பூந்தமல்லி: ஆங்கில புத்தாண்டு அன்று பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் அதிக ஒலியுடன் பைக்குகளை ஓட்டிய 10 பேர் மீது வழக்குப்பதிவு செய்து, பைக்குகள் பறிமுதல் செய்யப்பட்டன. சென்னை கோயம்பேடு சுற்றுவட்டார பகுதிகளில் நேற்றுமுன்தினம் நள்ளிரவில் ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு போக்குவரத்து உதவி ஆணையர் ரவி உத்தரவின்படி போக்குவரத்து இன்ஸ்பெக்டர் சுந்தரம் தலைமையில் சுமார் 100க்கும் மேற்பட்ட போக்குவரத்து போலீசார் வாகன சோதனையில் தீவிரமாக ஈடுபட்டு வந்தனர். அப்போது அந்த வழியாக அதிக ஒலியுடன் பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் அசுர வேகத்தில் பைக் ஓட்டி வந்த நபர்களை போக்குவரத்து போலீசார் சுற்றி வளைத்து மடக்கி பிடித்தனர். இதில், 10 பேர் மீது வழக்குப்பதிவு செய்து அவர்களிடம் இருந்து 10 பைக்குகளை பறிமுதல் செய்து பைக் ஓட்டி வந்த நபர்களை எச்சரித்து விடுவித்தனர்.
அதன் பின்னர் பறிமுதல் செய்த பைக்குகள் கோயம்பேடு காவல் நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. இதுகுறித்து போக்குவரத்து போலீசார் சார்பில் கூறுகையில், ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு இரண்டு நாட்களுக்கு முன்பே போக்குவரத்து இன்ஸ்பெக்டர் சுந்தரம் தலைமையில் வாகன ஓட்டிகளிடம் புத்தாண்டு அன்று வாகனங்களை வேகமாக ஓட்ட கூடாது, குறிப்பாக அதிக ஒலியுடன் பைக்குகளை ஓட்டவேகூடாது என்று விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. இதனை மீறி புத்தாண்டு அன்று அதிக ஒலியுடன் பைக்குகளை ஓட்டிய 10 பேர் மீது வழக்குப்பதிவு செய்து அவர்களிடம் இருந்து 10 பைக்குகளையும் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் பறிமுதல் செய்யப்பட்ட பைக்குகள் போக்குவரத்து காவல் உயர் அதிகாரிகளின் உத்தரவு வந்தவுடன் மீண்டும் பைக் உரிமையாளரிடம் ஒப்படைக்கப்படும் என கூறினர்.
The post அதிக ஒலியுடன் பைக்குகளை ஓட்டிய 10 பேர் மீது வழக்கு; பைக்குகள் பறிமுதல் appeared first on Dinakaran.