ஸ்ரீரங்கத்தில் வைகுண்ட ஏகாதசி விழா: சவுரி கொண்டை அலங்காரத்தில் நம்பெருமாள்

திருச்சி: ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் வைகுண்ட ஏகாதசி விழா பகல் பத்து உற்சவத்தின் 3ம் நாளான இன்று காலை சவுரி கொண்டை அலங்காரத்தில் நம்பெருமாள் எழுந்தருளினார். பூலோக வைகுண்டம் என போற்றப்படும் திருச்சி ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் வைகுண்ட ஏகாதசி விழா நேற்றுமுன்தினம் இரவு திருநெடுந்தாண்டகத்துடன் துவங்கியது. இதைத்தொடர்ந்து பகல்பத்து உற்சவம் நடைபெற்து வருகிறது.

3ம் நாளான இன்று காலை 7 மணிக்கு நம்பெருமாள் மாம்பழ நிற பட்டு அணிந்து, அஜந்தா சவுரி கொண்டை சூடி, கலிங்கத்துராய் கல் இழைத்த ஒட்டியாணம், கிரீடத்தில் நெற்றி கட்டாக அணிந்து, வைர அபய ஹஸ்தம், கல் இழைத்த கோலக் கிளி, மார்பில் பங்குனி உத்திர பதக்கம், அடுக்கு பதக்கங்கள், நெல்லிக்காய் மாலை, ஆறு வட முத்து சரம் பின்புறம் அண்ட பேரண்ட பக்ஷி பதக்கம், புஜ கீர்த்தி, திருக்கைகளில் தாயத்து சரம், ரத்தின திருவடி உள்ளிட்ட ஆபரணங்கள் அணிந்து 7.30 மணிக்கு அர்ச்சுன மண்டபத்தில் எழுந்தருளினார். இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டனர்.

பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து நம்பெருமாள், மூலவரை தரிசனம் செய்து வருகின்றனர். இரவு 7 மணிக்கு நம்பெருமாள் அர்ச்சுன மண்டபத்திலிருந்து புறப்பட்டு 9.45 மணிக்கு மூலஸ்தானத்தை அடைகிறார். இன்று மூலவர் முத்தங்கி சேவையில் காட்சி அளித்தார். வரும் 9ம் தேதி நம்பெருமாள் மோகினி அலங்காரத்தில் அர்ச்சுன மண்டபத்தில் எழுந்தருள்வார். விழாவின் முக்கிய நிகழ்ச்சியான பரமபதவாசல் திறப்பு வரும் 10ம் தேதி நடைபெறுகிறது. இதைத்தொடர்ந்து ராப்பத்து உற்சவம் 10ம் ேததி துவங்குகிறது.

The post ஸ்ரீரங்கத்தில் வைகுண்ட ஏகாதசி விழா: சவுரி கொண்டை அலங்காரத்தில் நம்பெருமாள் appeared first on Dinakaran.

Related Stories: