நாகர்கோவில்: நாகர்கோவிலில் உள்ள வீட்டில் புகுந்த கொள்ளையரை வெளிநாட்டில் இருந்தவாறு தொழிலதிபர் விரட்டி அடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. குமரி மாவட்டம் நாகர்கோவில் கோட்டாறு ரகமத் கார்டனை சேர்ந்தவர் சலீம் (58). தொழிலதிபர். இவரது மகன் மஸ்கட்டில் இன்ஜினியராக பணிபுரிந்து வருகிறார். சலீம் கடந்த வாரம் அங்கு குடும்பத்துடன் சென்றிருந்தார். இவரது வீட்டில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தி உள்ளார். இதன் இணைப்புகளை சலீம் தனது செல்போன் மூலமும், லேப்டாப் மூலமும் பார்க்கும் வசதியும் செய்து இருக்கிறார்.
நேற்று முன்தினம் இரவு மஸ்கட்டில் உள்ள மகன் வீட்டில் இருந்தவாறு, தனது வீட்டில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமரா காட்சிகளை செல்போனில் பார்த்துக் கொண்டிருந்தார். திடீரென நள்ளிரவு 11.45 மணியளவில் மர்ம நபர்கள் இரண்டு பேர் தனது வீட்டுக்குள் நுழைவதை கண்டு அதிர்ச்சியடைந்தார். கொள்ளையர்கள் இருவரும் கையுறை அணிந்து இருந்தனர். அவர்களுக்கு 22லிருந்து 25 வயதுக்குள் இருக்கும். ஒவ்வொரு அறையாக சென்று கம்பி மூலம் கதவை உடைத்துள்ளனர். இந்த காட்சியை பார்த்த சலீம் உடனடியாக பக்கத்து வீட்டில் உள்ளவரை தொடர்பு கொண்டு தனது வீட்டுக்குள் 2 கொள்ளையர்கள் புகுந்த தகவலை கூறினார்.
உடனடியாக அவர்கள் வெளியே வந்து சலீம் வீட்டு முன்பு நின்று திருடன், திருடன் என கூச்சலிட்டனர். புத்தாண்டு கொண்டாட்டத்திற்காக அக்கம் பக்கத்தினரும் கண்விழித்து இருந்தனர். அவர்களும் வெளியே வந்து சத்தமிட்டனர். இதனால் கொள்ளையர்கள் உஷாராகி வீட்டின் பின்பக்கம் வழியாக சுவர் ஏறி குதித்து தப்பினர். கொள்ளையர்கள் கையில் ஆயுதம் இருக்குமோ என்ற அச்சத்தில் யாரும் அருகில் செல்லவில்லை.
தகவலறிந்து கோட்டார் போலீசார் வந்து விசாரணை மேற்கொண்டனர். வெளிநாட்டில் இருந்தவாறு கண்காணிப்பு கேமராவை சரியான நேரத்தில் சலீம் ஆய்வு செய்ததன் மூலம் கொள்ளையரை விரட்டியதால் வீட்டிலிருந்த பணம், நகைகள் தப்பியது. இதை தொடர்ந்து வெளிநாட்டில் இருந்து ஆன்லைன் மூலம் சலீம் கோட்டாறு போலீசில் புகார் அளித்தார். சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் கொள்ளையரை பிடிக்க 2 தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.
The post நாகர்கோவிலில் உள்ள வீட்டில் புகுந்த கொள்ளையரை வெளிநாட்டில் இருந்தபடி விரட்டிய தொழிலதிபர்: செல்போனில் கேமரா காட்சியை பார்த்து நடவடிக்கை appeared first on Dinakaran.