மாரத்தான் ஓட்டம் காரணமாக மெரினா காமராஜர் சாலையில் நாளை போக்குவரத்து மாற்றம்

சென்னை, ஜன.4: சென்னை போக்குவரத்து காவல்துறை வெளியிட்ட அறிக்கை: சென்னை ரன்னர்ஸ் சார்பில் மாரத்தான் ஓட்டம் நேப்பியர் பாலத்திலிருந்து இந்திய கடல்சார் பல்கலைக்கழகம் வரை 42.195 கி.மீ, இ.சி.ஆர், நேப்பியர் பாலத்தில் இருந்து இந்திய கடல்சார் பல்கலைக்கழகம் வரை 32.186 கி.மீ, எலியட்ஸ் கடற்கரையிலிருந்து இந்திய கடல்சார் பல்கலைக்கழகம் வரை 21.097 கி.மீ, மற்றும் நேப்பியர் பாலத்திலிருந்து சிவானந்தா சாலை வரை 10 கி.மீ வரை நாளை காலை 4 மணி முதல் நடைபெற உள்ளது. இதனால், அதிகாலை 3 மணி முதல் காலை 8 மணி வரை போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளன. அதன்படி, காமராஜர் சாலையில் போர் நினைவு சின்னத்திலிருந்து காந்தி சிலை வரை இருபுறமும் வாகனங்கள் அனுமதிக்கப்பட மாட்டாது. அடையாறு மார்க்கத்தில் இருந்து வரும் அனைத்து வாகனங்களும் திரு.வி.க. பாலம், டாக்டர் டி.ஜி.எஸ்.தினகரன் சாலை, சாந்தோம் நெடுஞ்சாலை, காமராஜர் சாலை மற்றும் காந்தி சிலை வரை வழக்கம் போல் எந்தவித மாற்றமும் இல்லாமல் செல்லலாம்.

* போர் நினைவிடத்தில் இருந்து திரு.வி.க. பாலம் வரை வாகனங்கள் அனுமதிக்கப்பட மாட்டாது. மேலும் வாகனங்கள் கொடி மரச் சாலை வழியாக திருப்பி விடப்பட்டு, வாலாஜா பாயின்ட் அண்ணாசாலை வழியாக தங்களது இலக்கை சென்றடையலாம்.
* ஆர்.கே.சாலையில் இருந்து காந்தி சிலை நோக்கி வரும் வாகனங்கள் வி.எம்.தெரு சந்திப்பில் திருப்பி விடப்படும். அவ்வாகனங்கள் ராயப்பேட்டை நெடுஞ்சாலை, லஸ் கார்னர், ஆர்.கே.மடம் சாலை வழியாக தங்களது இலக்கை சென்றடையலாம்.
* எல்.பி சாலை X எஸ்.பி சாலை சந்திப்பிலிருந்து வரும் வாகனங்கள் பெசன்ட் அவென்யூ சாலையை நோக்கி அனுமதிக்கப்பட மாட்டது. அவ்வாகனங்கள் லிஙி சாலை, சாஸ்திரி நகர் வழியாக திருவான்மியூர் சிக்னல் வழியாகத் தங்களது இலக்கை சென்றடையலாம்.
* காந்தி மண்டபத்தில் இருந்து வரும் வாகனங்கள் ராஜிவ்காந்தி சாலை செல்ல அனுமதிக்கப்பட மாட்டாது. அவ்வாகனங்கள் லிஙி சாலை, சாஸ்திரி நகர், திருவான்மியூர் சிக்னல் வழியாக இலக்கை சென்றடையலாம்.
* பெசன்ட் நகர் 7வது அவென்யூவில் இருந்து வரும் வாகனங்கள் எலியட்ஸ் கடற்கரை நோக்கி அனுமதிக்கப்படாமல், எம்ஜி சாலையை நோக்கி திருப்பி விடப்படும். எம்டிசி பேருந்துகள் மட்டும் பெசன்ட் நகர் டெப்போவிற்கு அனுமதிக்கப்படும். பெசன்ட் அவென்யூ, எம்எல் பார்க் நோக்கி அனுமதிக்கப்படமாட்டாது.

சிறப்பு மெட்ரோ ரயில் சேவை
சென்னையில் நாளை மாரத்தான் ஓட்டம் நடைபெறுவதையொட்டி நாளை அதிகாலை 3 மணி முதல் 5 மணி வரை 15 நிமிட இடைவெளியில் ரயில்கள் இயக்கப்படும். அதன் பிறகு ஞாயிற்றுக்கிழமை நேர அட்டவணையின்படி மெட்ரோ ரயில் சேவைகள் இயக்கப்படும். மாரத்தான் பங்கேற்பாளர்கள் ஸ்பான்சர் செய்யப்பட்ட மராத்தான் க்யூஆர் குறியீடு பதியப்பட்ட சிறப்பு பயணசீட்டை பயன்படுத்தி நாளை மட்டும் தானியங்கி நுழைவு இயந்திரத்தில் ஸ்கேன் செய்து மெட்ரோவில் பயணிக்கலாம். வாகன நிறுத்துமிடத்தில் இந்த க்யூஆர் குறியீட்டை பயன்படுத்தி பங்கேற்பாளர்களுக்கு அன்று மட்டும் தங்களது வாகனங்களை இலவசமாக நிறுத்திக்கொள்ளலாம் என மெட்ரோ நிர்வாகம் தெரிவித்துள்ளது.

The post மாரத்தான் ஓட்டம் காரணமாக மெரினா காமராஜர் சாலையில் நாளை போக்குவரத்து மாற்றம் appeared first on Dinakaran.

Related Stories: