இந்தியா-ஆஸ்திரேலியா மோதும் கடைசி டெஸ்ட் சிட்னியில் நாளை தொடக்கம்: ஆகாஷ்தீப், ரிஷப் பன்ட் நீக்கம்?

சிட்னி: இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் இடையே 5 டெஸ்ட் கொண்ட பார்டர்-கவாஸ்கர் டிராபி தொடர்ந்து நடந்து வருகிறது. இதில் முதல் டெஸ்ட்டில் இந்தியாவும், 2 மற்றும் 4வது டெஸ்ட்டில் ஆஸ்திரேலியாவும் வென்ற நிலையில் 3வது டெஸ்ட் டிராவில் முடிந்தது. இதனால் 2-1 என ஆஸ்திரேலியா முன்னிலை பெற்றுள்ள நிலையில் 5வது மற்றும் கடைசி டெஸ்ட் சிட்னியில் நாளை தொடங்குகிறது. இதில் வெற்றிபெற்று தொடரை சமன் செய்ய வேண்டிய கட்டாயத்தில் இந்தியா களம் இறங்குகிறது. கேப்டன் ரோகித்சர்மா டெஸ்ட்டில் 31 ரன்களே அடித்துள்ள நிலையில் ரன் குவிக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளார். ஜெய்ஸ்வால் 359, நிதிஷ்குமார் ரெட்டி 294 , கே.எல்.ராகுல் 269 ரன் எடுத்துள்ளனர். விராட்கோஹ்லி பெர்த்தில் மட்டும் சதம் அடித்தார். ரிஷப்பன்ட் ஆட்டமும் எடுபடவில்லை.

பவுலிங்கில் பும்ரா முதுகெலும்பாக உள்ளார். அவர் 30 விக்கெட் வீழ்த்தி இருக்கிறார். சிராஜ் 16 விக்கெட் எடுத்துள்ளார். நாளை இந்திய அணியில் ஒருசில மாற்றங்கள் இருக்கலாம், ஆகாஷ் தீப் முதுகில் காயம் அடைந்துள்ளார். இதனால் அவருக்கு பதிலாக பிரசித் கிருஷ்ணா அல்லது ஹர்ஷித் ரானா இடம்பெறக்கூடும். பேட்டிங்கில் ரிஷப் பன்ட்டிற்கு பதிலாக துருவ் ஜூரலை சேர்க்க அணி பரிசீலித்து வருகிறது. மேலும் வாஷிங்டன் அல்லது ஜடேஜாவிற்கு பதில் கில் இடம்பெறக்கூடும். இந்த டெஸ்ட்டில் இந்தியா வெற்றிபெற்றால் தான் சாம்பியன் டிராபி பைனலுக்கு தகுதிபெறும் வாய்ப்பில் நீடிக்க முடியும். மேலும் கடந்த முறை தொடரை கைப்பற்றியதால் கோப்பையையும் தக்க வைக்கலாம். தோல்வி அடைந்தால் தொடரை இழப்பதுடன் ஆஸ்திரேலியா தகுதி பெற்று விடும்.

மறுபுறம் ஆஸ்திரேலியா வெற்றி பெற்று சொந்த மண்ணில் கோப்பையை கைப்பற்றுவதுடன், சாம்பியன் ஷிப் பைனலுக்கு 2வது முறையாக முன்னேறும் முனைப்பில் உள்ளது. பேட்டிங்கில் ஸ்மித், லாபுசாக்னே பார்மில் உள்ளனர். டிராவிஸ் ஹெட் கடந்த டெஸ்ட்டில் சொபிக்காத நிலையில் சிட்னியில் ரன் குவிக்கும் உத்வேகத்தில் உள்ளார். கேப்டன் கம்மின்ஸ் பேட்டிங், பவுலிங்கில் கைகொடுத்து வருகிறார். புத்தாண்டில் வெற்றியுடன் தொடங்க இரு அணிகளும் போராடும் என்பதால் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இந்திய நேரப்படி நாளை காலை 5 மணிக்கு போட்டி தொடங்குகிறது. இதனை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல் நேரடி ஒளிபரப்பு செய்கிறது.

மிட்செல் மார்ஷ் நீக்கம்
சிட்னி டெஸ்ட்டில் ஆடும் லெவனை ஆஸ்திரேலிய அறிவித்துள்ளது. ஆல்ரவுண்டர் மிட்செல் மார்ஷ் 4 டெஸ்ட்டில் 73 ரன் மற்றும் 3 விக்கெட் மட்டுமே எடுத்துள்ளார். இதனால் சிட்னி டெஸ்ட்டில் அவர் அதிரடியாக நீக்கப்பட்டுள்ளார். அவருக்கு பதிலாக 31 வயதான ஆல்ரவுண்டர் பியூ வெப்ஸ்டர் அறிமுக வீரராக களம் இறங்க உள்ளார்.

பிட்ஸ்… பிட்ஸ்…
* நாளைய டெஸ்ட்டின் போது ஆடுகளத்தை பார்த்தபின் ஆடும் லெவன் தேர்வு செய்யப்படும் என இந்திய அணியின் பயிற்சியாளர் கவுதம் கம்பீர் இன்று செய்தியாளர்களிடம் கூறினார்.
* டெஸ்ட் போட்டிகளில் அண்மை காலமாக பார்ம் இழந்து தடுமாறும் ரோகித்சர்மா, இந்த சிட்னி போட்டியுடன் டெஸ்ட்டில் இருந்து ஓய்வு பெறுவார் என்ற கூறப்படுகிறது.
* புற்றுநோய் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் முன்னாள் வீரர் மெக்ராத் நடத்தும் அறக்கட்டளைக்கு உதவும் வகையில் சிட்னி டெஸ்ட்டில் ஆஸ்திரேலியா வீரர்கள் பிங்க் நிற தொப்பியை அணிந்து விளையாடுகின்றனர்.
* சிட்னி டெஸ்ட்டில் முதல் நாளில் பிற்பகலில் மழைக்கு வாய்ப்பு உள்ளது. ஆனால் அடுத்த 3 நாட்கள் தெளிவான வானிலை காணப்படும். கடைசி நாளில் 80 சதவீதம் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

The post இந்தியா-ஆஸ்திரேலியா மோதும் கடைசி டெஸ்ட் சிட்னியில் நாளை தொடக்கம்: ஆகாஷ்தீப், ரிஷப் பன்ட் நீக்கம்? appeared first on Dinakaran.

Related Stories: