ராமநாதபுரம் அருகே லாரி மீது ஆம்புலன்ஸ் மோதி 3 பேர் பரிதாப பலி: 2 பேர் படுகாயம்

ராமநாதபுரம்: ராமநாதபுரம் அருகே இன்று அதிகாலை ஆம்புலன்ஸ்-லாரி மோதிக்கொண்ட விபத்தில் 3 பேர் பரிதாபமாக பலியாகினர். இருவர் படுகாயமடைந்தனர். ராமநாதபுரம் மாவட்டம், மண்டபம் அருகே உள்ள மரைக்காயர்பட்டிணத்தை சேர்ந்தவர் வரிசைக்கனி (65). இவருக்கு நேற்று நள்ளிரவு 12 மணியளவில் திடீரென உடல்நல குறைவு ஏற்பட்டது. இதையடுத்து அவரை உறவினர்களான அனிஸ் பாத்திமா (43), ஜாபர் சாதிக் (43), தாகாஷா (26) ஆகியோர் தமுமுக உதவி ஆம்புலன்ஸ் மூலம் ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்து சென்றுகொண்டிருந்தனர். ஆம்புலன்ஸை சையது அர்ஷத் ரகுமான் (30) ஓட்டி வந்துள்ளார்.

வழுதூர் அருகே தனியார் பெட்ரோல் பங்க் பகுதியில் ஆம்புலன்ஸ் சென்றுகொண்டிருந்தது. அப்போது, ஆம்புலன்சின் முன்புறம் அதே திசையில் ராமேஸ்வரத்தில் இருந்து ராமநாதபுரத்திற்கு மரத்துண்டுகளை ஏற்றிய லாரி சென்றுகொண்டிருந்தது. பெட்ரோல் பங்க்கில் டீசல் போடுவதற்காக லாரி டிரைவர் வேகத்தை குறைத்ததாக கூறப்படுகிறது. அப்போது, பின்னால் வந்த ஆம்புலன்ஸ் டிரைவர் விலகி செல்ல முயன்றுள்ளார். ஆனால், எதிரே திடீரென பஸ் வந்ததால் ஆம்புலன்ஸ் டிரைவர் பிரேக் அடிக்க முயன்றார். இதில் கட்டுப்பாட்டை இழந்த ஆம்புலன்ஸ் லாரியின் பின்புறம் பயங்கரமாக மோதியது. இதில் ஆம்புலன்சின் முன்பகுதி நொறுங்கியது.

இந்த விபத்தில் நோயாளி வரிசைகனி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். ஆம்புலன்சில் இருந்த அனீஸ் பாத்திமா, ஜாபர் சாதிக், தாகாஷா, டிரைவர் சையது அர்ஷத் ரகுமான் ஆகியோர் படுகாயமடைந்தனர். அவர்களை போலீசார் மீட்டு மற்றொரு ஆம்புலன்சில் ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால், வழியிலேயே அனீஸ் பாத்திமா, ஜாபர் சாதிக் ஆகியோர் உயிரிழந்தனர். ஆம்புலன்ஸ் டிரைவர் சையது அர்ஷத் ரகுமான், தாகாஷா ஆகியோர் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர். விபத்து குறித்து கேணிக்கரை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். மேலும் தப்பியோடிய லாரி டிரைவரை தேடி வருகின்றனர்.

The post ராமநாதபுரம் அருகே லாரி மீது ஆம்புலன்ஸ் மோதி 3 பேர் பரிதாப பலி: 2 பேர் படுகாயம் appeared first on Dinakaran.

Related Stories: