தஞ்சாவூர், ஜன. 1: தஞ்சை மாவட்டம் முழுவதும் புத்தாண்டையொட்டி 1500-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர். நாடு முழுவதும் இன்று புத்தாண்டு விழா கோலாகலமாக நள்ளிரவில் கேக் வெட்டி, பட்டாசு வெடித்து உற்சாகமாக மக்கள் வரவேற்றனர். மேலும், நட்சத்திர விடுதிகள், ஓட்டல்கள், விடுதிகள் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் நிகழ்ச்சிகள் நடைபெறும். இருப்பினும் சிலர் மதுபோதையில் மோட்டார் சைக்கிளை வேகமாக தாறுமாறாக ஓட்டிவந்து விபத்தில் சிக்கும் சம்பவமும் கடந்த காலங்களில் ஆங்காங்கே நடந்து வருகின்றன.
இதையொட்டி, தஞ்சை மாவட்டத்தில் ஆங்கில புத்தாண்டை விபத்தில்லாமல் அமைதியாகவும், பொதுமக்களுக்கு இடையூறு இல்லாமலும் கொண்டாட மாவட்ட போலீஸ் துறை சார்பில் பல்வேறு முன் எச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. மாவட்ட முழுவதும் கோவில்கள், தேவாலயங்கள், மசூதிகள், தியேட்டர், ஓட்டல், பூங்கா, பஸ், ரெயில் நிலையங்கள் மற்றும் முக்கிய இடங்கள், சுற்றுலா தலங்களில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளன. சில போலீசார் மப்டியில் நின்றும் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
மாவட்டத்தில் சுமார் 1500க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர். தஞ்சையில் முக்கிய சாலைகள் மட்டுமில்லாது அனைத்து சாலைகளிலும் போலீசார் வாகன சோதனை செய்ய உள்ளனர். குறிப்பாக நள்ளிரவில் வாகன சோதனை தீவிரமாக இருக்கும். ஏனென்றால் சிலர் குடித்து விட்டு வேகமாக மோட்டார் சைக்கிளில் வருவர். அப்படி யாராவது வந்தால் கடும் நடவடிக்கை எடுக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
மேலும் மோட்டார் சைக்கிள், கார் ரேசில் ஈடுபடுவதை தடுக்கவும் புறவழிச்சாலைகளில் சோதனை குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது.அந்த குழுவினர் அனைத்து முக்கிய சாலைகளையும் கண்காணிப்பர். ஓட்டல்கள், லாட்ஜ்களில் அறை எடுத்து தங்குவோரின் விவரங்களை முழுமையாக சரியான முறையில் பெற வேண்டும் என்று அந்தந்த உரிமையாளர்களுக்கு போலீசார் அறிவுறுத்தி உள்ளனர். சந்தேகப்படும்படி யாராவது அறை புக் செய்ய வந்தால் உடனடியாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என்றும் கூறி உள்ளனர்.
மேலும், தெருக்களில் சந்தேக ஆட்கள் நடமாட்டம் இருந்தாலும் உடனடியாக பொதுமக்கள் தகவல் தெரிவிக்க வேண்டும் என்று கேட்டு கொண்டனர். அசம்பாவித சம்பவங்கள் ஏதும் நடைபெறாமல் தடுக்க சாலைகள் மற்றும் முக்கிய இடங்களில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமரா மூலமும் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். ஆங்கில புத்தாண்டை யொட்டி தஞ்சை மாவட்டம் முழுவதும் முக்கிய இடங்களில் ரகசியமாக போலீசார் கண்காணித்து வருகின்றனர். இதேபோல் தஞ்சை பெரிய கோவில் ரயில் நிலையம் மக்கள் அதிகம் கூடும் இடங்களில் போலீசார் கண்காணித்து வருகின்றனர்.
The post எம்பி., எம்எல்ஏ., பங்கேற்பு; புத்தாண்டு கொண்டாட்டத்தையொட்டி தஞ்சை மாவட்டத்தில் 1,500 போலீசார் முக்கிய இடங்களில் கண்காணிப்பு appeared first on Dinakaran.