தாய்லாந்தில் இருந்து சென்னைக்கு கடத்தி வந்த ₹3.5 கோடி மதிப்புள்ள உயர் ரக கஞ்சா பறிமுதல்: சுங்க அதிகாரிகள் அதிரடி

மீனம்பாக்கம், ஜன.4: தாய்லாந்து நாட்டில் இருந்து சென்னைக்கு விமானத்தில் கடத்தி வரப்பட்ட ₹3.5 கோடி மதிப்புள்ள உயர் ரக ஹைட்ரோ போனிக் கஞ்சாவை சுங்க அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். மேலும், சென்னையை சேர்ந்த கடத்தல் பயணியை கைது செய்து விசாரித்து வருகின்றனர். தாய்லாந்து தலைநகர் பாங்காக்கில் இருந்து ஏர் ஏசியா பயணிகள் விமானம் 1ம் தேதி நள்ளிரவு, சென்னை சர்வதேச விமான நிலையத்திற்கு வந்தது. அதில் வந்த பயணிகளை சுங்க அதிகாரிகள் சோதனை நடத்தினர். அப்போது சென்னையைச் சேர்ந்த சுமார் 35 வயது ஆண் பயணி ஒருவர், சுற்றுலாப் பயணியாக தாய்லாந்து நாட்டிற்கு சென்று விட்டு விமானத்தில் திரும்பி வந்தார்.

அவரது நடவடிக்கைகள் சுங்க அதிகாரிகளுக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியது. எனவே அந்தப பயணியை நிறுத்தி விசாரித்தனர். அப்போது அவர் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்தார். இதையடுத்து அவருடைய உடைமைகளை சோதனை செய்தனர். அவரது உடைமைகளுக்குள் மறைத்து வைத்திருந்த 7 பார்சல்களை பிரித்துப் பார்த்தனர். அதனுள் பதப்படுத்தப்பட்ட ஹைட்ரோபோனிக் உயர்ரக கஞ்சா இருந்ததை கண்டுபிடித்தனர். அந்த பார்சல்களில் சுமார் 3.5 கிலோ ஹைட்ரோபோனிக் கஞ்சா இருந்தது. அதன் சர்வதேச மதிப்பு ₹3.5 கோடி. பிறகு சுங்க அதிகாரிகள், அந்த கடத்தல் பயணியை கைது செய்து கஞ்சாவையும் பறிமுதல் செய்தனர்.

சென்னை விமான நிலையத்தில் ஏற்கனவே இரு தினங்களுக்கு முன்பு, தாய்லாந்து நாட்டில் இருந்து கடத்திக் கொண்டு வரப்பட்ட ₹6 கோடி மதிப்புடைய 6 கிலோ ஹைட்ரோபோனிக் உயர் ரக கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டு, வட மாநில இளம்பெண் கைது செய்யப்பட்டிருந்த நிலையில், தற்போது மீண்டும் தாய்லாந்து நாட்டிலிருந்து கடத்தி வரப்பட்ட ₹3.5 கோடி மதிப்புடைய 3.5 கிலோ ஹைட்ரோபோனிக் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டு, சென்னையை சேர்ந்த ஆண் பயணி கைது செய்யப்பட்டுள்ளார். சென்னை விமான நிலையத்தில் அடுத்தடுத்து 2 நாட்களில் ₹9.5 கோடி மதிப்புடைய, 9.5 கிலோ ஹைட்ரோபோனிக் உயரக கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டு, வட மாநில இளம்பெண் உள்பட 2 போதை கடத்தல் பயணிகள் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

The post தாய்லாந்தில் இருந்து சென்னைக்கு கடத்தி வந்த ₹3.5 கோடி மதிப்புள்ள உயர் ரக கஞ்சா பறிமுதல்: சுங்க அதிகாரிகள் அதிரடி appeared first on Dinakaran.

Related Stories: