சென்னை: தமிழகத்தில் பத்திரப்பதிவு அலுவலகம் செல்லாமல் திருமணத்தை பதிவு செய்யும் திட்டம் விரைவில் அமல்படுத்தப்பட உள்ளது. தமிழகத்தில், பத்திரப்பதிவு அலுவலகங்களில் திருமணங்களை பதிவு செய்யும் நடைமுறை உள்ளது. அதற்காக தமிழ்நாடு திருமணங்கள் பதிவுச் சட்டம் 2009-ம் ஆண்டு கொண்டு வரப்பட்டது. இந்த சட்டத்தின் கீழ் தமிழகத்தில் நடைபெறும் திருமணங்களை பதிவு செய்து கொள்ளலாம். இந்த சட்டம் கொண்டுவரப்பட்ட போது, திருமணம் நடைபெறும் பகுதியில் உள்ள பதிவாளர் அலுவலகத்தில் மட்டுமே திருமணத்தை பதிவு செய்ய முடியும்.
பின்னர் 2020-ம் ஆண்டு இந்த சட்டத்தில் தமிழக அரசு திருத்தம் ஒன்று கொண்டு வந்தது. அதன்படி மணமகன் அல்லது மணமகள் வசிக்கும் பகுதியில் உள்ள பதிவாளர் அலுவலகத்தில் கூட திருமணங்களை பதிவு செய்யலாம் என தெரிவிக்கப்பட்டது. ஆனால் பலரும் திருமணங்களை பதிவு செய்ய வருவதில்லை என கூறப்படுகிறது. திருமணப் பதிவுக்கு ரூ.300 கட்டணம் என்ற நிலையில் சில இடங்களில் ரூ.5,000 வரை கேட்பதாக புகார் எழுந்துள்ளது. நடைமுறை சிக்கல்களை களைய திருமணப் பதிவு முறையை எளிதாக்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளது.
இணையதளம் அல்லது மொபைல்போன் வாயிலாக திருமணப் பதிவை செய்து கொள்ள விரைவில் வழிவகை செய்யபப்டும் என்று கூறப்படுகிறது. முதற்கட்டமாக தமிழ்நாடு திருமண சட்டத்தின் கீழ் பதிவு செய்பவர்களுக்கு பொருந்தும் எனவும், பத்திரப்பதிவு அலுவலகங்களில் பதிவு செய்யப்படும் சிறப்பு திருமணங்கள் போன்றவற்றில் ஏற்கனவே உள்ள நடைமுறைகள் இருக்கும் என தகவல் வெளியாகியுள்ளது. விரைவில் இவை செயல்பாட்டிற்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
The post இனி, திருமணங்களை ஆன்லைனில் பதிவு செய்யலாம்: தமிழக அரசு திட்டம் appeared first on Dinakaran.