பொதுக்குழு முடிந்த மறுநாளே நியமன கடிதம்; பாமக மாநில இளைஞரணி தலைவராக முகுந்தன் நீடிக்கிறார்: ராமதாஸ் அறிவிப்பு

திண்டிவனம்: பாமக மாநில இளைஞரணி தலைவராக முகுந்தன் நீடிப்பதாகவும், கட்சியின் சிறப்பு பொதுக்குழு முடிந்த அடுத்த நாளே நியமன கடிதம் வழங்கப்பட்டதாகவும் ராமதாஸ் தெரிவித்தார்.

விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அருகே தைலாபுரம் இல்லத்தில் பாமக நிறுவனர் ராமதாஸ் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:
தமிழகத்தில் சட்டம்- ஒழுங்கு பாதுகாப்பதில் கூடுதல் கவனம் தேவை. காவல்துறையை சுதந்திரமாக செயல்பட அனுமதிக்க வேண்டும். தமிழகத்தில் அதிகாரப்பூர்வமாக 4,829 டாஸ்மாக் கடைகள் உள்ளன. இதன் அருகில் சந்துக்கடைகள் நடத்துபவர்களை குண்டர் சட்டத்தின்கீழ் அடைத்திருக்க வேண்டும். இதில் நடவடிக்கை எடுக்காவிடில் முற்றுகையிடும் போராட்டத்தை பாமக நடத்தும்.

மெத்தபெட்டமின் என்ற போதைப்பொருள் பயன்பாடு அதிகரித்து வருகிறது. வீடுகளில் ஆய்வகம் நடத்தி மெத்தபெட்டமின் தயாரிக்கப்படுகிறது. பங்களிப்பு என்ற பெயரில் அரசு பள்ளிகளை தனியார் பள்ளிகளில் அடகு வைக்கக் கூடாது. தமிழகத்தில் 500 அரசு பள்ளிகள் தேர்வு செய்யப்பட்டு தனியார் பள்ளிகளாக்க உள்ளதாகவும், தனியார் பள்ளிகளின் பங்கேற்பை ஏற்க உள்ளதாகவும் அமைச்சர் கூறுவதை ஏற்க முடியாது. எனவே தனியார் பள்ளிகளிடம் உதவி கேட்கும் தமிழக அரசின் முடிவை கைவிட வேண்டும். கனமான சுமையில்லாத விளையாட்டுடன் கூடிய கல்வி வேண்டும்.

செல்போனில் குழந்தைகள் மூழ்கியுள்ளனர். ஒருகையில் உணவு, மற்றொரு கையில் செல்போன் வைத்து கொள்ளும் நிலை ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் 16 மாநகராட்சிகள், 41 நகராட்சிகள் விரிவுபடுத்த உள்ளன. 296 கிராம ஊராட்சிகள் நகர்புற ஊராட்சிகளுடன் இணைக்க உள்ளன. நகர்ப்புற உள்ளாட்சிகளுடன் கிராமப்புற உள்ளாட்சிகளை தமிழக அரசு இணைக்கக் கூடாது. பாமக பொதுக்குழுவில் இளைஞரணி தலைவர் அறிவிப்பதில் ஏற்பட்டது கருத்து வேறுபாடு இல்லை. அன்புமணியிடம் பேசி சரியாகி விட்டது. முகுந்தன் மாநில இளைஞரணி தலைவராக நீடிக்கிறார். பொதுக்குழு கூட்டம் நடைபெற்று முடிந்த அடுத்த நாளே முகுந்தனிடம் பணி நியமன கடிதம் வழங்கப்பட்டது. இவ்வாறு அவர் கூறினார்.

The post பொதுக்குழு முடிந்த மறுநாளே நியமன கடிதம்; பாமக மாநில இளைஞரணி தலைவராக முகுந்தன் நீடிக்கிறார்: ராமதாஸ் அறிவிப்பு appeared first on Dinakaran.

Related Stories: