இடைநிற்றல் இல்லாத முன்னணி மாநிலம் தமிழ்நாடு: பள்ளிக்கல்வியில் மாணவர்கள்; தகவல் முறைமை ஆய்வில் தகவல்

சென்னை: நாடு முழுவதும் பள்ளிக் கல்வியில் மாணவ, மாணவியர் இடைநிற்றல் இல்லாமல் 100 சதவீதம் உயர் வகுப்புகளுக்கு செல்வதில் தமிழ்நாடு முன்னணியில் உள்ளது என பள்ளிக்கல்விக்கான ஒருங்கிணைந்த மாவட்ட தகவல் முறைமை ஆய்வில் தெரியவந்துள்ளது. நாடு முழுவதும் உள்ள பள்ளிகளில் தொடக்க கல்வியில் இருந்து உயர்நிலை வகுப்புகள் வரையில் மாணவ, மாணவியர் தங்கள் படிப்பை தொடர்கின்றனரா அல்லது இடையில் பள்ளிகளை விட்டு வெளியேறும் நிலை உள்ளதா என்று கல்விக்கான ஒருங்கிணைந்த மாவட்ட தகவல் முறைமை (Unified District Information System for Education) தகவல் திரட்டியுள்ளது.

அதில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: நாடு முழுவதும் பள்ளிக்கல்வியில் இடைநிற்றல் இல்லாமல் 2024ம் ஆண்டில் உயர்வகுப்புகளில் மாணவர்கள் தங்கள் பள்ளிப் படிப்பை கைவிடாமல் தொடர்வது (2019ம் ஆண்டைவிட) அதிகரித்துள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது. ஒட்டுமொத்தமாக பார்க்கும் போது பள்ளிப் படிப்பை தொடங்கும் 100 மாணவியரில் 80க்கும் மேற்பட்ட மாணவியர் தங்கள் இடைநிலைக் கல்வியை இடைநிறுத்தாமல் முடித்துள்ளனர். இது கடந்த 2019ம் ஆண்டில் 73.5ஆக இருந்தது. மாணவர்களின் நிலையைப் பார்க்கும் போது, 2019ல் 72.4ல் இருந்து 2024ல் 77.4 என்ற அளவில் அதிகரித்துள்ளது.

அகில இந்திய அளவில் இந்த முன்னேற்றம் இருந்தாலும், கர்நாடகா மற்றும் ராஜஸ்தான் போன்ற சில முக்கிய மாநிலங்களில் நடுநிலைப் பள்ளிகள், உயர்நிலைப் பள்ளிகளில் மாணவர்களின் இடைநிற்றல் அதிகரித்துள்ளதாக பதிவு செய்யப்பட்டுள்ளது. பீகார் மற்றும் அசாம் மாநிலங்களில் கடந்த 2019ம் ஆண்டின் இடைநிற்றல் விகிதம் இருந்த நிலையில் 2024ல் மேலும் அந்த அளவு சரிந்துள்ளதாக தெரிகிறது. உதாரணமாக, கர்நாடகாவில் பள்ளிப் படிப்பை தொடங்கிய 100 மாணவியரில் 79.3 மாணவியர் மட்டுமே உயர்நிலைப் பள்ளிகளில் 2024ல் படிப்பை தொடர்ந்துள்ளனர். கடந்த 2019ம் ஆண்டில் அது 76.5ஆக இருந்தது. அதேபோல மாணவர்களின் இடைநிற்றல் 73.6ல் இருந்து 70.7ஆக குறைந்துள்ளது.

பீகாரில் அதே காலகட்டத்தில் இந்த விகிதாச்சாரம் மோசமான நிலையில் இருந்து மிக மோசமான நிலைக்கு சென்றுள்ளது. அதாவது, கடந்த 2019ம் ஆண்டில் 100 மாணவியர் தங்கள் உயர்நிலைப் பள்ளிகளில் படிப்பை தொடங்கி இடைநில்லாமல் படிப்பை முடித்தவர்கள் 51.6 பேர். அதே 2024ம் ஆண்டில் அது 40.3 ஆக குறைந்துள்ளது. அதேபோல மாணவர்கள் 51.2ல் இருந்து 38.8 ஆக குறைந்துள்ளது.

