கிருஷ்ணகிரி அருகே ஒரு வருடமாக பொதுமக்களை அச்சுறுத்திய சிறுத்தை சிக்கியது


தேன்கனிக்கோட்டை: கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை அருகே உள்ள அடவிசாமிபுரம் அருகே மதனகிரி முனேஸ்வரன் கோயில் உள்ளது. கோயிலையொட்டி சனத்குமார் ஆறு பகுதி உள்ளது. மழை காலங்களில் ஆற்றில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடும். கடந்த வருடம் போதிய மழையில்லாததால் ஆறு தற்போது வறண்டு புதர்மண்டி கிடக்கிறது. மதனகிரி முனேஸ்வரன் கோயில் பின்புறம் சனத்குமார் ஆற்றின் கரை பகுதியில் சிறுத்தை ஒன்று கடந்த ஒரு வருடத்திற்கும் மேல் பாறை இடுக்குகளில் மறைந்து கொண்டு அப்பகுதியில் மேய்ச்சலுக்கு செல்லும் ஆடுகள், அருகில் உள்ள தெருநாய்களை அடிக்கடி கவ்வி சென்றது.

இதனால் அடவி சாமிபுரம், தண்டரை, பஞ்சேஸ்வரம், இஸ்லாம்பூர், பெண்ணங்கூர், ஆளேநத்தம் உள்ளிட்ட கிராம மக்கள் அச்சத்துடன் வாழ்ந்து வந்தனர். தேன்கனிக்கோட்டை வனத்துறையினர் சிறுத்தையின் நடமாட்டத்தை கண்காணிப்பு கேமிரா பொருத்தி கண்காணித்து சிறுத்தை நடமாட்டம் உறுதி செய்தனர். பின்னர் அப்பகுதியில் கூண்டு வைத்து பிடிக்க பல முறை முயற்சி செய்தனர். ஆனால் சிறுத்தை கடந்த ஒரு வருடமாக கூண்டில் சிக்காமல் தப்பி சுற்றி வந்தது. மேலும் அப்குதியில் உள்ள தனியார் பண்ணையில் உள்ள ஓட்டல் கழிவுகளை சாப்பிட வரும் நாய்களை கடித்து தின்றும் அப்பகுதியில் முகாமிட்டும் வந்தது.

இந்நிலையில் இன்று அதிகாலை 3 மணியளவில் கூண்டில் வைத்திருந்த இறைச்சியை சாப்பிட சிறுத்தை வந்த போது கூண்டில் சிக்கி உள்ளது. இதனை அப்பகுதியை சேர்ந்த கிராம மக்கள் பார்த்து வனத்துறைக்கு தகவல் தெரிவித்தனர். வனத்துறையினர் அங்கு வந்து கூண்டுடன் சிறுத்தையை வனத்துறை வாகனத்தில் ஏற்றி சென்றனர்.

The post கிருஷ்ணகிரி அருகே ஒரு வருடமாக பொதுமக்களை அச்சுறுத்திய சிறுத்தை சிக்கியது appeared first on Dinakaran.

Related Stories: