×

கடலூர் முதுநகரில் நள்ளிரவில் தவாக நிர்வாகி படுகொலை: பைக்குகள் தீ வைத்து எரிப்பு


கடலூர்: கடலூர் முதுநகரில் தமிழக வாழ்வுரிமைக் கட்சி நிர்வாகி படுகொலை செய்யப்பட்டார். இதனை தொடர்ந்து வீடு, பைக்குகள் தீ வைத்து எரிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கடலூர் முதுநகர் சான்றோர்பாளையம் பகுதியை சேர்ந்தவர் சங்கர் (37). தமிழக வாழ்வுரிமை கட்சி நிர்வாகி. இந்நிலையில் நேற்று நள்ளிரவு சங்கர் தனது வீட்டின் அருகே நண்பர்களுடன் பேசிக் கொண்டிருந்தார். அப்போது அங்கு மோட்டார் சைக்கிளில் கத்தி உள்ளிட்ட ஆயுதங்களுடன் சதீஷ் உள்ளிட்ட 2 பேர் வந்துள்ளனர். இதை பார்த்த சங்கர் அங்கிருந்து தப்பி செல்ல முயன்றார். அதற்குள் அவர்கள் சங்கரை விரட்டிச் சென்று கத்தியால் மார்பில் குத்தியுள்ளனர். இதில் ரத்த வெள்ளத்தில் சரிந்த சங்கர் சம்பவ இடத்திலேயே இறந்தார். கொலையாளிகள் 2 பேரும் அங்கிருந்து தப்பி சென்று விட்டனர்.

இதுகுறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று சங்கரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கடலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சங்கருக்கும் சதீஷ் என்பவருக்கும் ஏற்கனவே முன்விரோதம் இருந்துள்ளது. அதன்பேரில் இந்தப் படுகொலை நடந்ததாக போலீசாரின் முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. இதையடுத்து போலீசார் சதீஷ் மற்றும் அவருடன் வந்த மற்றொரு நபரை வலை வீசி தேடி வருகின்றனர். இந்நிலையில் கொலை சம்பவம் நடந்த பிறகு நேற்று நள்ளிரவு சதீஷ் வீட்டுக்கு மர்ம நபர்கள் சிலர் தீ வைத்துள்ளனர். இதில் வீட்டிலிருந்த பொருட்கள் அனைத்தும் தீயில் எரிந்து சேதமானது. மேலும் வீட்டின் வெளியே நிறுத்தப்பட்டிருந்த 2 மோட்டார் சைக்கிள்களையும் தீ வைத்து எரித்துள்ளனர்.

The post கடலூர் முதுநகரில் நள்ளிரவில் தவாக நிர்வாகி படுகொலை: பைக்குகள் தீ வைத்து எரிப்பு appeared first on Dinakaran.

Tags : Dawa ,Cuddalore ,Tamil Life Party ,Sankar ,Tamil Nadu Life Party ,Cuddalore Capital ,Dinakaran ,
× RELATED கடலூர் கலெக்டர் அலுவலகத்தில்...