பியைத்தான் அன்புமணியின் மூத்த மகள் திருமணம் செய்துள்ளார். கட்சிக்குள் ஏற்பட்டுள்ள இந்த மோதல் குடும்பத்திலும் எதிரொலித்தது. இந்தநிலையில் இரு நாட்களுக்கு முன்னர் பனையூரில் உள்ள தனது வீட்டில் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு என 9 மாவட்ட நிர்வாகிகளுடன் அன்புமணி ஆலோசனை நடத்தினார். அப்போது முகுந்தன் நியமனம் குறித்தும், அதை ஏற்பதா? வேண்டாமா என்பது குறித்தும் ஆலோசனை நடத்தியதாக கூறப்படுகிறது.

இந்தநிலையில், பாமக நிறுவனர் ராமதாஸ் நேற்று நிருபர்களுக்கு அளித்த பேட்டியில், முகுந்தன் நியமனத்தை உறுதி செய்தார். பாமக பொதுக்குழுவில் இளைஞரணி தலைவர் அறிவிப்பதில் ஏற்பட்டது கருத்து வேறுபாடு இல்லை. அன்புமணியிடம் பேசி சரியாகி விட்டது. முகுந்தன் மாநில இளைஞரணி தலைவராக நீடிக்கிறார் என்று தெரிவித்தார்.

ஆனால் ஒரு உரையில் 2 கத்தி இருக்க முடியாது. 2 அதிகார மையங்கள் இருக்க முடியாது என்பதில் அன்புமணி உறுதியாக இருப்பதாக கூறப்படுகிறது. இதனால், நேற்று பனையூரில் உள்ள வீட்டில் வேலூர், கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்கள் உள்பட 9 மாவட்ட நிர்வாகிகளுடன் அன்புமணி ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனையைத் தொடர்ந்து பாமகவில் பரபரப்பு நிலவுகிறது. தற்போது பாமகவில் 90 சதவீதம் பேர் அன்புமணியால் நியமிக்கப்பட்டவர்கள். அவர்கள் நினைத்தால் ராமதாசை கட்சியை விட்டு நீக்க முடியும். ஆனால் அந்த அளவுக்கு செல்ல வேண்டாம் என்று அன்புமணி கருதுகிறார். இதனால் எதிர்ப்பு தெரிவித்தபடியே முகுந்தனை வெளியேற்றலாம் என்று கருதுகிறார். ஆனாலும் தொடர்ந்து அவர் ஆலோசனை நடத்தி வருவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

The post இளைஞர் அணி தலைவராக பேரனை நியமிப்பதில் உறுதி; 9 மாவட்டச் செயலாளர்களுடன் 2வது நாளாக அன்புமணி ஆலோசனை: ஓரங்கட்டப்படுவாரா ராமதாஸ்? appeared first on Dinakaran.

Related Stories: