பல நாட்களில் தினமும் 85 ஆயிரத்திற்கும் அதிகமானோர் தரிசனத்திற்கு வந்தனர். ஒரு சில நாட்களில் பக்தர்கள் எண்ணிக்கை 1 லட்சத்தையும் தாண்டியது. ஆனாலும் பக்தர்கள் அதிக சிரமம் இல்லாமல் தரிசனம் செய்தனர். அப்போது 1 நிமிடத்திற்கு 75 முதல் 85 பக்தர்கள் வரை 18ம் படி ஏறினர். ஆனால் தற்போது நிமிடத்திற்கு 65 பக்தர்கள் மட்டுமே ஏறுகின்றனர்.
சில சமயங்களில் வயதானவர்கள், குழந்தைகள் வரும்போது இந்த எண்ணிக்கை 50க்கும் குறைகிறது. இதனால் கடந்த சில தினங்களாக பக்தர்கள் தரிசனம் செய்வதற்கு 10 மணி நேரத்திற்கும் மேல் ஆகிறது. தற்போது புதிதாக 18ம் படியில் பக்தர்களை ஏற்றுவதற்காக நியமிக்கப்பட்டுள்ள போலீசாருக்கு அனுபவம் குறைவு என்பது தான் இதற்கு காரணம் என்று கூறப்படுகிறது. எனவே 18ம் படியில் அனுபவம் உள்ள போலீசாரை நியமிக்க வேண்டும் என்று பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ஆன்லைன் முன்பதிவு முடிந்தது
சபரிமலை தரிசனத்திற்கு தினமும் ஆன்லைனில் 70 ஆயிரம் பேருக்கும், உடனடி முன்பதிவில் 10 ஆயிரம் பேருக்கும் என மொத்தம் 80 ஆயிரம் பேருக்கு அனுமதி அளிக்கப்படுகிறது. ஆனால் பல நாட்களில் உடனடி முன்பதிவு எண்ணிக்கை 22 ஆயிரத்தையும் தாண்டுகிறது. இந்தநிலையில் வரும் 16ம் தேதி வரை ஆன்லைன் முன்பதிவு அனைத்தும் முடிந்து விட்டது. இதனால் வரும் நாட்களில் உடனடி முன்பதிவை பயன்படுத்துபவர்கள் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
The post சபரிமலையில் 10 மணி நேரத்திற்கு மேல் காத்திருக்கும் பக்தர்கள்: 18ம் படியில் ஏறும் வேகம் குறைந்தது appeared first on Dinakaran.