×

போலீசாரின் தொடர் அலட்சியத்தால் திருடு போகும் சிசிடிவி கேமராக்கள்

வாலாஜாபாத்: வாலாஜாபாத் ஒன்றியம் வாரணவாசி ஊராட்சியில் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இங்கு, ஊராட்சியில் ஒன்றிய நடுநிலைப்பள்ளி, ஆரம்பப் பள்ளி, அங்கன்வாடி மையம், நூலகம், கிராம நிர்வாக அலுவலகம், ஆரம்ப சுகாதார நிலையம் உள்ளிட்ட பல்வேறு அரசு அலுவலகங்கள் செயல்படுகின்றன. இவை மட்டுமின்றி வாரணவாசி ஊராட்சியை சுற்றிலும் 10க்கும் மேற்பட்ட தொழிற்சாலைகள் உள்ளன. இதில், ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர்.

இந்நிலையில், ஊராட்சியில் பல்வேறு வட மாநிலத்தவர் மற்றும் தமிழகத்தை சேர்ந்த பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த பெண்கள், இளைஞர்கள் என ஆயிரக்கணக்கானோர் இங்கு தங்கி அருகாமையில் உள்ள வாரணவாசி, ஓரகடம் உள்ளிட்ட பகுதியில் செயல்படும் தொழிற்சாலைகளில் பணியாற்றி வருகின்றனர். மேலும், வாரணவாசியை சுற்றிலும் 30க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. இங்கு உள்ளவர்கள் வாரணாசி பேருந்து நிறுத்தத்தில் இருந்து காஞ்சிபுரம், வாலாஜாபாத், ஒரகடம், பெரும்புதூர் உள்ளிட்ட பல்வேறு நகர்ப்புற பகுதிகளுக்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கானோர் சென்று வருகின்றனர்.

இதனால் இரவு, பகல் என எப்போதுமே மக்கள் கூட்டம் நிறைந்தது காணப்படுவது மட்டுமின்றி இங்குள்ள தொழிற்சாலைகளுக்கு சுழற்சி முறையில் பெண் மற்றும் ஆண் தொழிலாளர்கள் சென்று வருகின்றன. இந்நிலையில், இவர்களின் பாதுகாப்பிற்காக ஊராட்சி நிர்வாகம் சார்பில் அனைத்து தெருக்களிலும் தேவைக்கேற்ப சிசிடிவி கேமரா பொருத்தப்பட்டுள்ளன. இதனால், இரவு நேரங்களில் தொழிற்சாலை பணி முடிந்து வீடு திரும்பும் தொழிலாளர்கள் தங்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் பொருத்தப்பட்ட கேமராக்கள் தற்போது சமூக விரோதிகளால் தொடர்ந்து திருடப்பட்டு வருகின்றன.

குறிப்பாக கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பு வாரணவாசி பெருமாள் கோயில் தெரு தமிழ் நகர் கங்கையம்மன் கோயில் தெரு, மெயின் ரோடு மற்றும் ஆம்பாக்கம் பகுதியில் உள்ள முத்துமாரியம்மன் கோயில் தெரு, தாழையம்பட்டு பகுதியில் உள்ள மெயின் ரோடு ஆகிய இடங்களில் பொருத்தப்பட்டிருந்த 10க்கும் மேற்பட்ட கேமராக்கள் திருடு போனது. இதனைத்தொடர்ந்து நேற்று இரவு ராமானுஜபுரம், பகுதி மற்றும் ஆம்பாக்கம் பெருமாள் கோயில் தெரு ஆகிய பிரதான தெருக்களில் வைக்கப்பட்டிருந்த 10க்கும் மேற்பட்ட சிசிடிவி கேமராக்கள் திருடு போய் உள்ளன. இதனால், அப்பகுதி மக்கள் அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளனர்.

இதனால், இங்குள்ள மக்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாக மாறி உள்ளது. இது போன்ற நிலையில் இது குறித்து ஊராட்சி நிர்வாகம் சார்பில் ஒரகடம் காவல் நிலையத்தில் தொடர்ந்து புகார் அளிக்கப்பட்டு வருகின்றன. இருப்பினும் சிசிடிவி கேமரா திருட்டை தடுக்க ஒரகடம் காவல் நிலைய போலீசார் முன்வராததால் இப்பகுதியில் தொடர்ந்து சிசிடிவி கேமராக்கள் அடிக்கடி திருடு போவது என்பது தொடர்கதையாக உள்ளன. இதுபோன்ற நிலையில் வாரணவாசி பகுதியில் தொடர்ந்து சிசிடிவி கேமராக்கள் திருடு போகும் புகாரை உரிய முறையில் காவல்துறையினர் விசாரித்து இங்கு சமூக விரோத செயல்களுக்கு எதிர்முனையாக உள்ள கேமராக்களை திருடும் சமூக விரோதிகள் மீது நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என இப்பகுதி சமூக ஆர்வலர்களும், கிராம மக்களும் வலியுறுத்துகின்றனர்.

* தொடர் திருட்டு
வாரணாசி ஊராட்சியை சுற்றிலும் 10க்கும் மேற்பட்ட தொழிற்சாலைகள் உள்ளதால் வாரணாசி கிராமத்தில் இருந்து பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த ஆயிரக்கணக்கான பெண் மற்றும் ஆண் தொழிலாளர்கள் நாள்தோறும் சுழற்சி முறையில் இரவு பகலாக பணிக்கு சென்று வருகின்றனர். இவர்களின் பாதுகாப்பிற்கு வைக்கப்பட்டுள்ள சிசிடிவி கேமராக்கள் அனைத்தும் தொடர்ந்து திருடு போவது இங்குள்ள தொழிலாளர்கள் மத்தியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளன. சிசிடிவி திருடு போகும் சம்பவத்திற்கு முற்றுப்புள்ளி வைக்க ஒரகடம் காவல் நிலையம் உடனடி நடவடிக்கை தேவை என சமூக ஆர்வலர்களும், கிராமமக்களும் வலியுறுத்துகின்றனர்.

* மூன்றாவது கண்
காவல்துறையின் மூன்றாவது கண்ணாக விளங்குவது சிசிடிவி கேமரா இந்த கேமராக்களை அனைத்து கிராமங்களிலும் பொருத்தி மக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என போலீசார் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். இந்நிலையில், வாரணவாசி ஊராட்சியில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமராக்கள் தொடர்ந்து திருடு போவது குறித்து ஊராட்சி நிர்வாகம் சார்பில் தொடர்ந்து புகார் அளித்தும் ஒரகடம் போலீசார் ஏன் கண்டு கொள்வதில்லை என கிராம மக்கள் கேள்வி எழுப்புகின்றனர்.

* வாரணவாசியில் துணை காவல் நிலையம்
வாரணவாசி ஊராட்சி ஒரகடம் காவல் நிலையத்தில் கடைசி எல்லை பகுதியாக உள்ள நிலையில் இங்கு போலீசார் எந்தவித ரோந்து பணியோ அல்லது வாகன தணிக்கையோ மேற்கொள்வதில்லை. மேலும் இரவு, பகலாக எப்பொழுதுமே மக்கள் நடமாட்டம் மிகுந்து காணப்படும் வாரணவாசி ஊராட்சியில் புதிய துணை காவல் நிலையம் அமைக்க வேண்டும் என இப்பகுதி மக்கள் தொடர்ந்து வலியுறுத்தி வரும் நிலையில் இதற்கான நடவடிக்கையை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என இப்பகுதி மக்கள் வலியுறுத்துகின்றனர்.

The post போலீசாரின் தொடர் அலட்சியத்தால் திருடு போகும் சிசிடிவி கேமராக்கள் appeared first on Dinakaran.

Tags : Valajabad ,Union of Valajabad ,Varanavasi Orati ,Union Secondary School ,Primary School ,Anganwadi Centre ,Library ,Village Administration Office ,Primary Health Centre ,Dinakaran ,
× RELATED வாலாஜாபாத் ஒன்றியத்தில் அய்யம்பேட்டை...