இந்நிலையில், பீகார், அசாம் போன்ற மாநிலங்களின் நிலைமைகளுக்கு நேர்மாறாக கேரளா மற்றும் தமிழ்நாட்டு போன்ற மாநிலங்களில் நல்ல நிலையில், மிக நல்ல நிலைக்கு சென்றுள்ளது. குறிப்பாக கேரளாவில் பள்ளிப் படிப்பை தொடங்கிய 100 மாணவர்களில் 99.6 பேர் இடைநில்லாமல் தங்கள் பள்ளிப் படிப்பை கடந்த 2019ம் ஆண்டில் முடித்துள்ளனர். இது 2024ம் ஆண்டில் இடைநிற்றல் இல்லாமல் 100 ஆக வளர்ச்சி அடைந்துள்ளது. இந்த எண்ணிக்கை இரண்டு ஆண்டுகளிலும் மாணவியரின் இடைநிற்றல் இல்லாத நிலை 100 ஆக இருந்தது.

அதேபோல மாணவர்கள் தங்கள் பள்ளிப் படிப்பை தொடங்கி இடைநில்லாமல் பள்ளிப் படிப்பை விட்டுவிடாமல் 88.3 பேர் 2019ல் உயர்நிலைப் படிப்பை முடித்துள்ளனர். இது 2024ம் ஆண்டில் 95.7 என்று அளவில் வளர்ச்சி அடைந்துள்ளது. இதேபோல மாணவியர் கல்வியும் 93.2ல் இருந்து 97.5 ஆகவும் அதிகரித்துள்ளது.

தமிழகத்தை பொறுத்தவரையில் 100 மாணவர்கள் தங்கள் பள்ளிப் படிப்பை தொடங்கி, அவர்களில் 99 பேர் நடுநிலைப் பள்ளிவரை இடைநில்லாமல் 2019 வரை படிப்பை தொடர்ந்துள்ளனர். இந்த அளவு 2024ல் 100 ஆக அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது. அதேபோல மாணவியரின் கல்வியும் 97.5ல் இருந்து 100 ஆக அதிகரித்துள்ளது. உயர்நிலைப் பள்ளிகளில் இடைநில்லாமல் படிப்பை தொடர்ந்த அளவு மாணவர்களை பொறுத்தவரையில் 81.3ல் இருந்து 89.2 ஆக அதிகரித்துள்ளது. மாணவியரில் 89.4ல் இருந்து 95.6ஆக அதிகரித்துள்ளது.

பிற மாநிலங்களை ஒப்பிட்டு பார்க்கும் போது, மகாராஷ்டிராவில் கடந்த 2019ம் ஆண்டில் 100 பேர் தங்கள் பள்ளிப் படிப்பை தொடங்கி அவர்களில் 83.5 பேர் தான் உயர்நிலைப் பள்ளி வரை படிப்பை தொடர்கின்றனர். அதேநிலைதான் உத்தரகாண்ட் மாநிலத்திலும் நீடிக்கிறது. இருப்பினும் 2004ம் ஆண்டின் கணக்கின்படி மகாராஷ்டிராவில் உயர்நிலைப் பள்ளிவரை படிப்பவர்கள் எண்ணிக்கை 90.5 ஆக உயர்ந்துள்ள நிலையில் உத்தரகாண்ட் மாநிலத்தில் அதேபோல உயர்ந்துள்ளதாக தெரிகிறது. இருப்பினும் உத்தரகாண்ட் மாநிலத்திற்கு அது ஏற்றமாக இருக்கிறது.

தரவரிசையிலும் தமிழ்நாடு முன்னணி…
இந்நிலையில், தரவரிசைப் பட்டியலில் உத்தரகாண்ட் மாநிலம் 11வது இடத்தில் இருந்து 4வது இடத்துக்கு முன்னேறியுள்ளது. அரியானா அதன் தரவரிசையில் பெரிய வீழ்ச்சியை சந்தித்துள்ளது. கடந்த 2019ம் ஆண்டின் அனைத்து பள்ளிகளின் அளவிலும் இந்த மாநிலம் டாப் 10 வரிசையில் இருந்தது. ஆனால் 2024ம் ஆண்டு தரவரிசைப் பட்டியில் இடம் பெறவில்லை. இந்த வரிசைப்படி பார்க்கும் போது தமிழ்நாடு 2024ம் ஆண்டில் உயர்நிலை வகுப்புகளில் இடைநிற்றல் இல்லாமல் மாணவர்கள் தங்கள் படிப்பை முடித்த வகையில் முன்னணியில் உள்ளது தெரியவந்துள்ளது. அதேபோல மேற்குவங்கம் உயர்நிலை வகுப்புகளில் 100 எண்ணிக்கை பெற்றுள்ளதும் குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், கர்நாடகா, ராஜஸ்தான், குஜராத், மற்றும் அரியானா மாநிலங்களில் பள்ளி இடைநிற்றல் விகிதங்கள் கவலையளிப்பதாக இருக்கிறது.

தமிழகத்தின் சாதனைக்கு காரணம் என்ன?
தமிழ்நாட்டில் பள்ளிப்படிப்பைத் தொடங்கிய 100 சிறுவர்களில் நடுநிலைப்பள்ளி முடிப்பை முடித்தவர்கள் 2019ல் 99 பேர் என்பது 2024ல் 100 பேர் என உயர்ந்துள்ளது. அதேபோல, சிறுமியர் எண்ணிக்கை, 97.5ல் இருந்து 100 ஆக 2024-ல் அதிகரித்து இடையில் படிப்பை விடுவோர் தமிழ்நாட்டில் இல்லை என்பது புலனாகியுள்ளது. அதேபோல, தமிழ்நாட்டில் மேல்நிலைப் பள்ளிப் படிப்பை முடித்த மாணவர்கள் 2019-ல் 81.3 என இருந்தது 2024-ல் 89.2 ஆக உயர்ந்துள்ளது. மாணவிகளைப் பொறுத்தவரை 2019-ல் 89.4 சதவிகிதமாக இருந்தது 2024-ல் 95.6 சதவிகிதமாக அதிகரித்து சாதனை நிகழ்ந்துள்ளது.

இதற்கு காரணம், தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின், தமிழ்நாட்டில் பள்ளிப் படிப்பில் சேரும் குழந்தைகள் அனைவரும் தொடர்ந்து படிக்க வேண்டும் என்பதற்காகச் செயல்படுத்தி வரும் காலை உணவுத் திட்டம், திறன்மிகு வகுப்பறைகள் திட்டம், இல்லம் தேடி கல்வி திட்டம், எண்ணும் எழுத்தும் திட்டம், வாசிப்புப் பழக்கத்தை வளர்க்கும் திட்டம் மாற்றுத் திறனாளி மாணவர்கள் மீது தனி கவனம் செலுத்தும் திட்டம், முதலிய திட்டங்களே என்றும், இதநால் குழந்தைகள் பள்ளிக் கல்வியில் இடைநிற்றல் இல்லாமல் தொடர்ந்து ஆர்வத்துடன் படிப்பதில் ஊக்கமும் உற்சாகமும் அடைகிறார்கள் என்றும் ஒன்றிய அரசின் கல்வி அமைச்சக ஆய்வின் மூலம் தெரியவந்துள்ளது.

The post இடைநிற்றல் இல்லாத முன்னணி மாநிலம் தமிழ்நாடு: பள்ளிக்கல்வியில் மாணவர்கள்; தகவல் முறைமை ஆய்வில் தகவல் appeared first on Dinakaran.

Related Stories: