வர்த்தக காஸ் சிலிண்டர் விலை ரூ.14.50 குறைப்பு: வீட்டு காஸ் ரூ.818.50 ஆக நீடிப்பு

சேலம்: வர்த்தக காஸ் சிலிண்டர் விலை ரூ.14.50 குறைக்கப்பட்டுள்ளது. ஆனால் வீட்டு உபயோக காஸ் சிலிண்டர் விலையில் மாற்றம் செய்யப்படவில்லை. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை, இறக்குமதி செலவு, அமெரிக்க டாலருக்கு நிகராக இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றை கணக்கில் கொண்டு பெட்ரோல், டீசல், காஸ் சிலிண்டர் உள்ளிட்ட எரிபொருட்களின் விலையை, எண்ணெய் நிறுவனங்களின் கூட்டமைப்பு நிர்ணயித்து வருகிறது. இதில், காஸ் சிலிண்டர் விலை மாதந்தோறும் 1ம் தேதி மாற்றியமைக்கப்படுகிறது.

நாடாளுமன்ற தேர்தல் வந்தநேரத்தில், ஒன்றிய அரசு 2 முறையாக வீட்டு உபயோக சிலிண்டர் விலையை ரூ.300 குறைத்தது. இதனால் வீட்டு உபயோக காஸ் சிலிண்டர் விலை கடந்த மார்ச் மாதத்தில் டெல்லியில் ரூ.803, மும்பையில் ரூ.802.50, கொல்கத்தாவில் ரூ.829, சென்னையில் ரூ.818.50, சேலத்தில் ரூ.836.50க்கு வழங்கப்பட்டது. இதன்பின்னர், கடந்த 9 மாதங்களாக விலையில் மாற்றத்தை ஏற்படுத்தாமல் நிலையாக வைத்துக்கொண்டனர்.

இந்நிலையில் நடப்பு ஆண்டின் முதல் மாதமான ஜனவரியில் வீட்டு சிலிண்டர் விலை குறையும் என மக்கள் எதிர்பார்த்திருந்தனர். நேற்று அதிகாலை புதிய விலையை எண்ணெய் நிறுவனங்களின் கூட்டமைப்பு வெளியிட்டது. அதில், தொடர்ந்து 10வது மாதமாக வீட்டு உபயோக சிலிண்டர் விலையில் மாற்றத்தை ஏற்படுத்தாமல், கடந்த மாத விலையே நீடிப்பதாக அறிவிக்கப்பட்டது. இதனால், புத்தாண்டில் விலை குறைப்பு இருக்குமென எதிர்பார்த்திருந்த மக்கள் பெரும் ஏமாற்றம் அடைந்தனர்.

அதேவேளையில், 19 கிலோ எடை கொண்ட வர்த்தக காஸ் சிலிண்டர் விலை இம்மாதத்தில் ரூ.14.50 குறைக்கப்பட்டுள்ளது. கடந்த 6 மாதத்தில் வர்த்தக காஸ் சிலிண்டர் விலை ரூ.172வரை உயர்த்தப்பட்ட நிலையில், இம்மாதம் மிக சொற்ப அளவில் விலை குறைப்பு செய்துள்ளனர். இதனால் வர்த்தக காஸ் சிலிண்டரின் விலை சென்னையில் ரூ.1,964.50 என இருந்து ரூ.14.50 குறைந்து ரூ.1966 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. டெல்லியில் ரூ.1,804.50 ஆகவும், மும்பையில் ரூ.1,756, கொல்கத்தாவில் ரூ.1913 ஆகவும் விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

The post வர்த்தக காஸ் சிலிண்டர் விலை ரூ.14.50 குறைப்பு: வீட்டு காஸ் ரூ.818.50 ஆக நீடிப்பு appeared first on Dinakaran.

Related Stories: